ஒன்றிணைந்து நடைபோட்டு எண்ணத்தால், உணர்வால், செயலால் உதவுதல்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
இலத்தீன் அமெரிக்காவுக்கான திருப்பீடத்துறையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொள்வோரை ஜூன் 27, வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கூட்டம் இந்நாட்களில் விவாதிக்க உள்ள மூன்று கேள்விகள் குறித்துத் தன் சிந்தனைகளை அவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
மக்களில் காணப்படும் இயேசுவின் துயர் நிறைந்த உடலைத் தொட்டு இலத்தீன் அமெரிக்காவின் வளர்ச்சிக்கான மதிப்புடன் ஊக்கப்படுத்தப்படும் நடவடிக்கைகள் என்ன?,
ஒருமுகப்படுத்துதலின் முன்னிலையில் சகோதரத்துவத்தை ஊக்குவிப்பதன் வழியாக சமூகச் சூழலில் எவ்வாறு நற்செய்தி அறிவிப்பது? இலத்தீன் அமெரிக்காவிற்கான அவை, எத்தகைய உதவிகளை இலத்தீன் அமெரிக்க ஆயர் பேரவைகளுக்கும், ஒன்றிணைந்த ஆயர் பேரவைக்கும், திருப்பீடத் துறைகளுக்கும் ஆற்றமுடியும்? என்ற மூன்று கேள்விகளை முன்வைத்தார் திருத்தந்தை.
இலத்தீன் அமெரிக்காவிற்கான திருப்பீடத்துறை, ஒன்றிணைந்து நடைபோடும் பாதையில் எண்ணத்தால், உணர்வால், செயலால் இலத்தீன் அமெரிக்காவின் அனைத்துக் கத்தோலிக்க இயக்கங்களுக்கும் உதவுவதன் வழியாக நேரடியாகவும் மறைமுகமாகவும் செயலாற்ற முடியும் என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இலத்தீன் அமெரிக்காவின் புனித யுவான் தியோகோவில் தன் தூண்டுதலின் ஆதாரத்தை தலத்திருஅவைகள் கண்டுகொள்ளமுடியும் என்ற திருத்தந்தை, இந்தப் பொதுநிலை விசுவாசி தன் பலத்தை நம்பியல்ல, மாறாக, திருஅவை மற்றும் இறைவனை ஆழமாக நம்பி நற்செய்திப் பணியை ஆற்றுவதைக் காண்கிறோம் என்பதையும் எடுத்துரைத்தார்.
இலத்தீன் அமெரிக்க திருப்பீடத்துறையின் நற்செய்தி அறிவிப்புப் பணிகள் ஒரு தூண்டுதலாக இருக்க வேண்டுமேயொழிய கட்டாயத்திற்கு உள்ளாக்குவதாக இருக்கக்கூடாது என்ற திருத்தந்தை, ஒப்புரவின், ஒன்றிணைப்பதன், சகோதரத்துவத்தின் பாலங்களைக் கட்டியெழுப்புவதாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், வரவிருக்கும் 2025 யூபிலி ஆண்டு குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலத்தீன் அமெரிக்கா முழுவதும் தேவைப்படும் நம்பிக்கையின் திருப்பயணிகளாக மக்கள் திகழ்ந்திட இலத்தீன் அமெரிக்காவுக்கான திருப்பீடத்துறை உதவ வேண்டும் என மேலும் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்