திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

கடவுளின் தீர்ப்பு ஏழைகளுக்கே சாதகமாக அமையும்!

செல்வத்தைக் குவிப்பதற்காக சமூக நெறிமுறைகளை உடைத்தெறிந்து, எந்த விலை கொடுத்தும் நமக்கென்று ஒரு பெயரை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று உலகத்தின் மனநிலை கோருகிறது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

சின்னஞ்சிறிய சகோதரர் சகோதரிகளுடன் தனது ஒன்றிப்பை வெளிப்படுத்திய இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, எல்லாச் சூழ்நிலைகளிலும் நாமும் ஏழைகளின் நண்பர்களாக இருக்க அழைக்கப்படுகின்றோம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வரும் நவம்பர் மாதம் 12-ஆம் தேதி, அதாவது ஆண்டின் பொதுக்காலம் 33-ஆம் ஞாயிறன்று, எட்டாவது உலக வறியோர் தினம் சிறப்பிக்கப்படுவதை ஒட்டி, ஜூன் 13, இவ்வியாழன்று வழங்கியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.

'ஏழைகளின் செபம் இறைவனை நோக்கி எழுகிறது' (காண்க. சீரா 21:5) என்ற இறைவார்த்தையை எட்டாவது உலக வறியோர் தினம் மையக்கருத்தாகக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, சீராக் நூல் ஆசிரியர் எடுத்துக்காட்டும் இந்த இறைவார்த்தை மிகவும் பொருத்தமுடையதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

உண்மையில், நம்முடைய இறைவேண்டல் கடவுளின் பிரசன்னத்தை அடையும் என்ற உறுதியை நமது கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டுள்ளது என்று உரைத்துள்ள திருத்தந்தை, இது வெறும் இறைவேண்டல் அல்ல, மாறாக, ஏழைகளின் இறைவேண்டல் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாம் நாள்தோறும் சந்திக்கும் ஏழைகளின் முகங்களிலும் கதைகளிலும் இந்த இறைவார்த்தையைப் படித்துச் சிந்திப்போம் என்று கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதனால் இறைவேண்டல் அவர்களுடன் தொடர்பு கொள்ளும் பாதையாக மாறும் என்றும், அவர்களின் துன்பங்களில் பங்குபெறவும் முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஏழைகளை அறிந்துள்ள இறைத்தந்தை

கடவுள் தனது குழந்தைகளின் துன்ப துயரங்களை அறிந்திருக்கிறார், ஏனென்றால் அவர் நம்மீது கவனமும் அக்கறையும் கொண்ட ஒரு தந்தை என்றும், ஒரு தந்தையாக, தேவையில் இருப்போராகிய ஏழைகள், ஒதுக்கப்பட்டவர்கள், துன்பப்படுபவர்கள் மற்றும் மறக்கப்பட்டவர்களை மிகவும் நன்றாகக் கவனித்துக்கொள்கிறார் என்றும் விளக்கியுள்ளார் திருத்தந்தை.

மேலும் அவரது இதயத்திலிருந்து யாரும் விலக்கப்படவில்லை, ஏனென்றால் அவருடைய பார்வையில், நாம் அனைவரும் ஏழைகள் மற்றும் தேவையில் இருப்பவர்கள் என்று கூறியுள்ள திருத்தந்தை,  நாம் அனைவரும் அவரது உதவியை எதிர்நோக்கி இருப்பவர்கள். ஏனென்றால் கடவுள் இல்லாமல் நாம் ஒன்றுமில்லை. கடவுள் நமக்கு உயிரளிக்காமல் இருந்திருந்தால் நமக்கு உயிர் கூட இருக்காது என்றும் எடுத்துரைத்துள்ளார்.

