இறைவார்த்தை சபையினரைச் சந்திக்கும் திருத்தந்தை இறைவார்த்தை சபையினரைச் சந்திக்கும் திருத்தந்தை   (Vatican Media)

உங்கள் பணிவாழ்வில் ஒன்றிணைந்த பயணத்தை வளர்ச்சியடையச் செய்யுங்கள்

தூய்மைமிகு மூவொரு கடவுளின் அன்பை அனுபவிப்பதும், தூய ஆவியாரின் ஒளிச்சுடரை உயிரோட்டமுள்ளதாக வைத்திருப்பதும், மறைதூதுப் பணியின் சீடர்களாகவும், துறவியராகவும் நமது வளர்ச்சிக்கு இன்றியமையாதது : திருத்தந்தை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உங்களின் ஒவ்வொரு துறவறக் குழுமமும் வளர்ந்து, ஒன்றிணைந்த பயணத்தின் (synodal) பாணியை அனுபவிக்கட்டும் என்றும், இதன் வழியாக அதன் ஒவ்வொரு உறுப்பினரும் தனது குரல் கேட்கப்பட்டதாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் உணரட்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 28, இவ்வெள்ளியன்று, இறைவார்த்தை சபையினர் 170 பேரை, அவர்களின் பொதுப்பேரவையை முன்னிட்டு திருப்பீடத்தின் கிளமெந்தீனா அறையில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளுடைய வார்த்தை உருவாக்குகிறது, உயிர் கொடுக்கிறது, ஊக்கமளிக்கிறது, எழுச்சியூட்டுகிறது என்றும், அதுவே அது உங்கள் பணியின் மையப்புள்ளி என்றும் தெரிவித்தார்.

நற்செய்தி  கடவுளுடைய வார்த்தையுடன் நெருக்கத்தைக் கோருகிறது என்றும், நீங்கள் எப்போதும் உண்மையுள்ள சீடர்களாகவும், ஆக்கப்பூர்வமான மறைப்பணியாளர்களாகவும் பிறந்து மறுபிறப்பு எடுப்பதற்கான ஆதாரமாக விளங்குகிறது என்றும் கூறினார் திருத்தந்தை,

உண்மையுள்ள சீடர்கள்

திருமுழுக்குப் பெற்ற அனைவரும் திருத்தூதுப் பணியின் சீடர்களாக இருக்க அழைக்கப்படுகிறார்கள் என்றும், கடவுளின் அருளால் எப்போதும் இந்த அழைத்தலுக்குப் பிரமாணிக்கமாக இருப்பது நமது அர்ப்பணிப்பாகும் என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

பிரமாணிக்கமுள்ள சீடர்கள் நற்செய்தியின் மகிழ்ச்சியால் அங்கீகரிக்கப்படுகிறார்கள், அது அவர்களின் முகத்தை ஒளிரச் செய்கிறது, அவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழும் விதத்தில் இருந்து, அவர்கள் முதலில் பெற்ற அன்பை மற்றவர்களுக்கு வழங்குகிறார்கள், ஒவ்வொரு நாளும் புதிதாகப் பெறுகிறார்கள் என்றும் விளக்கினார் திருத்தந்தை.

மேலும் தூய்மைமிகு மூவொரு கடவுளின் அன்பை அனுபவிப்பதும், தூய ஆவியாரின் ஒளிச்சுடரை உயிரோட்டமுள்ளதாக வைத்திருப்பதும், திருத்தூதுப் பணியின் சீடர்களாகவும், துறவியராகவும் நமது வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்றும் குறிப்பிட்டார் திருத்தந்தை.

படைப்பாற்றல்மிக்க பணியாளர்கள்

படைப்பாற்றல் என்பது உங்களுக்குள் குடிகொண்டிருக்கும் கிறிஸ்துவின் வார்த்தையிலிருந்தும் ஆவியிலிருந்தும் வருகிறது என்று விளக்கிய திருத்தந்தை, இயேசுவே உங்களைத் தூய ஆவியாரின் வழியாக  அவருடைய பணியில் பங்குகொள்ளச் செய்கிறார் என்றும், அவரே நம் இதயங்களைத் தன்பதம் ஈர்க்கின்றார் என்றும் கூறினார்.

படைப்பாற்றல்மிக்க திருத்தூதுப் பணிக்கான நடவடிக்கைகள், கடவுளுடைய வார்த்தையின் மீதான அன்பினால் பிறக்கின்றன என்றும், படைப்பாற்றல் என்பது ஆழ்நிலை அருள்சிந்தனை மற்றும் தேர்ந்துதெளிதலில் இருந்து பிறக்கிறது என்றும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, நமது தனிப்பட்ட முன்முயற்சிகள் நல்லவை என்றாலும், குழுமத்தின் ஆக்கப்பூர்வமான செயல்பாடு திருஅவையின் ஒன்றிப்பிற்கும் வலிமைக்கும் சிறந்தது என்றும் கூறினார்.

இறுதியாக, அமைதியை ஏற்படுத்துபவர்களாக இருக்க வேண்டியதன் அவசியம், ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் நம்பிக்கையின் இறைவாக்கினார்களாக இருக்கவேண்டியதன் தேவை மற்றும் ஒன்றிணைந்த பயணத்தின் (synodality) திருத்தூதுப் பணியாளர்களாக விளங்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விரிவாக அவர்களுக்கு விளக்கிக் கூறிய திருத்தந்தை,  அவர்களது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் ஒன்றிணைந்த பயணத்தை வளர்ச்சியடைய செய்ய அவர்களைத் தான் ஊக்குவிப்பதாகவும் கூறி தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 June 2024, 15:52