1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அன்னை மரியாவின் திருஉருவத்தின் முன்பு திருத்தந்தை 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அன்னை மரியாவின் திருஉருவத்தின் முன்பு திருத்தந்தை  

1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த மரியன்னை திரு உருவத்தைப் போற்றும் திருத்தந்தை!

கிறிஸ்துவின் சீடரும் திருஅவையின் தாயுமான அன்னை மரியாவின் கரங்களில் உங்களை ஒப்படைத்து, உங்களின் பணிகளில் நீங்கள் அருளின் வாய்க்கால்களாகவும், மகிழ்ச்சிதரும் நற்செய்தி அறிவிப்பின் கருவிகளாகவும் இருங்கள் : திருத்தந்தை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

பிறரன்புப் பணிகள், அமைதியைக் கட்டியெழுப்புதல் மற்றும் நற்செய்தி அறிவிப்புப் போன்ற உங்களின் பணியைத் தொடர உங்களை நான் ஊக்குவிக்கிறேன் என்று இறையன்னை துறவு சபையினருக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தி ஒன்றில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜூலை 17, இப்புதனன்று, உரோமையின் வெனேசியா சதுக்கத்தில் அருகிலுள்ள பழமைவாய்ந்த அன்னை மரியாவின் திரு உருவத்தை நிறுவியதன் 1500-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வேளை, இறையன்னை துறவு சபையினரின் அதிபர் தந்தை Antonio Piccolo அவர்களுக்கு அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.

இந்த மகிழ்ச்சித் தரும் தருணம், 1601-ஆம் ஆண்டு முதல் அன்னை மரியாவின் அருள்காவலில் ஒப்படைக்கப்பட்ட உங்கள் துறவற குடும்பத்துடன் இணைந்து உங்களுக்காக இறைவேண்டல் செய்வதற்கு எனக்கு அருமையானதொரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

524-ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி, உரோமைப் பெண்மணியான புனித கல்லாவின் இல்லத்தில், 524-ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் தேதியன்று, அன்னை மரியாவின் பக்தி அதிசயமான காட்சியுடன் தொடங்கியது என்று நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை, இதனை மரியன்னையின் திருத்தலமாகவும், பிறரன்புப் பணி இல்லமாகவும் மாற்றியவர் திருத்தந்தை புனித முதலாம் யோவான் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களை வரவேற்கும் பழக்கத்தை மேம்படுத்துவதற்கும், நாம் வாழும் இடங்கள் மற்றும் கோவில்கள் உலகிற்கு ஆறுதல் அளிக்கும் ஒரு திறந்த புகலிடமாக இருக்கவும், இது உங்களுக்கு ஒரு அழைப்பு என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை,  இவ்வழைப்பு வறுமையின் பல வடிவங்களில் வாழும் மனிதருக்கு ஆறுதலையும் உதவியையும் வழங்குகிறது என்றும் எடுத்துக்காட்டியுள்ளார்.

திருஅவை ஒரு நெருக்கடியான தருணத்தில் இருந்தபோது, தூய கன்னி மரியா தன்னை வெளிப்படுத்தினார் என்று உரைத்த திருத்தந்தை, அரசியல் சதிகள் மற்றும் சகோதரப் போர்களுக்குப் பிணையக் கைதியாகி, தன் நம்பிக்கையைத் துறக்காமல், துயருற்று, அமைதிக்காக இறக்கும் நிலையில் இருந்த திருத்தந்தை புனித முதலாம் யோவானின் மீது தனது இரக்கத்தை காட்டியவர் நம் அன்னை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மோதல்கள் நிறைந்த இவ்வுலகின் தற்போதைய சூழ்நிலையில், அமைதியை மேம்படுத்துவதற்கான அவசரத்தை நாம் எவ்வாறு புரிந்து கொள்ளாமல் இருக்க முடியும் என்றும், அமைதிக்காக இறைவேண்டல் செய்யாமல் எப்படி இருக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் திருத்தந்தை.

சகோதரத்துவ வாழ்க்கையின் முன்மாதிரியானது, நீங்கள் மேய்ப்புப் பணியை வழங்குகின்ற விசுவாசிகளுக்கு நற்செய்தியின் வழியாக ஈர்ப்புமிக்கதாக இருக்க வேண்டும் என்றும், இதனால் ஆறுதல் மற்றும் உறுதியான நம்பிக்கையின் அடையாளமாக அன்னை மரியாவைப் பார்க்க வேண்டும் என்றும் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை.

ஆகவே, கிறிஸ்துவின் சீடரும் திருஅவையின் தாயுமான அன்னை மரியாவை நோக்கி, முற்போக்கான பாதையில், உங்கள் துறவு சபையின் ஒருங்கிணைந்த உருவாக்கத்தைக் கவனித்துக் கொள்ளுமாறு நான் உங்களை ஊக்குவிக்கிறேன் என்று கூறிய திருத்தந்தை, உங்கள் பணிகளில் அருளின் வாய்க்கால்களாகவும், மகிழ்ச்சிதரும் நற்செய்தி அறிவிப்பின் கருவிகளாகவும் இருங்கள் என்று கூறி தனது வாழ்த்துச் செய்தியை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 July 2024, 12:36