திரியெஸ்தே நகரில் திருத்தந்தை பிரான்சிஸ்

உள்ளூர் நேரம் காலை 7மணி 54 நிமிடங்களுக்கு திரியெஸ்தே நகர் வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 50 ஆவது கத்தோலிக்க சமூக வாரக்கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் ஏறக்குறைய 1200 பேரைச் சந்தித்து மகிழ்ந்தார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஜூலை 7 ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு நாள் திருப்பயணமாக ஸ்லோவேனியா நாட்டிற்கு அருகிலுள்ள இத்தாலிய நகரான திரியெஸ்தே நருக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூலை 7 ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்குத் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திலிருந்து ஹெலிகாப்டர் என அழைக்கப்படும் வானூர்தியில் புறப்பட்டு வடக்கு இத்தாலியின் திரியெஸ்தே நகர் நோக்கிப் பயணமானார் திருத்தந்தை.

ஏறக்குறைய உள்ளூர் நேரம் காலை 7மணி 54 நிமிடங்களுக்கு திரியெஸ்தே நகர் வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 50 ஆவது கத்தோலிக்க சமூக வாரக்கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் ஏறக்குறைய 1200 பேரைச் சந்தித்து மகிழ்ந்தார்.

கடந்த ஜூலை 3 முதல் 7 ஆம் தேதி வரை திரியெஸ்தே நகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 50ஆவது இத்தாலிய கத்தோலிக்க சமூக வாரத்தின் நிறைவில் பங்கேற்கும் பொருட்டு அந்நகருக்குச் சென்ற திருத்தந்தை அவர்கள், அக்கூட்டத்தில் பங்கேற்று அங்குள்ளவர்களுக்கு உரையாற்றினார்.

கூட்டத்தின் நிறைவில் அங்குள்ளவர்களை வாழ்த்தி விடைபெற்ற திருத்தந்தை அவர்கள் கிறிஸ்தவ ஒன்றிப்பு சபைகளின் உறுப்பினர்கள் கல்வியாளர்கள், புலம்பெயர்ந்தோர், மற்றும் மாற்றுத்திறனாளிகளை தனித்தனிக் குழுக்களாகச் சந்தித்தார்.

அதன்பின் அங்கிருந்து விடைபெற்று Unità d'Italia வளாகம் சென்ற திருத்தந்தை அவர்கள் அங்கு பொதுமக்களுக்குத் திருப்பலி நிறைவேற்றும்முன் திரியெஸ்தே நகரில் வசிக்கும் 111 வயது மூதாட்டியான மரியா என்பவரைச் சந்தித்து வாழ்த்தினார்.

Unità d'Italia வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை அவர்கள், திருப்பலியின் நிறைவில் மூவேளை செப உரையினையும் அதனைத்தொடர்ந்த செப விண்ணப்பங்களையும் மக்களுக்கு வழங்கினார். இறுதியாகக் கூடியிருந்த மக்கள் அனைவருக்கும் இறைவனின் ஆசீர் நிறைவாக வேண்டி தன் சிறப்பு அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.  

தனது ஒரு நாள் திருப்பயணமாக வடக்கு இத்தாலியின் திரியெஸ்தே நகர் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் உள்ளூர் நேரம் பிற்பகல் 1 மணி 57 நிமிடங்களுக்கு வத்திக்கானில் உள்ள சாந்தா மார்த்தா இல்லம் திரும்பினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 July 2024, 14:46