திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

வரவிருக்கும் திருத்தந்தையின் நிகழ்வுகள்!

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்தப் பயணத்திட்டங்கள் குறித்த விபரங்களை வத்திக்கானின் இணையதள பக்கத்திலும் தேடி தெரிந்துகொள்ளலாம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வரவிருக்கும் திருத்தந்தையின் நிகழ்வுகள் குறித்த கால அட்டவணை ஒன்றை ஜூன் 3, இத்திங்களன்று வெளியிட்டுள்ளது திருப்பீடச் செய்தித் தொடர்பகம்.

இத்தாலியக் கத்தோலிக்க சமூக வாரத்திற்காக ஜூலை மாதம் 7-ஆம் தேதி அதன் Trieste நகருக்கு மேய்ப்புப் பணிக்காகச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு புலம்பெயர்ந்தோர் மற்றும் பிற விளிம்புநிலை மக்களை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனத் தெரிவிக்கிறது அச்செய்திக் குறிப்பு.

அதன் பின்னர் இத்தாலிக்கு வெளியே, அதாவது, செப்டம்பர் மாதம் 2 முதல் 13 வரை இந்தோனேசியா, பாப்புவா நியூ கினியா, கிழக்கு திமோர் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்கிறார் திருத்தந்தை.

அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் மாத இறுதியில் அதாவது, 26 முதல் 29 வரை பெல்ஜியத்தில் உள்ள மூன்று நகரங்களுக்குத் திருத்தூதுப் பயணம் செல்வதற்கு முன்பு, லக்சம்பேர்க்கிற்கு ஒரு நாள் பயணத்தை மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  அங்கு அவர் Leuven மற்றும் Louvain-la-Neuve பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்ட 600-வது ஆண்டு விழாவைக் குறிக்கும் கொண்டாட்டங்களில் பங்கேற்கிறார்.

மேலும் இம்மாதம் 29-ஆம் தேதி வத்திகானின் புனித பேதுரு பெரும்கோவிலில் சிறப்பிக்கப்படவிருக்கின்ற புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழாத் திருப்பலிக்குத் தலைமைத் தாங்குகிறார் திருத்தந்தை. இத்திருப்பலியில் புதிதாக நியமனம் பெற்ற இரண்டு பெருநகர பேராயர்களுக்குப் பால்யம் வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது.

அதன்பின்னர், ஜூலை மாதம் முதல் தேதி புனிதர்பட்ட படிநிலைக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் கர்தினால்கள் அவையைக் கூட்டுகிறார் திருத்தந்தை.  

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இந்தப் பயணத்திட்டங்கள் குறித்த விபரங்களை வத்திக்கானின் இணையதள பக்கத்திலும் தேடித் தெரிந்துகொள்ளலாம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 June 2024, 14:20