கோவில் பாடகர் குழுவினரைச் சந்திக்கும் திருத்தந்தை கோவில் பாடகர் குழுவினரைச் சந்திக்கும் திருத்தந்தை   (ANSA)

பிரிவினைகளையும் பகைமை உணர்வுகளையும் வெற்றிகொள்ளும் இசை

ஒவ்வொருவரும் தனித்தனியாக தங்கள் திறமைகளை வழங்கினாலும், அது ஒத்திசைவில் ஒரே இசையாக மாறுவதுபோல், ஒவ்வொருவரின் பங்களிப்பின் வழி ஒன்றிணைந்த வளர்ச்சிக்கு உதவுகிறோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உலகம் முழுவதும் இருந்து பங்குதளங்களின் கோவில் பாடகர் குழுக்களின் பிரதிநிதிகள் உரோம் நகரில் ஒன்று கூடி, திருவழிபாடுகளில் இசையின் முக்கியத்துவம் குறித்து ஆராய்ந்து வருவது குறித்து தன் மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கோவில் பாடகர் குழுக்களின் நான்காவது அனைத்துலகக் கூட்டத்தில் கலந்துகொண்டோரை திருப்பீடத்தில் சந்தித்து உரையாடிய திருத்தந்தை, ஒன்றிப்பின் உயிரோட்டமுடைய அடையாளமாக இருக்கும் கோவில் பாடகர் குழுவிற்கு நல்லிணக்க வாழ்வு, ஒன்றிப்பு மற்றும் மகிழ்வு குறித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதாகத் தெரிவித்தார்.   

நல்லிணக்கம் குறித்து முதலில் எடுத்துரைத்த திருத்தந்தை, இசை என்பது ஒத்திசைவின் வெளிப்பாடாக வருகிறது என்பதோடு அது கவலையில் இருப்போருக்கு ஆறுதலைத் தருவதாகவும், மனம் தளர்ந்திருப்போருக்கு உற்சாகத்தை வழங்குவதாகவும் உள்ளது என்றார். 

இசை என்பது நம் உணர்வுகளை தட்டியெழுப்பவும் உதவுகிறது என மேலும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரிவினைகளையும் பகைமை உணர்வுகளையும் வெற்றிகண்டு இணக்கவாழ்வில் செயல்பட இசை உதவுகிறது என மேலும் கூறினார்.

ஒன்றிப்பு பற்றி தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, பாடகர் குழு என்பது தனிமையில் பாடுவதைக் குறித்து நிற்பதல்ல, மாறாக, ஒவ்வொருவரும் தங்கள் திறமையை வழங்கி ஒன்றிணையும்போது அது இசையாக அல்லது பாடலாக மாறுகின்றது என்றார்.

ஒவ்வொருவரும் தனித்தனியாக தங்கள் திறமைகளை வழங்கினாலும், அது ஒத்திசைவில் ஒரே இசையாக மாறுவதுபோல், ஒவ்வொருவரின் பங்களிப்பின் வழி நாம் திருஅவையிலும் உலகிலும் ஒன்றிணைந்த வளர்ச்சிக்கு உதவுகிறோம் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தன் மூன்றாவது கருத்தாக, மகிழ்வு என்பது குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாடகர் குழுக்கள் என்பவர்கள், பல நூற்றாண்டுகள் பழமையுடைய கலை, மகிழ்வு மற்றும் ஆன்மீகப் பொக்கிஷங்களின் பாதுகாவலர்கள் என அவர்களை அழைத்தார்.

தன்னலம், பேராசை, பொறாமை, பிரிவினை போன்ற உலகப்போக்குகளால் இசையை களங்கப்படுத்த வேண்டாம் என்பதையும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இசை என்பது நம்மையே மகிழ்வில் இறைவனுக்கு காணிக்கையாக்க நமக்கு உதவட்டும் என கேட்டுக் கொண்டார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 June 2024, 14:00