போரால் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களை ஆதரியுங்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
துரிதமாக செயல்பட்டு, போரினால் பாதிக்கப்பட்டுள்ள காசா மக்களுக்கு உதவிட அனைத்து நல்வழிகளையும் பயன்படுத்துமாறு அனைத்துலகச் சமூகத்தை கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜூன் 9, இஞ்ஞாயிறன்று, வத்திக்கானின், புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரைக்குப் பின்பு இவ்வாறு விண்ணப்பித்த திருத்தந்தை, தேவையில் இருப்போருக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைவதை யாரும் தடைசெய்யக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
ஜூன் 11, இச்செவ்வாயன்று, ஜோர்டான் அரசு மனிதாபிமான அவசரநிலையை மையமாகக் கொண்டு ஓர் அனைத்துலக மாநாட்டை நடத்தவுள்ள வேளை, இத்தகையதொரு வேண்டுகோளை முன்வைத்துள்ள திருத்தந்தை, போரால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுடனும் தான் ஒன்றித்திருப்பதாகவும் கூறினார்.
அமைதி, போர்நிறுத்தம் மற்றும் பிணையக்கைதிகளை விடுவித்தலுக்கான முன்மொழிவுகள் யாவும், நன்மைக்காக உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படும் என்ற தனது நம்பிக்கையை வெளிப்படுத்திய அதேவேளையில், அவை எளிதான காரியங்கள் அல்ல என்றாலும், பாலஸ்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்கள் நாடுகளில் சம்பந்தப்பட்டவர்களிடையே நடந்துகொண்டிருக்கும் பேச்சுவார்த்தைகளைத் தான் ஊக்குவிப்பதாகவும் உரைத்துள்ளார் திருத்தந்தை
போரால் சிதைக்கப்பட்டுள்ள உக்ரைனையும் அதன் மக்களையும் நினைவுகூர்ந்த திருத்தந்தை, மக்கள் அமைதியை விரும்புகிறார்கள் என்றும், அதற்கான எல்லா முயற்சிகளும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியதுடன், மியான்மார் மக்களுக்காகவும் இறைவேண்டல் செய்வதாகக் கூறினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்