திருத்தந்தையின் ஆசியா, ஒசியானியாவிற்கான திருப்பயண விவரங்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செப்டம்பர் மாதம் 2 முதல் 13 வரை இந்தோனேசியா, பாபுவா நியூ கினி, கிழக்கு திமோர் மற்றும் சிங்கப்பூரில் மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணம் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது திருப்பீடம்.
செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி திங்களன்று உரோம் நகரிலிருந்து உள்ளூர் நேரம் மாலை 5.15 மணிக்கு விமானத்தில் புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அடுத்த நாள் உள்ளூர் நேரம் முற்பகல் 11.30 மணிக்கு ஜகார்த்தா பன்னாட்டு விமான நிலையம் வந்தடைந்து அரசு உயர் மட்ட அதிகாரிகளால் வரவேற்கப்படுவார்.
செப்டம்பர் 4ஆம் தேதி காலை 9.30 மணிக்கு இந்தோனேசிய அரசுத்தலைவர் மாளிகை முன் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின், அரசுத்தலைவர் மாளிகையில் அரசுத்தலைவர், அரசின் உயர்மட்ட அதிகாரிகள், அரசியல் தூதுவர்கள் ஆகியோரைச் சந்தித்து உரையாடுவார். அன்றே அந்நாட்டிலுள்ள இயேசு சபையினரை காலையில் சந்தித்தபின், மாலையில் ஆயர்கள், அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், குருமட மாணவர்கள், துறவியர் மற்றும் மறைக்கல்வி ஆசிரியர்களை அன்னைமரியாவின் விண்ணேற்பு பேராலயத்தில் சந்தித்து உரை வழங்குவார். பின்னர் ஜகார்த்தாவில் உள்ள இளையோர் மையத்தில் Scholas Occurrentes அமைப்பின் இளையோரை உள்ளூர் நேரம் மாலை 5.35 மணிக்குச் சந்திப்பார்.
செப்டம்பர் 5ஆம் தேதி வியாழனன்று மதப்பிரதிநிதிகளைச் சந்தித்தல், பிறரன்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்களை சந்தித்தல், Gelora Bung Karno அரங்கில் திருப்பலி நிறைவேற்றல் ஆகியவை இடம்பெறும்.
செப்டம்பர் 6ஆம் தேதி காலை ஜகார்த்தாவிலிருந்து விடைபெறும் திருத்தந்தை, மாலை உள்ளூர் நேரம் 6.50 மணிக்கு பாப்புவா நியூ கினியின் Port Moresby விமான நிலையம் வந்தடைவார்.
செப்டம்பர் ஏழாம் தேதி அரசு அதிகாரிகளையும், தெரு வாழ் சிறுவர் மேய்ப்புப்பணி மையத்தையும், ஆயர்கள் மற்றும் தலதிருஅவை அதிகாரிகளையும் சந்திப்பார்.
செப்டம்பர் 8ஆம் தேதி, பிரதமரைச் சந்திப்பது, பொதுமக்களுக்கு திருப்பலி நிறைவேற்றுவது ஆகிய நிகழ்ச்சிகளுக்குப்பின் Vanimo மறைமாவட்டத்திற்கு விமானத்தில் சென்று அங்குள்ள விசுவாசிகளையும், மறைப்பணியாளர்களையும் சந்தித்தபின் Port Moresby திரும்புவார்.
Port Moresby விமான நிலையத்திலிருந்து செப்டம்பர் 9ஆம் தேதி கிழக்கு திமோரின் திலி செல்லும் திருத்தந்தை, அன்றே அரசுத்தலைவரையும், அரசு உயர்மட்ட அதிகாரிகளையும் சந்திப்பார்.
செப்டம்பர் 10ஆம் தேதியன்று திலியில் மாற்றுத்திறனாளி குழந்தைகள், ஆயர்கள் மற்றும் உயர் மட்ட அதிகாரிகள், பின்னர் அந்நாட்டு இயேசு சபையினர் ஆகியோரைச் சந்தித்தபின், பொதுமக்களுக்கென திருப்பலியும் நிறைவேற்றுவார்.
செப்டம்பர் 11ஆம் தேதி காலையில் திலியில் இளையோரை சந்தித்தபின் சிங்கப்பூர் கிளம்பும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உள்ளூர் நேரம் பிற்பகல் 2.15 மணியளவில் சிங்கப்பூர் விமான நிலையம் வந்தடைந்து அன்று மாலையே அந்நாட்டின் இயேசு சபையினரை சந்தித்து உரையாடுவார்.
12ஆம் தேதியன்று பாராளுமன்றத்தில் வரவேற்பை ஏற்பது, அரசுத்தலைவரை சந்திப்பது, பிரதமரைச் சந்திப்பது, அரசு உயரதிகாரிகளை சந்திப்பது போன்றவைகளுக்குப்பின், SportsHub தேசிய அரங்கத்தில் பொதுமக்களுக்கான திருப்பலியும் நிறைவேற்றுவார்.
செப்டம்பர் 13ஆம் தேதி காலையில் முதியோர் மற்றும் நோயுற்றோரை சந்திக்கும் திருத்தந்தை, இளையோருடன் பல்மத கூட்டத்தில் கலந்துகொண்டபின் உள்ளூர் நேரம் காலை 11.50 மணிக்கு அந்நாட்டிலிருந்து கிளம்பி மாலை உள்ளூர் நேரம் 6.25 மணிக்கு உரோம் Fiumicino பன்னாட்டு விமான நிலையம் வந்தடைவார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்