ஏழைகளை ஒடுக்குவதால் மகிழ்ச்சி கிடைக்காது

செல்வத்தைக் குவிப்பதற்காக சமூக நெறிமுறைகளை உடைத்தெறிந்து, எந்த விலை கொடுத்தும் நமக்கென்று ஒரு பெயரை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று உலகத்தின் மனநிலை கோருகிறது என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை, இது எவ்வளவு சோகமான பொய்த்தோற்றம் என்றும், மற்றவர்களின் உரிமைகளையும் மனித மாண்பையும் மிதிப்பதன் வழியாக மகிழ்ச்சியைப் பெற முடியாது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

போர்களினால் ஏற்படும் வன்முறைகள், ஆண்களுக்கும் பெண்களுக்கும் முன் தங்களை வலிமையானவர்கள் என்று கருதுபவர்களின் ஆணவத்தை தெளிவாகக் காட்டுகிறது, ஆனால் அவர்கள் கடவுளின் பார்வையில் ஏழைகள் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட தவறான கொள்கைகளால் எண்ணிலடங்கா மக்கள் வறுமையில் வாடுகின்றனர் என்றும், எத்தனை அப்பாவிகள் இந்தத் தவறான கொள்கைகளுக்காகப் பலியாக்கப்படுகின்றனர் என்றும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ள திருத்தந்தை, ஆனாலும் இந்த எதார்த்தத்திற்கு நாம் பதிலளிக்காமல் வெறுமனே வேடிக்கை பார்க்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இப்படிப்பட்ட சூழலில், தனிப்பட்ட ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஒவ்வொரு சமூகமும் ஏழைகளின் விடுதலை மற்றும் மேம்பாட்டிற்காக கடவுளின் கருவியாக இருக்க அழைக்கப்படுகிறார்கள் என்றும், மேலும் இதன்வழியாக அவர்களை முழுமையாகச் சமூகத்தின் ஒரு அங்கமாக மாற்றுவதற்கு நாம் உதவிட முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் திருத்தந்தை.

ஏழைகளுக்கு ஆன்மிக கவனிப்புத் தேவை

மேலும், ஏழைகள் சந்திக்கும் ஒரு மோசமான பாகுபாடு ஆன்மிக கவனிப்பு இல்லாதது என்றும், ஏழைகளில் பெரும்பாலானோர் இறைநம்பிக்கை பெறுவதற்கு ஒரு சிறப்புத் திறந்த தன்மையைக் கொண்டுள்ளனர், அவர்களுக்குக் கடவுள் தேவை என்றும் தெரிவித்துள்ள திருத்தந்தை, கடவுளுடைய நட்பையும், ஆசீரையும், வார்த்தைகளையும், அருளடையாளங்களின் கொண்டாட்டத்தையும், நம்பிக்கையில் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சிக்கான பயணத்தையும் அவர்களுக்கு வழங்குவதில் நாம் தவறக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏழைகளுக்கான நமது விருப்பத்தேர்வு முக்கியமாக சலுகை மற்றும் முன்னுரிமை மதப் பராமரிப்பாக மாறவேண்டும் என்றும் கோடிட்டுக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

நமது உள்மனம் அதன் சொந்த நலன்களிலும் அக்கறைகளிலும் சிக்கிக் கொள்ளும்போதெல்லாம், மற்றவர்களுக்கு அதாவது ஏழைகளுக்கு இடமளிக்க முடியாது என்றும், அந்நிலையில், கடவுளின் குரல் இனி கேட்கப்படாது, அவருடைய அன்பின் அமைதியான மகிழ்ச்சி இனி உணரப்படாது என்று எண்ணி, நல்லதைச் செய்ய வேண்டும் என்ற ஆசை நம்மிடையே மறைந்துவிடும் என்றும் எச்சரித்துள்ளார் திருத்தந்தை.

