கடவுள் மேல் வேரூன்றப்பட்ட ஒரு நம்பிக்கை நமக்குத் தேவை

கிறிஸ்தவர்களாக வாழ அழைக்கப்பட்டிருக்கின்ற நாம் ஒவ்வொருவரும் நாம் வாழ்கின்ற ஒவ்வொரு சூழ்நிலையிலும், இடத்திலும், இறைவாக்கினர்களாகவும், கடவுளுடைய இறையாட்சியின் சாட்சிகளாகவும் இருக்க அழைக்கப்பட்டுள்ளோம்

மெரினா ராஜ் – வத்திக்கான்

மனிதஉரு எடுத்த கடவுள் மேல் வேறுரூன்றப்பட்ட ஒரு நம்பிக்கை நமக்குத் தேவை என்றும், அந்த நம்பிக்கையானது மனித இதயமாக வரலாற்றில் நுழைந்து, உடைந்த இதயங்களைக் குணப்படுத்துகின்றது, நம்பிக்கையின் புளிக்காரமாகவும், புதிய உலகிற்கான விதையாகவும் மாறுகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூலை 7 ஞாயிற்றுக்கிழமை இத்தாலியின் திரியெஸ்தே பகுதியில் உள்ள Unità d'Italia வளாகத்தில் கூடியிருந்த ஏறக்குறைய 8500 மக்களுக்கு, 98 ஆயர்கள், செர்போ, கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தலத்திருஅவை ஆயர்கள்,260 அருள்பணியாளர்கள் ஆகியோருடன் இணைந்து திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

மனிதனின் எதிர்காலம் மற்றும் வரலாற்றைப் பற்றிய கேள்விகளை எழுப்பும் அமைதியற்ற நம்பிக்கை, இதயத்திலிருந்து இதயத்திற்கு நகரும் நம்பிக்கை, சமூகத்தின் பிரச்சினைகளுக்கு வெளியில் இருந்து பெறும் நம்பிக்கை, சாதாரணமான மற்றும் இதய சோம்பலைக் கடக்க உதவும் அமைதியற்ற நம்பிக்கை என நம்பிக்கைகளில் பல வகைகள் உள்ளன என்று கூறிய திருத்தந்தை அவர்கள்,  நாம் வாழ்கின்ற சமூகம் நுகர்வுக் கலாச்சாரம் என்னும் மயக்கத்தில் உள்ளது என்றும் கூறினார்.

எல்லாம் வேண்டும், இன்னும் அதிகமான பொருள் வேண்டும் என்று பணத்தை விரயம் செய்யும் நுகர்வு மனநிலையானது வாதை, புற்றுநோய் போன்றது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், அது இதயத்தை பாதிக்கின்றது, சுயநலமானவர்களாக மாற்றுகின்றது, தன்னைப்பற்றி மட்டுமே சிந்திக்க வைக்கின்றது என்றும் எடுத்துரைத்தார்.

மனித சுயநலக் கணக்கீடுகளை மாற்றவும், தீமையை வெறுக்கவும், அடுத்தவரைக் குறைகூறும் அநீதியைச் சுட்டிக்காட்டவும், பலவீனமானவர்களுக்கு எதிராகச் செயல்படும் அதிகாரத்தில் உள்ளவர்களின் திட்டங்களைத் தடுக்கவும் நமக்கு நம்பிக்கைத் தேவை என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு தூய இறைவாக்கினராக வாழ்ந்தார், இரக்கமுள்ள கடவுளாக செயல்பட்டார் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், கிறிஸ்தவர்களாக வாழ அழைக்கப்பட்டிருக்கின்ற நாம் ஒவ்வொருவரும் நாம் வாழ்கின்ற ஒவ்வொரு சூழ்நிலையிலும், இடத்திலும், இறைவாக்கினர்களாகவும், கடவுளுடைய இறையாட்சியின் சாட்சிகளாகவும் இருக்க அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 July 2024, 15:04