அருள்பணியாளர்களுக்கான திருப்பீடத்துறையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டோரை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அருள்பணியாளர்களுக்கான திருப்பீடத்துறையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டோரை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

அருள்பணியாளருக்கான பயிற்சி என்பது ஒரு தொடர் முயற்சி ஆகும்

அருள்பணியாளர்களுக்கான பயிற்சிமுறை, தேவ அழைத்தல் மற்றும் நிரந்தர திருத்தொண்டர்களின் முக்கியத்துவம் குறித்து திருத்தந்தையின் கருத்துக்கள்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

அருள்பணியாளர்களுக்கான திருப்பீடத்துறையின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டோரை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அருள்பணியாளர்களுக்கான பயிற்சிமுறை, தேவ அழைத்தல் மற்றும் நிரந்தர திருத்தொண்டர்களின் முக்கியத்துவம் குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

அருள்பணியாளர்களுக்கான தொடர் பயிற்சிமுறை, தேவ அழைத்தலை ஊக்குவித்தல், மற்றும் நிரந்தர திருத்தொண்டர்கள் என்ற மூன்று தலைப்புக்களில் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எந்த ஓர் அருள்பணியாளரும் தனியாக நடைபோடக் கூடியவர் அல்ல, உடன்பிறந்த உணர்வுடன் ஒன்றிணந்து நடைபோட வேண்டியவர் என்பதை வலியுறுத்தினார்.

பல்வேறு துன்பங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும், தாராள மனதுடன் பெரும்பான்மையான அருள்பணியாளர்கள் தொடர்ந்து சிறப்புப் பணியாற்றிவருவது குறித்து தன் நன்றியையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குருமடத்தில் வழங்கப்படும் பயிற்சி மட்டும் போதாது என்பதை எடுத்துரைத்த திருத்தந்தை, பயிற்சி என்பது தொடர்ந்து இடம்பெறுவதாக இருக்க வேண்டும், ஏனெனில் மாறிவரும் உலகிற்கு ஏற்ப பயிற்சிமுறைகள் புதுப்பிக்கப்படுகின்றன என மேலும் தெரிவித்தார்.

அருள்பணியாளர்கள் தனிமை உணர்வைக் கொண்டிருப்பது குறித்த கவலையையும் வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓர் அருள்பணியாளரின் வாழ்வு என்பது தனிமையின் பயணமல்ல, மாறாக, உடன்பிறந்த உணர்வுடன் இணைந்து நடைபோடவேண்டியது என்பதையும் வலியுறுத்தினார்.

இன்றைய உலகில் தேவஅழைத்தல்களின் எண்ணிக்கை குறைந்துவருவது குறித்தும் தன் கவலையை வெளியிட்டு, தேவஅழைத்தல்களின் குறைவு என்பது இறைமக்கள் சமுதாயத்திற்கு இருக்கும் மிகப்பெரும் சவால்களுள் ஒன்று என்பதையும் சுட்டிக்காட்டினார்.

நிரந்தரத் திருத்தொண்டர்களின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை, இது குறித்த சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இதனை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அனைத்து தரப்பிலும் எடுக்கப்பட வேண்டும் என்பதற்கும் ஊக்கமளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 June 2024, 16:15