இணைப்பின் பாலங்களை உருவாக்குபவர்களாக இருங்கள் – திருத்தந்தை
மெரினா ராஜ் - வத்திக்கான்
இளைஞர்களே! சமூக ஊடகங்களைப் பயன்படுத்துங்கள், ஆனால் மெய்நிகர் வாழ்க்கை (virtual life) எனப்படும் இணையதள வாழ்க்கையிலேயே நிலைத்து நின்று விடாதீர்கள்! என்றும் நம்பிக்கையைத் தாங்குபவர்களாக, இணைப்பின் பாலங்களை உருவாக்குபவர்களாக இருங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
உரூமேனியாவில் உள்ள லாசி மறைமாவட்ட இளைஞர்கள் திருத்தந்தைக்கு அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக அனுப்பப்பட்ட திருத்தந்தையின் பதில் கடிதமானது திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்களின் கையொப்பமிடப்பட்டு மறைமாவட்ட ஆயர் Iosif Păuleț அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மறைமாவட்ட அளவிலான இளைஞர் கூட்டத்தில் பங்கேற்று திருத்தந்தையின் சார்பாக உரையாற்றினார் கர்தினால் பரோலின். அவ்விளைஞர்கள் திருத்தந்தைக்கு அனுப்பிய கடிதத்திற்குப் பதிலளிக்கும் விதமாகவும் இளைஞர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் இவ்வாறு பதிலளித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
துணிவு மற்றும் படைப்பாற்றல் கொண்டு இணையதளத்தை இளைஞர்கள் பயன்படுத்த வேண்டும் என்றும், நட்பு, அமைதி, இனம் மற்றும் கலாச்சாரத்திற்கு இடையிலான உரையாடல், குடும்பம், கிறிஸ்தவ விழுமியங்கள் போன்றவற்றை மேம்படுத்தும் சமூக வலைப்பின்னல்களை இளைஞர்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
தொலைபேசிக்கு அடிமைகளாக மாறுவதைத் தவிர்த்து உலகை நோக்கிச்செல்லுங்கள், உடன் வாழும் சகோதர சகோதரிகளை நேரில் காணுங்கள் என்றும், "நம்பிக்கையைத் தாங்குபவர்களாக, பாலங்களைக் கட்டுபவர்களாக, உலகில் நன்மையையும் அன்பையும் விதைக்க உங்களிடம் உள்ள ஒவ்வொரு கருவியையும் பயன்படுத்துபவர்களாக இருங்கள் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை
தங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் இணையதள வாழ்க்கையிலிருந்து தங்களை இளைஞர்கள் காத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உண்மையான செல்வம் என்பது நேரடியான தொடர்பிலும் உறவிலும் உள்ளது என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
"உலகிற்குள் செல்லுங்கள், மக்களைச் சந்தியுங்கள், அவர்களின் கதைகளைக் கேளுங்கள், சகோதர சகோதரிகளின் கண்களைப் பாருங்கள் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், உண்மையான செல்வம் என்பது ஒவ்வொரு நாளும் நேரடியாக சந்தித்து நேர்மையான உறவில் வாழும் மனித உறவுகளில் உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வருகின்ற செப்டம்பரில் பிராசோவ் மாவட்டத்தில் நடைபெறும் தேசிய இளைஞர் கூட்டத்தில் பங்கேற்க அவ்விளைஞர்களுக்கு அழைப்புவிடுத்துள்ள திருத்தந்தை அவர்கள் நம்பிக்கையில் ஒன்றிணைந்து வளரவும், "அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், கிறிஸ்தவ பயணத்தை வலுப்படுத்தவும் ஒரு மதிப்புமிக்க வாய்ப்பாக இக்கூட்டம் இருக்கும் என்றும் அக்கடிதத்தில் எழுதியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்