இயேசு என்னும் வாழ்விடத்தை அடைய புனித கதவினைத் திறப்போம்!

இன்றைய மறையுரையில், திருத்தூதர்களான பேதுரு மற்றும் பவுலின் வாழ்வில் நிகழ்ந்த பாஸ்கா அனுபவங்களை யூபிலி விழாவின் புனித கதவுகளைத் திறக்கும் நிகழ்வுடன் ஒப்பிட்டும், நமது வாழ்வில் இது எப்படி நிகழ வேண்டும் என்றும் கூறியதுடன், நற்செய்தி அறிவிப்பில் நமக்குறிய கடமைகளையும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இறைவனை சந்திப்பதில், திருத்தூதர்களான பேதுருவும் பவுலும் ஓர் உண்மையான பஸ்காவை அனுபவித்தனர், அவர்கள் இருவருமே தங்களைப் பீடித்திருந்த அடிமைத்தளைகளிலிருந்து விடுதலை பெற்றனர் என்றும், ஒரு புதிய வாழ்க்கைக்கான கதவுகள் அவர்களுக்கு முன் திறக்கப்பட்டன என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 29, சனிக்கிழமை இன்று, திருத்தூதர்களான பேதுரு மற்றும் பவுல் பெருவிழாவை அன்னையாம் திருஅவை சிறப்பிக்கும் வேளை, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் நிகழ்ந்த திருப்பலியில் வழங்கிய மறையுரையில் இவ்வாறு தெரிவித்தார் திருத்தந்தை.

புனித பேதுரு வாழ்வில் பாஸ்கா அனுபவம்

யூபிலி ஆண்டு என்பது ஓர் அருளின் காலமாக இருக்கும்,  இதன் போது நாம் புனித கதவைத் திறப்போம் என்று உரைத்த திருத்தந்தை, இந்த நிகழ்வு வழியாக,  ஒவ்வொருவரும் இயேசுவாகிய அந்த உயிருள்ள வாழ்விடத்தின் வாசலை அடையவும், அவரில் நம் நம்பிக்கையை உறுதிப்படுத்தி, நம் மகிழ்ச்சியைப் புதுப்பிக்கும் கடவுளின் அன்பை அனுபவிக்கவும் வாய்ப்புப் பெறுகிறோம் என்றும் கூறினார்.

எகிப்தின் பார்வோனின் செயல்பாடுகளை ஏரோதின் நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டு பேசிய திருத்தந்தை, இஸ்ரயேல் மக்களுக்கு மீட்பு என்பது இரவில் நிகழந்ததுபோலவே புனித பேதுருவுக்கும் நிகழ்கிறது என்றும், அங்கே வானதூதர் வழியாக அம்மக்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டதுபோலவே இங்கே புனித பேதுருவுக்கும் கொடுக்கப்படுகிறது என்றும் எடுத்துக்காட்டினார் (காண்க. திப 12:8; விப 12:11). 

புனித பேதுரு விடுதலையான அந்த இரவில், சிறைச்சாலையின் கதவுகள் முதலில் அற்புதமாக திறக்கப்படுகின்றன என்று கூறிய திருத்தந்தை, கதவுகளைத் திறப்பவர் கடவுள், அவரே நம்மை விடுவித்து, நமக்கு முன் வழியைத் திறப்பவர் என்றும் உரைத்த திருத்தந்தை, நாம் நற்செய்தியில் கேட்டது போல, இயேசு விண்ணரசின் திறவுகோல்களை பேதுருவிடம் ஒப்படைத்தார், ஆனால் கதவுகளைத் திறப்பவர் இயேசு மட்டுமே என்பதை பேதுரு உணர்ந்திருந்தார் என்றும், இயேசு எப்போதும் நமக்கு முன் செல்கிறார் என்றும் விளக்கினார்.

புனித பவுல் வாழ்வில் பாஸ்கா அனுபவம்

திருத்தூதரான புனித பவுலடியார் வாழ்க்கைப் பயணமும் முதன்மையாக ஒரு பாஸ்கா அனுபவத்தைக் கொண்டது என்றும் கூறிய திருத்தந்தை, தமஸ்கு நகருக்குச் செல்லும் வழியில் உயிர்த்த ஆண்டவரைச் சந்திப்பதன் வழியாக அவருடைய வாழ்வு மாற்றமடைகிறது என்றும், பின்னர் சிலுவையில் தொங்கும் இயேசுவை ஆழ்நிலை அருள்சிந்தனை செய்ததன் வழியாக தனது பலவீனத்தை வெல்லும் இறை அருளைக் கண்டடைகிறார் என்றும் விவரித்தார்.

ஆண்டவரால் ஆட்கொள்ளப்பட்டு, அவருடன் சிலுவையில் அறையப்பட்ட புனித பவுல், "இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்" (காண்க கலா 2:20) என்ற பவுலின் வார்த்தைகளை எடுத்துக்கூறிய திருத்தந்தை, ஆயினும் இது ஒரு ஆறுதலான, உள்நோக்கிய இறைபற்றிற்கு வழிவகுக்காது; மாறாக, இறைவனுடனான சந்திப்புதான், பவுலின் வாழ்க்கையில் நற்செய்தி அறிவித்தலுக்கான பற்றியெரியும் ஆர்வத்தைத் தூண்டுகிறது என்றும் குறிப்பிட்டார்.

