50ஆவது கத்தோலிக்க சமூக வார நிறைவுக்கூட்டம்
மெரினா ராஜ் – வத்திக்கான்
50வது கத்தோலிக்க சமூக வாரத்தின் வரலாறு இத்தாலியின் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்துள்ளது, சமூக மாற்றங்களுக்கு ஏற்ற உணர்திறன், பொதுநலனுக்காக பங்களித்தல் போன்றவற்றைக்கொண்ட ஒரு திருஅவையை வெளிப்படுத்துகின்றது என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஜுலை 7 ஞாயிற்றுக்கிழமை வடக்கு இத்தாலியின் திரியெஸ்தே நகரில் நடைபெற்ற 50ஆவது கத்தோலிக்க சமூக வாரத்தின் நிறைவுக்கூட்டத்தில் பேசியபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1907 ஆம் ஆண்டில் இந்த கத்தோலிக்க சமூக வாரத்தைத் தொடங்க அழைப்புவிடுத்த அருளாளர் ஜூசெப்பே தொனிலோ அவர்கள், ஜனநாயகம் என்பதனை, "அனைத்து சமூக, சட்ட மற்றும் பொருளாதார சக்திகள், அவற்றின் படிநிலை வளர்ச்சியின் முழுமை, பொது நன்மைக்கு ஒத்துழைத்தல் என வரையறுக்கலாம் என கூறுவதாக எடுத்துரைத்தார் திருத்தந்தை.
1988 ஆம் ஆண்டில் இத்தாலிய ஆயர்கள் இந்த கத்தோலிக்க சமூக வாரங்களை மீட்டெடுத்தது பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், "சமூக மாற்றத்திற்கான ஒவ்வொருவரின் அர்ப்பணிப்புக்கும் அர்த்தம் கொடுத்தல், விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு கவனம் செலுத்துதல், வெற்றிகரமான பொருளாதார செயல்முறைகள் மற்றும் வழிமுறைகள், சமூக ஒற்றுமைக்கு இடமளித்தல், நாட்டின் வளர்ச்சிக்கு அர்த்தத்தை வழங்குதல், வாழ்க்கைத் தரம், ஒன்றிணைந்த சகவாழ்வு, ஜனநாயகப் பங்கேற்பு, உண்மையான சுதந்திரம் ஆகியவற்றையும் வலியுறுத்தினார்.
சமூக வாரத்தின் முன்னேற்றமானது அனைத்து கிறிஸ்தவர்களும் உலகின் ஒவ்வொரு பகுதியில் வாழும் கிறிஸ்தவர்களும், சமூக மாற்றங்களுக்கான பொறுப்புணர்வு கொண்டவர்களாக வாழ அழைக்கின்றது என்றும், முழு மனித சமுதாயம் மற்றும் அனைவரின் வாழ்க்கைப் பயணத்திற்கும் ஓர் எச்சரிக்கையை எடுத்துரைக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
காயப்பட்ட இதயமான ஜனநாயகம்
ஜனநாயகத்தின் நெருக்கடியைக் காயப்பட்ட இதயமாகக் கருதி புறக்கணிப்புக் கலாச்சாரமானது தவிர்க்கப்பட வேண்டும் என்றும், இந்த புறக்கணிப்புக் கலாச்சாரமானது ஏழைகள், கருவில் இருக்கும் சிசுக்கள், பலவினமானவர்கள் நோயாளிகள், குழந்தைகள், பெண்கள் இளைஞர்கள், முதியவர்கள் போன்றவர்கள் இல்லாத நகரத்தை உருவாக்குகின்றது என்றும் கூறினார் திருத்தந்தை.
ஓர் அரசு மனிதனுக்கு பணியாற்றவில்லை என்றால் அது உண்மையான ஜனநாயக அரசு அல்ல என்றும் தான் இருக்கின்ற சமூகத்தை மதிக்கவில்லை என்றால், அது மனிதனின் மாண்பு, சுதந்திரம் மற்றும் சுயாட்சியை அதன் உயர்ந்த குறிக்கோளாகக் கொண்டிருக்கவில்லை என்றும் வலியுறுத்திய ஆல்டோ மோரோ அவர்களின் கருத்தை நினைவுகூர்ந்தார் திருத்தந்தை.
குணப்படுத்தப்பட்ட இதயமான ஜனநாயகம்
ஜனநாயகம் என்பது குணப்படுத்தப்பட்ட இதயமாக, சமூக வாழ்க்கையில் பல இதயங்களை மீட்டெடுப்பது மிக அவசியம் என்றும், படைப்பாற்றலை கடைப்பிடித்தல், குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் வாழ்க்கையில் தூய ஆவியின் செயல்பாட்டின் பல அடையாளங்களைக் காணுதல், தொழிலாளர் உரிமைகளை மீட்டெடுத்தல். ஒருங்கிணைந்த சூழலை உருவாக்குதல், மிக அவசியம் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
பங்கேற்பு இல்லாத அரசியலுக்கு மேற்கூறிய அனைத்தும் பொருந்தாது என்று கூறிய திருத்தந்தை அவர்கள், அரசியலின் இதயம் பங்கேற்பது என்றும், பங்கேற்பு என்பது முழு கவனிப்பு மற்றும் தொண்டுடன் செய்யப்படும் காரியம் மட்டுமல்ல, அதை ஒட்டுமொத்தமாகக் கவனித்துக்கொள்வது என்றும் கூறினார்.
சகோதரத்துவ உறவானது சமூக உறவுகளை மலரச் செய்கிறது என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், ஒருவரையொருவர் கவனித்துக் கொள்வதற்கும், தன்னைச்சுற்றியுள்ள அனைவரையும் தன் மக்களாகக் கருதுவதற்கும் அனைவருக்கும் துணிவு வேண்டும் என்றும் கூறினார்.
எளிதான தீர்வுகளைக் கண்டு ஏமாற வேண்டாம். அதற்குப் பதிலாக பொதுநலனில் ஆர்வம் காட்டுவோம். ஜனநாயகம் என்பது ஒரு வெற்றுப் பெட்டியல்ல, மாறாக மனிதனின் மதிப்புகள், சகோதரத்துவம் மற்றும் ஒருங்கிணைந்த சூழலியல் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.
நம்பிக்கையில்லாமல் நிகழ்காலத்தை நிர்வகித்தால் நம்மால் எதிர்காலத்தை உருவாக்க முடியாது என்றும், நம்பிக்கையின்றி நாம் நிர்வகிப்பவர்களாக சமநிலைப்படுத்துபவர்களாக இருக்கலாம் ஆனால் இறைவாக்கினரகளாகவும் எதிர்காலத்தை கட்டமைப்பவர்களாகவும் நம்மால் இருக்க முடியாது என்று கூறினார் திருத்தந்தை.
ஜனநாயகத்தின் கைவினைஞர்களாகவும், பங்கேற்பின் சாட்சிகளாகவும் இருக்க அவர்களை வாழ்த்திய திருத்தந்தை அவர்களுக்குத் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்