பெருங்கடல்களுக்கும் மனித நாகரீகத்திற்கும் இடையேயான தொடர்பு
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
"மாற்றத்தில் மூழ்கடிக்கப்பட்டு" என்ற தலைப்பில் கோஸ்டா ரிக்கா நாட்டின் தலைநகரில் இடம்பெறும் பெருங்கடல்கள் குறித்த அனைத்துலகக் கூட்டத்திற்கு தன் செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீடத்திற்கான கோஸ்டா ரிக்கா நாட்டின் தூதுவர் Federico Zamora Cordero அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தி, தண்ணீரின் முக்கியத்துவம் குறித்தும், மனித வாழ்விலும் சமூக முன்னேற்றத்திலும் அதன் உயரிய இடம் குறித்தும் எடுத்துரைக்கிறது.
கோஸ்டா ரிக்கா தலைநகர் சான் ஹோசேயில் இம்மாதம் 7 மற்றும் 8 தேதிகளில் இடம்பெறும் பெருங்கடல் நடவடிக்கை குறித்த கருத்தரங்கு, பெருங்கடலையும் நல ஆதரவுத் திட்டங்களையும் செயல்படுத்துவது தொடர்புடைய நடைமுறைகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து வருகிறது.
உரோம் நகரில் தண்ணீருக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெருங்கடல்களுக்கும் மனித நாகரீகத்திற்கும் இடையேயான தொடர்பு குறித்தும் எடுத்துரைத்துள்ளார்.
தொடர்ந்து மனிதகுலம் தண்ணீர் என்னும் விலையுயர்ந்த கொடையை எவ்வாறு சுரண்டி வாழ்ந்துள்ளது என்பது குறித்த கவலையும் திருத்தந்தையால் வெளியிடப்பட்டுள்ளது.
தண்ணீரைப் பொறுத்தவரையில் நவீன மனிதனின் அணுகுமுறைகள் மாற்றப்படவேண்டும் என்பதற்கு அழைப்புவிடுத்த திருத்தந்தை, உணவு பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்ற நிகழ்வுகளுடன் தண்ணீருக்கு இருக்கும் தொடர்பை உணர்ந்தவர்களாக நாம் ஒவ்வொருவரும் பெருங்கடல்களின் அழகையும் தூய்மையையும் பாதுகாக்க நம் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மேலும் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்