உலக வறியோர் தினம், மேய்ப்புக்கான ஒரு வாய்ப்பு

உலக வறியோர் தினம் இப்போது ஒவ்வொரு தலத்திருஅவைச் சமூகத்திலும் ஒரு அங்கமாகிவிட்டது. இது மேய்ப்புப்பணிக்கான ஒரு வாய்ப்பாகும், ஏனென்றால்  ஏழைகளின் செபத்தைக் கேட்பதற்கும், அவர்களின் இருப்பு மற்றும் தேவைகளைப் பற்றி அறிந்துகொள்வதற்கும் இது ஒவ்வொரு நம்பிக்கையாளருக்கும் சவால் விடுக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

ஏழைகளுக்குத் திட்டவட்டமாக உதவும் முன்முயற்சிகளை செயல்படுத்துவதற்கும், மிகவும் தேவையில் இருப்போருக்காகத் தங்களை ஆர்வத்துடன் அர்ப்பணிக்கும் பல தன்னார்வலர்களை அங்கீகரித்து ஆதரவளிப்பதற்கும் இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

அப்படியானால், இறைவேண்டல் என்பது உண்மையான பிறரன்புப் பணியின் வெளிப்பாடாக அமைகிறது என்றும், அது ஏழைகளுடனான சந்திப்பு மற்றும்  உடனிருப்பை வெளிப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இறைவேண்டல் ஓர் உறுதியான செயலாக மாறவில்லை என்றால் அது வீண் என்றும், உண்மையில் செயலற்ற விசுவாசம் செத்த விசுவாசத்திற்குச் சமம் என்றும் உறுதிப்படக் கூறியுளளார் திருத்தந்தை.

“அன்றாடச் செபங்கள் இல்லாமல் நாம் விசுவாசத்தில் வாழும்போது, நமது செயல்கள் வெறுமையாக இருப்பதுடன், அவை தங்கள் ஆன்மாவின் ஆழத்தை இழக்கின்றன என்றும், மேலும் அவை வெறும் செயல்பாடாக மட்டுமே மாறிவிடுகின்றன” என்றும் கூறிய மறைந்த திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களின் சிந்தனைகளை எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் இந்தச் சோதனையைத் தவிர்த்து, உயிரைக் கொடுப்பவரான தூய ஆவியாரிடமிருந்து வரும் வலிமை மற்றும் விடாமுயற்சியுடன் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

"நான் இறைவேண்டல் செய்யும் ஒரு ஏழை சகோதரி மட்டுமே. இறைவேண்டல் செய்வதன் வழியாக, இயேசு தன்னுடைய அன்பை என் இதயத்தில் வைக்கிறார், அதை வழியில் நான் சந்திக்கும் அனைத்து ஏழைகளுக்கும் கொடுக்க செல்கிறேன்.  நீங்களும் இறைவேண்டல் செய்யுங்கள்! அப்போது உங்களுக்கு அருகில் இருக்கும் ஏழைகளை நீங்கள் கவனிப்பீர்கள்" இன்று கூறிய கல்கத்தா நகர் புனித அன்னை தெரேசாவின் அருள்மொழிகளையும் தனது உரையில் எடுத்துக்காட்டியுள்ளர் திருத்தந்தை.

புனித ஆண்டை நோக்கி நாம் பயணிக்கும் இவ்வேளையில், ​​ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான உறுதியான இலக்குகளை நிர்ணயித்து, நம்பிக்கையின் திருப்பயணிகளாக மாறுமாறு அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ள திருத்தந்தை, ஏழைகளிடம் நிற்றல்,  அவர்கள் அருகில் செல்லுதல், அவர்கள்மீது கொஞ்சம் கவனம் செலுத்துதல், அவர்களை நோக்கிப் புன்னகைத்தல், அவர்களை அரவணைத்தல், அவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளை வழங்குதல் ஆகிய நமது செயல்பாடுகளை செய்ய நாம் மறக்க வேண்டாம் என்றும் விண்ணப்பித்துள்ளார்.

Banneux-இல் காட்சியளித்தபோது, "நான் ஏழைகளின் கன்னி" என்ற மறக்க முடியாத ஒரு செய்தியை நமக்கு விட்டுச்சென்ற கடவுளின் தாயாம் புனித அன்னை மரியா. இந்த நமது பயணத்தில் நம்மை நிலைத்து நிற்க செய்வாராக என்று கூறி தனது உலக வறியோர் தின செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 June 2024, 15:38