இயேசுவின் திருநற்கருணை அன்பை பகிர்ந்துகொள்ள உதவுங்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
உதவி தேவைப்படும் நிலையில் இருக்கும் அனைவருக்கும் இயேசுவின் திருநற்கருணை அன்பை பகிர்ந்துகொள்ள பலிபீட உதவியாளர்கள் முன்வரவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருச்சடங்குகளில் உதவிபுரியும் சிறார் சிறுமிகள் பங்கேற்கும் அனைத்துலக திருப்பயணத்தையொட்டி உரோம் நகர் வந்திருந்த அவர்களை ஜூலை 30 மாலை வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பலிப்பீட உதவியாளர்களின் இந்த திருப்பயணத்திற்கு எசாயா நூலின் வார்த்தைகளான “நான் உன்னுடன் இருக்கிறேன்” (எசா 41:10) என்பது தலைப்பாக எடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, இவ்வார்த்தைகள் அன்பின் மறையுண்மையையும் அதன் வழி நம் வாழ்வின் இரகசியத்தையும் வெளிப்படுத்தி நிற்கின்றன என்றார்.
ஐந்து நாள் திருப்பயணத்தையொட்டி உரோம் நகர் வந்திருந்த ஏறக்குறைய 50,000 பலிபீட இளம் உதவியாளர்களை இத்திருப்பயணத்தின் இரண்டாம் நாளன்றே சந்தித்த திருத்தந்தை, நான் உன்னுடன் இருக்கிறேன் என்ற எசாயா நூல் வார்த்தைகள், திருநற்கருணையில் இயேசு, உடல் மற்றும் இரத்தமாக உடனிருக்கிறார் என்பதும், நாம் அவரை உணவாகப் பெறும்போது அவர் நம்மோடு ஆன்மீக முறையிலும், உடல் ரீதியாகவும் உடனிருக்கும் அதேவேளை நாமும் அவரோடு இருக்கிறோம் என்பதும் உண்மையாகிறது என உரை வழங்கினார்.
திருநற்கருணை விருந்தின்போது இயேசுவை நோக்கி பலிபீட உதவியாளர்கள், ‘நானும் உம்மோடு இருக்கிறேன்’ எனக் கூறமுடியும், அதுவும் வார்த்தைகளால் அல்ல, தங்கள் இதயத்தோடும் உடலோடும் அன்போடும் காட்டமுடியும் என அவர்களிடம் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருச்சடங்குகளில் நாம் முழு மனதோடும், இதயத்தோடும், உடலோடும் உதவிபுரியும்போது நம்மோடு இருக்கும் இயேசுவின் மறையுண்மை நம்மை ஒரு புதிய வழியை நோக்கி இட்டுச் செல்கிறது, அதாவது, நான் உங்களை அன்பு கூர்ந்ததுபோல் நீங்களும் ஒருவரையொருவர் அன்புகூருங்கள் என்பதை நோக்கி என பலிபீடச்சிறார்- சிறுமிகளிடம் உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நான் உன்னோடு இருக்கிறேன் என்ற இயேசுவின் அன்பு, நம்மால் பிறருடன் பகிரப்பட்டு நம் அனைவரோடும் இயேசு இருப்பதற்கு நாம் உதவ வேண்டும் என்ற திருத்தந்தை, கிறிஸ்துவோடு இருப்பது என்பது, நமக்கு அடுத்திருப்பவர்களுடனும் நெருக்கமாக இருப்பதை குறிப்பிடுகிறது என்பதால் நமக்கு பிடிக்காதவர்கள், கடவுள் நம்பிக்கையற்றவர்கள் என அனைவரிடமும் நாம் நெருக்கமாக இருப்பதை இறையன்பு எதிர்பார்க்கிறது என்றார்.
பலிபீட உதவியாளர்களுடனான இந்த சந்திப்புக்கு ஏற்பாடுச் செய்த அனைவருக்கும் தன் நன்றியை வெளியிட்ட திருத்தந்தை, நாம் இயேசுவைச் சார்ந்தவர்கள் என்ற மகிழ்வைப் பகிரவும், அன்பின் பணியாளர்களாகவும், நம் காயங்களைக் குணப்படுத்தும் இயேசுவின் காயப்பட்ட இதயத்தின் சேவகர்களாகவும் உரோம் நகர் வந்துள்ள பலிபீட உதவியாளர்களுக்கும் தன் நன்றியையும் பாராட்டையும் வெளியிட்டார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்