வாய்ப்புகளை வசமாக்கிக்கொள்வோம்

நற்செய்தி அறிவித்தலுக்கான பல்வேறு வாய்ப்புகளை இயேசு தனக்கு வழங்கியபோது, அவற்றை எல்லாம் தனக்கு முன் திறக்கப்பட்ட புனித கதவுகளாகவே கருதி நன்கு பயன்படுத்திக்கொண்டார் புனித பவுலடியார் என்று கூறிய திருத்தந்தை, "பெந்தக்கோஸ்து விழா வரை எபேசில் தங்கியிருப்பேன். அங்கு எதிரிகள் பலர் இருந்தாலும் பயனுள்ள முறையில் எபேசில் பணியாற்ற நல்லதொரு வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது" (காண்க 16:9) என்றும், "நாங்கள் நற்செய்தியை அறிவிப்பதற்கான வாய்ப்பைக் கடவுள் உருவாக்கித் தருமாறு அவரிடம் எங்களுக்காகவும் வேண்டுங்கள்" (காண்க. கொலோ 4:3) என்றும் கூறிய பவுலடியாரின் வார்த்தைகளை இதற்கு ஆதாரமாகக் கோடிட்டுக் காட்டினார்.

திருத்தூதர்களான பேதுரு மற்றும் பவுல் இருவரும் வாய்ப்பு என்னும் இந்த அருளை அனுபவித்தனர் என்றும்,  அவர்கள் தங்கள் உள்மனச் சிறைகளின் கதவுகளைத் திறந்த கடவுளின் பணியை நேரடியாகக் கண்டார்கள் என்றும் கூறிய திருத்தந்தை, ஆனால் அதேவேளையில், நற்செய்தியின் காரணமாக அவர்கள் அடைக்கப்பட்ட இவ்வுலகின் உண்மையான சிறைச்சாலைகளையும் திறந்தனர் என்றும் ஒப்பிட்டுக் காட்டினார்.

ஆண்டவராகிய இயேசு,  அவர்களுக்கு முன்பாக நற்செய்தியின் கதவுகளைத் திறந்தார், இதன் காரணமாக, அவர்கள் சென்று பணியாற்றிய சமூகங்களில் தங்கள் சகோதரர் சகோதரிகளை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைந்தனர் என்றும், அனைவருக்கும் நற்செய்தியின் நம்பிக்கையை கொண்டு வந்தனர் என்றும் கூறினார் திருத்தந்தை.

சில வேளைகளில் அச்சத்தால் தடைசெய்யப்பட்ட, சுயநலத்தால் அடைக்கப்பட்ட, அலட்சியத்தால் தடுக்கப்பட்ட, நம் இதயத்தின் கதவுகளைத் திறக்க நமக்கும் இறைவன் தேவை என்றும், நற்செய்தியை அறிவிப்பதற்கு இயேசு எந்தக் கதவுகளைத் திறக்கிறார் என்பதை அடையாளம் காணும் திறன் நமக்கும் தேவை என்றும் கூறினார் திருத்தந்தை.

நாமும் நற்செய்தியின் மகிழ்ச்சியை மீட்டெடுக்க வேண்டும் என்றும், நமது மேய்ப்புப் பணி நடவடிக்கைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஊக்கமின்மை மற்றும் அவநம்பிக்கை உணர்வுகளை வெல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்திய திருத்தந்தை, அனைவரையும் வரவேற்க நம்பிக்கையின் கதவுகளைத் திறக்கக்கூடிய ஒரு திருஅவையின் அவசியத்தை நாமும் உணர்கிறோம் என்றும், இதனால் அனைவரும் கடவுளின் அரவணைப்பில் அத்திருஅவை என்னும் வீட்டில் இருப்பதை உணரலாம் என்றும் உரைத்தார் திருத்தந்தை.

உரோமை திறந்த கதவுகளின் நகரம்

திருத்தூதர்கள் பேதுருவையும் பவுலையும் இந்த உரோமை நகரத்தின் பாதுகாவலர்களாக நாம் எண்ணும்போது, உ​​​ரோமை "திறந்த கதவுகளின் நகரமாக" இருப்பதாக நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது என்று கூறிய திருத்தந்தை, உரோமையையும், ஒவ்வொரு நகரத்தையும், சமூகத்தையும் திறந்த கதவுகளின் இடமாக மாற்ற கனவு காண்போம் என்றும் கேட்டுக்கொண்டார்.

திருத்தந்தை அவர்களால் 'பாலியம்' எனப்படும் கழுத்துப் பட்டையை அணிந்துகொள்ள காத்திருந்த பேராயர்களை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பேதுருவுடன் இணைந்து, ஆடுகளுக்கான வாயிலாகிய கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றி (காண்க யோவான் 10:7), அவர்கள் நற்செய்தியின் கதவுகளைத் திறந்து, தங்கள் மேய்ப்புப் பணிகள் வழியாக, ஒரு  திருஅவையையும் திறந்த கதவுகளின் சமூகத்தையும் கட்டியெழுப்ப உதவும் ஆர்வமுள்ள மேய்ப்பர்களாக விளங்கிட அழைக்கப்படுகிறார்கள் என்றும் கூறி தனது மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 June 2024, 14:33