ஆன்மிக மாற்றத்தின் தொடக்கப் புள்ளி பணிவு
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
தாழ்மையான மனம் கொண்டவர்கள் மட்டுமே மற்றவர்களை மதிக்கின்றனர் மற்றும் அவர்களின் பங்களிப்பு, அறிவுரை, உள் செல்வத்தை வரவேற்கிறார், என்றும், அவர்களின் சொந்த நலனுக்கான 'நான்' என்பதை விடுத்து, சமூக நலனுக்கான 'நாம்' என்பதை முன்னிறுத்துகின்றனர் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் 13, இவ்வியாழனன்று, பொதுநிலையினர், குடும்பம் மற்றும், வாழ்வு திருப்பீட அவை ஏற்பாடு செய்திருந்த மதிப்பீட்டாளர்களின் கூட்டத்தில் பங்கேற்கும் பொதுநிலையினர் சங்கங்கள், திருஅவை இயக்கங்கள் மற்றும் புதிய சமூகங்களின் உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
உலகலாவியத் திருஅவையின் ஒன்றிணைந்த திருப்பயணம் குறித்து தான் அடிக்கடி நினைவூட்டி வருவதாகவும் இதற்கு ஓர் ஆன்மிக மாற்றம் அவசியமாகிறது என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, கடவுள் நினைப்பது போல் சிந்திப்பது, தனக்கு மட்டுமே உரியது என்ற எண்ணப்போக்கை வெல்வது, பணிவை வளர்த்துக் கொள்வது ஆகிய மூன்று தலைப்புகளின் அடிப்படையில் (காண்க. மாற் 8:31; 9:31; 10:32-34) தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
கடவுள் சிந்திப்பதுபோல் சிந்திப்பது
இயேசு தம் சீடர்கள் பக்கம் திரும்பிப் பார்த்து பேதுருவிடம், “என் கண் முன் நில்லாதே, சாத்தானே. ஏனெனில், நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” என்ற இறைவார்த்தையை மையப்படுத்தி தனது முதல் தலைப்பை விளக்கிய திருத்தந்தை, வெறும் மனித சிந்தனையை தாண்டி கடவுளின் எண்ணத்தை தழுவிக்கொள்ள வேண்டும் என்றும், இதுவே அவர் நம்மிடம் எதிர்பார்க்கும் உள்நிலை மாற்றம் என்றும் எடுத்துக்காட்டினார்.
தனக்கு மட்டுமே உரியது என்ற எண்ணப்போக்கை வெல்வது
அடுத்து, யோவான் இயேசுவிடம், “போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில், அவர் நம்மைச் சாராதவர்” என்ற இயேசுவின் வார்த்தைகளை எடுத்துக்காட்டி தனது இரண்டாவது தலைப்பை விளக்கிய திருத்தந்தை, மூடிய வட்டத்தின் சோதனைக்குள் விழுந்துவிடாமல் எச்சரிக்கையாக இருப்போம் என்றும் கேட்டுக்கொண்டார்.
இது நமது வட்டம் அதாவது, நமது குறுகிய மனம் என்ன நினைக்கிறதோ அதுதான் சரி என்று எண்ணுவது என்றும், அதற்கு நம்மை நாமே கட்டுப்படுத்திக்கொள்வது என்றும் கூறிய திருத்தந்தை, மேலும் இது நான் செய்வது மட்டுமே சரியானது என்றும் நம்புவது என்றும் எடுத்துரைத்தார்.
பணிவை வளர்த்துக்கொள்வது
இறுதியாக, “உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். ஏனெனில், மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” என்ற வார்த்தைகளைத் தனது மூன்றாவது தலைப்புக்கு எடுத்துக்காட்டிய திருத்தந்தை, ஆன்மிக மாற்றத்தின் தொடக்கப் புள்ளி பணிவு என்றும், இதுவே அனைத்து நற்பண்புகளுக்கும் நுழைவாயிலாக இருக்க வேண்டும் என்பதை இங்கே நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்