திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (AFP or licensors)

புலம்பெயர்ந்தோரின் வாழ்வுக் கதைகள் நமதாகட்டும்!

புலம்பெயர்ந்தோரின் வாழ்வுக் கதைகளை நமது வாழ்வின் கதைகளாக்கி, அவர்களின் அவலநிலையை நாம் எப்போதும் மறக்காமல் இருப்போம் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

புலம்பெயர்ந்தோரின் முகங்களும் கண்களும் நம்மை வேறு பக்கம் திசைதிருப்பாமலும், நமது பொதுவான மனிதநேயத்தை மறுக்காமலும், அவர்களின் வாழ்வுக் கதைகளை நமது வாழ்வின் கதைகளாக்கி, அவர்களின் அவலநிலையை மறக்காமல் இருக்குமாறும் நம்மை வேண்டுகின்றன என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூன் 20, இவ்வியாழனன்று, உலக புலம்பெயர்ந்தோர் நாளை முன்னிட்டு தான் பதிவிட்டுள்ள இன்றைய நாள் குறுஞ்செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.

ஜூன் 19, இப்புதனன்று, தனது புதன் மறைக்கல்வி உரைக்குப் பின்பு, உலக புலம்பெயர்ந்தோர் நாளை நினைவுகூர்ந்த திருத்தந்தை, ஐக்கிய நாட்டு நிறுவனத்தால் ஊக்குவிக்கப்படும் இந்நாள், அமைதியையும் பாதுகாப்பையும் வேண்டி தங்கள் இல்லங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாய நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள மக்களைக் குறித்து நம் அக்கறையுடன் கூடிய சகோதரத்துவ பார்வையை திருப்ப உதவட்டும் என்று கூறினார்.

மேலும் நம் கதவுகளைத் தட்டும் புலம்பெயர்ந்தோரை வரவேற்கவும், அவர்களை முன்னேற்றவும், உடன் செல்லவும், சமுதாயத்தில் ஒன்றிணைக்கவும் நாம் விண்ணப்பிக்கப்படுகிறோம் என்றும், புகலிடம் தேடுவோரின்  மனிதாபிமான நிலைகள் மேம்படுத்தப்படவும், அவர்கள் சமுதாயத்தில் ஒருங்கிணைக்கப்படவும் நாடுகள் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 June 2024, 14:58