பெண்களின் மறைப்பணி பற்றிய புதிய நூலுக்கு திருத்தந்தை அணிந்துரை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
“ஒன்றிணைந்து பயணிக்கும் திருஅவையில் பெண்களும் அவர்களின் மறைப்பணிகளும்” என்ற தலைப்பிலான புதிய நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெண்கள், அருள்பொழிவுத் திருப்பணி, முறைகேடுகள் என்ற பெருந்துன்பம் போன்றவைகள் குறித்த தன் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
இரண்டு கர்தினால்கள் மற்றும் மூன்று பெண் இறையியல் வல்லுநர்களால் எழுதப்பட்டுள்ள இந்த நூலின் அணிந்துரையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எண்ணங்களைவிட யதார்த்தம் மிக முக்கியத்துவம் நிறைந்தது என அதில் எடுத்துரைத்துள்ளார்.
திருஅவைக்குள் அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதால் பெண்களும் பொதுநிலையினரும் துன்பத்திற்கு உள்ளாகிவருவது குறித்தும் அப்புத்தகத்தின் அணிந்துரையில் குறிப்பிடும் திருத்தந்தை, இத்தகையப் போக்குகளுக்கு எதிராகப் போராடவேண்டியதன் தேவையை வலியுறுத்துவதோடு, எவ்வித முன்சார்பு எண்ணங்களும் இன்றி பெண்களுக்கு நாம் செவிமடுக்கவேண்டும் என்ற விண்ணப்பதையும் விடுத்துள்ளார்.
பெண்களுக்கும் அவர்கள் ஆற்றுவதற்கும் உரிய அங்கீகாரம் கொடுக்கப்படுவதில்லை, மற்றும் அவர்கள் செய்யமுடிவதற்கான வாய்ப்புகளும், இடமும் பெண்களுக்கு வழங்கப்படாமல் இருப்பதே அவர்களின் துயரத்திற்கு முக்கியக் காரணம் எனவும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
யதார்த்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கருத்தியல்களைப் பிடித்துக் கொண்டிருப்பது தவறு என்பதை சுட்டிக்காட்டும் திருத்தந்தை, திருஅவைக்குள் பெண்களின் மறைப்பணிகள், கருத்தியலிலிருந்து அல்ல, மாறாக, அனுபவங்கள் என்ற யதார்த்தத்தை பெண்கள் பகிர்ந்துகொள்வதிலிருந்து துவங்குகிறது என்றார்.
பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி திருத்தந்தையுடனான C9 எனப்படும் கர்தினால்கள் அலோசனை அவைக் கூட்டத்தில் முதன்முறையாக மூன்று பெண்கள் இடம்பெற்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டது குறித்தும், திருத்தந்தை வழங்கிய கருத்துக்கள் குறித்து இந்த மூவரும், உலக ஆயர் மாமன்றத்தின் பொது அறிக்கையாளர் கர்தினால் Jean-Claude Hollerich, சிறார் பாதுகாப்பிற்கான திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Seán Patrick O’Malley ஆகியோரும் இணைந்து நடத்திய கலந்துரையாடலாக இப்புதிய நூல் வெளியிடப்பட்டுள்ளது.
சலேசிய அருள்சகோதரி Linda Pocher, ஆங்கிலிக்கன் திருஅவையின் பெண் ஆயர் Jo B. Wells, இத்தாலியின் வெரோனா மறைமாவட்டத்தில் இறைப்பணிகளுக்கென தன்னை அர்ப்பணித்த Giuliva Di Berardino என்ற மூன்று இறையிலாளர்களே திருத்தந்தையுடன் உரையாடலில் கலந்துகொண்டவர்களும், இரு கர்தினால்களுடன் கருத்துப் பரிமாற்றங்களில் கலந்துகொண்டு கர்தினால்களுடன் இணைந்து இந்நூலை எழுதியவர்களும் ஆவர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்