புனித பூமியில் அமைதி நிலவ இறைவேண்டல் செய்வோம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
புனித பூமியில் அமைதி நிலவ வேண்டும் என்ற நோக்கத்தில் 2014ஆம் ஆண்டு இஸ்ராயேல் மற்றும் பாலஸ்தீனத் தலைவர்களுடன் இணைந்து இறைவேண்டல் செய்ததன் பத்தாமாண்டு நினைவாக, அமைதிக் குழுவை வத்திக்கான் தோட்டத்தில் ஜூன் 7, வெள்ளி மாலை சந்தித்தபோது உரை ஒன்று வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தன் அழைப்பை ஏற்று இஸ்ராயேல் அரசுத் தலைவர் Shimon Peres, பாலஸ்தீன அரசுத் தலைவர் Mahmoud Abbas ஆகியோரும், கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை பர்த்தலேமேயு, கிறிஸ்தவ, யூத, இஸ்லாம் தலைவர்களும் ஒன்றிணைந்து 2014 செப வழிபாட்டில் கலந்து கொண்டதை நினைவுகூர்ந்த திருத்தந்தை, இன்றும் புனித பூமியில் பிரிவினைப் போர் தொடர்ந்து கொண்டிருப்பது குறித்த கவலையை வெளியிட்டார்.
அமைதியான உலகை கட்டியெழுப்புவதற்கான நம் அர்ப்பணத்தை மேலும் வலியுறுத்திய திருத்தந்தை, புனித பூமியில் போர் முடிவுக்கு வரவேண்டும் என தான் ஒவ்வொரு நாளும் இறைவேண்டல் செய்துவருவதாகவும் தெரிவித்தார்.
காசாவில் ஆயுதங்கள் கைவிடப்பட்டு போர் நிறுத்தம் இடம்பெற வேண்டும், பிணையக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகள் சென்றடைய வழிவகைச் செய்யப்பட வேண்டும், போரில் வீடுகளை இழந்தோருக்கு தங்குமிடங்களை கட்டித் தருதல் போன்றவைகளையும் தன் உரையில் விண்ணப்பமாக விடுத்தார் திருத்தந்தை.
இஸ்ராயேலும் பாலஸ்தீனமும் பக்கத்து பக்கத்தில் அமைதியில் வாழ நம் ஒவ்வொருவரின் அர்ப்பணிப்புடன் கூடிய பணிகள் தேவைப்படுகின்றன என்பதையும் எடுத்துரைத்த திருத்தந்தை, அமைதிக்கான செபத்தை மறந்துவிட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.
Pope group lasting peace Palestine Israel prayer ten years ago
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்