இயேசுவின் இதயம் நம்மீதான அன்பால் என்றென்றும் பற்றியெரிகிறது
ஜெயந்த் ராயன், வத்திக்கான்
இயேசுவின் தூய இதய குருக்கள் சபையின் புதிய நிர்வாக உறுப்பினர்களை இன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்பிக்கையுடனும், தாராள மனதுடனும், விடாமுயற்சியுடனும் பணிசெய்ய வேண்டுமென அழைப்புவிடுத்தார்.
25வது பொது ஆட்சிப் பேரவையில், இயேசுவின் திரு இருதய குருக்கள் சபையின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அருள்பணியாளர் Carlos Luis Suárez Codorniú, மற்றும் பொதுப் பேரவையில் பங்கேற்றவர்கள் மத்தியில் உரையாற்றிய திருத்தந்தை அவர்கள், தந்தை கடவுளோடும், பிறரோடும் கொள்ளும் அன்பினால், வாழ்க்கையின் முதன்மையும் மையமுமான கிறிஸ்துவின் அன்பில் ஒன்றித்திருக்க முயலுங்கள் என்று வணக்கத்துக்குரிய லியோன் குஸ்தாவ் தேஹோன் அவர்களின் வார்த்தைகளை நினைவுபடுத்தினார்.
ஒற்றுமையைக் குறித்து அவர்களிடம் உரையாற்றிய திருத்தந்தை அவர்கள், அதைத் தனிப்பட்டவிதத்தில் அடையமுடியாது என்றும் ஒற்றுமையை அடைவதற்கு கடவுளின் உதவி தேவை; அதை அடைய நாம் நமது பங்களிப்பைத் தர வேண்டும் என்றும் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும், கடவுள்தான் நம்மை ஒன்றிணைக்கிறார், நம்மை ஊக்குவிக்கிறார் என்றும், நாம் அவருடன் எவ்வளவு ஒன்றித்து இருக்கிறோமோ அந்த அளவிற்கு நாம் பிறரோடும் ஒற்றுமையாக இருக்கமுடியும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உங்கள் துறவு வாழ்வையும் பணியையும் கிறிஸ்துவின் இதயத்தோடு ஒன்றிணைத்து தந்தை கடவுளுக்கு அர்ப்பணமாக்குங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
உறவு ஒன்றிப்பில் வளர விரும்பினால், நீங்கள் அனைவரும் உங்கள் பொது அமர்வின் முடிவுகளில், அருளடையாள வாழ்க்கைக்கு முதன்மை அளித்து, இறைவனின் வார்த்தைகளுக்குச் செவிமடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை அவர்கள், தனிப்பட்ட மற்றும் குழும செபத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென்றும், நற்கருணைச் சந்திப்பின் வழியாக தனிப்பட்ட மற்றும் சகோதரத்துவ வளர்ச்சிக்கு வித்திடவும், திருச்சபைக்குப் பணியாற்றும் ஆர்வத்தைப் பெற்றிடவும் முடியும் என்றார்.
மேலும், துறவற இல்லங்களில் உள்ள சிற்றாலயங்கள், உங்கள் ஒவ்வொருவராலும் அதிகம் சந்திக்கப்படுகின்ற இடமாகவும், தாழ்மையான மற்றும் ஏற்றுக்கொள்ளும் மனதுடன் செய்யப்படும் தனிமை செபத்தின் இடமாகவும் இருக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை அவர்கள், கிறிஸ்துவோடு கொண்டிருக்கும் உறவு-ஒன்றிப்பு உங்கள் பணியின் மீது உங்களுக்குள்ள பற்றார்வத்தை தக்கவைத்துக்கொள்ள உதவும் என்றும் கூறினார்.
இயேசுவின் இதயம் நம்மீதான அன்பால் என்றென்றும் பற்றியெரிகிறது என்றும், குறிப்பாக கடினமான காலங்களில் நமது அமைதி, நல்லிணக்கம், ஆற்றல், மற்றும் ஒற்றுமையை மீட்டெடுப்பதில் கிறிஸ்துவின் இதயத்துடிப்பு நம்முடன் இணையலாம் என்றும் கூறிய திருத்தந்தை அவர்கள், இது நிகழ வேண்டுமானால், நாம் கிறிஸ்துவுக்கு நம் இதயத்தில் இடமளிக்க வேண்டுமென்றும், உண்மையுடனும் விடாமுயற்சியுடனும், வீணான வார்த்தைகளையும், எண்ணங்களையும் குறைத்து கிறிஸ்துவின் முன்னிலையில் நம்மை அர்ப்பணமாக வேண்டுமென்றும் கூறினார்.
இறை வேண்டல் இல்லாமல், நமது துறவு வாழ்க்கையில் மற்றும் திருத்தூதுப் பணிகளில் நாம் முன்னெற்றம் காணவோ, உறுதியாக நிற்கவோ முடியாது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், இறைவேண்டல் இல்லாமல் எதுவும் நிறைவேறாது என்றும் கூறினார்.
பல்வேறு கடினமான சவால்கள் நிறைந்துள்ள இக்காலக்கட்டத்தில் எவ்வாறு நாம் மறைத்தூதுவர்களாகப் பணியாற்ற முடியும் என்றும், இதயம் இழந்ததாகத் தோற்றமளிக்கும் இச்சமூகத்துக்கு எவ்வாறு அர்த்தம் கொடுக்கமுடியும் என்றும் கேள்வியெழுப்பிய திருத்தந்தை அவர்கள், கிறிஸ்துவின் கசையடிகள், முட்கள், ஆணிகள் அனைத்தும் ''அன்பு'' என்ற வார்த்தைக்குள் அடங்கும் என்றும், இந்த உன்னதமான வார்த்தையின் வெளிப்புற தோற்றத்தைக் கண்டு வியந்து போற்றுவதோடு நிறைவு அடைந்துவிடாமல், நாம் இதயத்தை ஊடுருவிப் பார்க்கவேண்டுமென்றும், மனம் சோர்ந்துபோகாமல் துன்பத்தை ஏற்றுக்கொண்டு, தன்னைப் பிறருக்கு கையளிக்கும் அன்பைக் கொண்டிருந்தால் அதைவிட பெரிய அற்புதத்தைக் காணமுடியும் என்ற வணக்கத்துக்குரிய லியோன் குஸ்தாவ் தேஹோன் அவர்களின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தார்.
''இறைவனுக்காக நான் வாழ்ந்தேன், இறைவனுக்காக நான் இறக்கிறேன்; அவர்தான் என் எல்லாம், என் வாழ்க்கை, என் மரணம், என் என்றுமுள்ள நிலை'' என்ற வணக்கத்துக்குரிய லியோன் குஸ்தாவ் தேஹோனின் இறுதி வார்த்தைகளை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவைப்போல அன்பு என்ற வார்த்தையை நம் உடலில் பதிய அனுமதித்து ஒவ்வொரு சகோதரர் சகோதரிகளிடமும் மாறா பற்றுடனும், கிறிஸ்துவின் ஒற்றுமையுடனும், வழி தவறியவர்களுக்கு நம் அன்பையும் கண்ணீரையும் பகிர்ந்தளிக்க நாம் முன்வரவேண்டும் என்றார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்