Medjugorje அன்னை ஆலயத்தில் இளைஞர்கள் Medjugorje அன்னை ஆலயத்தில் இளைஞர்கள் 

கிறிஸ்துவின் உண்மையான சீடர்களாக வாழுங்கள்

நற்செய்தியை அறிவித்தல் என்பது அருள்பணியாளர்கள் மற்றும் துறவறத்தாருக்கு மட்டுமான கடமை அல்ல, அது இளைஞர்களுக்குமானது

மெரினா ராஜ் - வத்திக்கான்

இளைஞர்கள் கிறிஸ்துவின் உண்மையான சீடர்களாக வாழ அழைக்கப்படுகின்றார்கள் என்றும், வாழ்க்கைக்கு வழிகாட்டும் திசைகாட்டியான நற்செய்தியை எப்போதும் இளைஞர்கள் தங்களுடன் வைத்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 1 வெள்ளிக்கிழமை முதல் 6 செவ்வாய்க்கிழமை வரை அன்னை மரியாவின் திருத்தலமான Medjugorje இல் “மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்” என்ற கருப்பொருளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 35 ஆவது இளையோர் விழாவில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தலைவராம் இயேசுவின் முன்னிலையில் இறைவார்த்தையைத் தியானிக்க நம்மை அர்ப்பணிக்கவும், இதன் வழியாக நமது எண்ணம் ஒளிபெற்று, நம் ஒவ்வொருவருக்கும் இறைவன் வைத்திருக்கும் திட்டத்தைக் கண்டறிந்து அதற்கேற்ப ஒத்துழைத்து வாழவும் அருள்வேண்டுவோம் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“மறைநூல்களை அறியாதிருப்பது கிறிஸ்துவை அறியாதிருப்பது” என்ற தூய ஜெரோலோமோவின் வார்த்தைகளை நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை அவர்கள், திருநற்கருணை, ஒப்புரவு அருளடையாளம் போன்றவற்றின் ஆற்றலினால் இளைஞர்கள் பலப்படுத்தப்பட வேண்டும் என்றும், திருநற்கருணை ஆராதனையின் வழியாக இதயத்தோடு இதயமாக இயேசுவைச் சந்திக்கவேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

நற்செய்தியை அறிவித்தல் என்பது அருள்பணியாளர்கள் மற்றும் துறவறத்தாருக்கு மட்டுமான கடமை அல்ல, அது இளைஞர்களுக்குமானது என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், கிறிஸ்துவின் உண்மையான சீடர், அறிவிலும் தூய ஆவியின் ஆற்றலிலும் உறுதியாக மாறுவதன் வழியாக இறையரசை மற்றவர்களுக்கு எடுத்துச்செல்கின்றார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குடும்பம், பள்ளி, பணிச்சூழல் ஓய்வுநேரம் என எல்லா இடங்களிலும் இயேசுவைப் பற்றித் துணிவுடன் எடுத்துரைக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும் என்றும், நற்செய்தியை எப்போதும் தங்களுடன் எடுத்துச் செல்வபர்களாக இளைஞர்கள் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

அன்றாட அலுவல்கள், நற்செய்தியுடன் இணைந்து எடுக்கும் ஒவ்வொரு உறுதியான முடிவுகள் போன்றவற்றில் கிறிஸ்துவின் பிரசன்னத்தை வெளிப்படுத்தும் நற்செய்தியின் துணிச்சலான சீடர்களாகவும், புதிய மனித குலத்தை உருவாக்குபவர்களாகவும் இளைஞர்கள் இருக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகின்றார் என்று கூறியுள்ளார் திருத்தந்தை.

திருஅவையின் தாயான அன்னை மரியா, கடவுளுடன் பேசுவதற்கும், கடவுளைப் பற்றிப் பேசுவதற்கும், ஆற்றலையும் ஞானத்தையும் தர வேண்டி, இளைஞர்களை அன்னை மரியிடம் ஒப்படைத்து செபிப்பதாகவும், நம்பிக்கை, அன்பு, மற்றும் அமைதியை உலகிற்கு எடுத்துரைப்பவர்களாக இருக்க செபிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 August 2024, 14:59