அண்டவியல் குறித்த ஆராய்ச்சியை திருஅவையும் ஊக்குவிக்கிறது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நமது காலத்தின் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சேவையாற்றும் விதத்தில் அறிவியல் பயன்படுத்தப்படும்போதும், அவர்களுக்குத் தீங்கு விளைவிக்காமல் இருக்கும்போதும், நம்பிக்கையும் அறிவியலும் அறச்செயலில் ஒன்றுபட்டு நிற்கும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரோமைக்கு அருகேயுள்ள Castel Gandolfo-வில், "கருந்துளைகள், ஈர்ப்பு அலைகள் மற்றும் விண்வெளி நேரத்தின் ஒருமைப்பாடு" என்ற தலைப்பில் நடைபெறும் கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்கும் அதன் பங்கேற்பாளர்களை ஜூன் 20, இவ்வியாழனன்று, திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, மனித அறிவின் எல்லைகளுக்குச் செல்ல நான் உங்களை ஊக்குவிக்கிறேன், ஏனென்றால் இங்குதான் நம் இதயத்தின் தாகத்தைத் தணிக்கும் கடவுளின் அன்பை அனுபவிக்க முடியும் என்றும் கூறினார்.
இந்த நாட்களில் நீங்கள் அண்டவியலில் அறிவியல் ஆராய்ச்சி எழுப்பும் அண்மைய கேள்விகளைப் பற்றி விவாதிக்கிறீர்கள், அதாவது, ஹப்பிள் (Hubble) மாறிலியின் அளவீட்டில் பெறப்பட்ட வெவ்வேறு முடிவுகள், அண்டவியல் ஒருமைப்பாடுகளின் புதிரான தன்மை (பெருவெடிப்பு முதல் கருந்துளைகள் வரை), புவியீர்ப்பு அலைகளின் மேற்பூச்சு பொருள் குறித்தெல்லாம் கலந்துரையாடுகிறீர்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.
திருஅவையும் இத்தகைய ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்துகிறது மற்றும் அதை ஊக்குவிக்கிறது, ஏனெனில் இது நம் காலத்தின் ஆண்கள் மற்றும் பெண்களின் உணர்திறன் மற்றும் அறிவுத்திறன்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும் உரைத்தார் திருத்தந்தை.
இது திருப்பாடல் ஆசிரியர் (காண்க திபா 8:4-7) கூறும் வார்த்தைகளுடன் மிகவும் பொருந்திப்போகின்றது என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தக் கருப்பொருள்கள் இறையியல், தத்துவம், அறிவியல் மற்றும் ஆன்மிக வாழ்க்கைக்கு எவ்வாறு சிறப்புப் பொருத்தம் கொண்டவையாக இருக்கின்றன என்பதும் தெளிவாகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.
பேராயர் George Lemaître அவர்கள், ஒரு முன்மாதிரியான அருள்பணியாளர் மற்றும் அறிவியல் அறிஞர் என்றும், அவரது மனித மற்றும் ஆன்மிகப் பயணம் நாம் அனைவரும் கற்றுக்கொள்ளக்கூடிய வாழ்க்கை மாதிரியை பிரதிபலிக்கிறது என்றும் கூறிய திருத்தந்தை, அவரது வாழ்க்கையிலிருந்து பல்வேறு பண்புநலங்களை எடுத்துக்காட்டினார்.
பேராயர் George Lemaître அவர்களின் நினைவாக இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெல்ஜிய நாட்டைச் சேர்ந்த அண்டவியல் நிபுணரான இவரின் அறிவியல் திறனை பன்னாட்டு வானியல் ஒன்றியம் அங்கீகரித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்