யூபிலி ஆண்டு, வெளிநாட்டு கடனை இரத்து செய்வதற்கான ஒரு சந்தர்ப்பம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
தவறாக நிர்வகிக்கப்பட்ட உலகமயமாக்கலுக்குப் பிறகும், தொற்றுநோய்கள் மற்றும் போர்களுக்குப் பிறகும் நாம் இப்போது கடன் நெருக்கடியை எதிர்கொள்கிறோம், இது முக்கியமாக, உலகளாவிய தெற்கின் நாடுகளைப் பாதிக்கிறது என்றும், துன்பத்தையும் துயரத்தையும் உருவாக்குகிறது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.
ஜூன் 5, இப்புதன் காலை, வத்திக்கானின் பாப்பிறை அறிவியல் கழகம் ஏற்பாடு செய்த “உலகளாவிய தெற்கில் கடன் நெருக்கடி” என்ற மாநாட்டின் பங்கேற்பாளர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்த திருத்தந்தை, உலகின் கடன் நெருக்கடி குறித்த பிரச்சனையின் மீது அவர்களின் பார்வையை ஈர்த்தார்.
இந்த நிலைமை, இலட்சக்கணக்கான மக்களின் மாண்பு நிறைந்த எதிர்காலத்திற்கான வாய்ப்பை இழக்கிறது என்றும் கவலை தெரிவித்தார் திருத்தந்தை.
இந்த உலகளாவிய நெருக்கடிக்கு நாம் என்ன செய்ய முடியும் என்று கேள்வியெழுப்பிய திருத்தந்தை, இதனைச் சரிசெய்வதில் நமக்கு துணிச்சலான மற்றும் ஆக்கப்பூர்வமான புதியதொரு அனைத்துலக நிதிகட்டமைப்புத் தேவைப்படுகிறது என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
கடன் கொடுப்பவர்களுக்கும் கடன் பெறுபவர்களுக்கும் இடையிலான பகிரப்பட்ட பொறுப்பை அடிப்படையாகக் கொண்ட கடன் அமைப்புதான் இதன் நோக்கமாக அமைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்