காசாவில் போர் நீங்கி அமைதித் திரும்ப திருத்தந்தை வேண்டுகோள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
அமைதியின் அரசியாகிய அன்னை மரியாவிடம் ஆறுதல், அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் எதிர்காலத்தைப்பெற ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்வோம் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆகஸ்ட் 15, இவ்வியாழனன்று, அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழா சிறப்பிக்கப்பட்ட வேளை, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய சிறப்பு மூவேளை செப உரைக்குப் பின்பு உக்ரைன், மத்திய கிழக்கு, பாலஸ்தீனம், இஸ்ரேல், சூடான், மியான்மர் ஆகிய நாடுகளின் மக்களை நினைவு கூர்ந்த திருத்தந்தை இவ்வாறு இறைவேண்டல் செய்ய அழைப்பு விடுத்தார்.
போர்நிறுத்தம் ஏற்படட்டும்
மனிதாபிமான நெருக்கடி மற்றும் பேரழிவு நிலையை எட்டியுள்ள காசாவில் துயருறும் மக்களுக்காக இறைவேண்டல் செய்த திருத்தந்தை, அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தம் ஏற்படவும், பிணையக்கைதிகளை விடிவிக்கவும், சோர்வடைந்த மக்களுக்கு உதவவும் வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.
மோதலின் அதிகரிப்பைத் தவிர்க்க எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளையும் தான் ஊக்குவிப்பதாகக் கூறிய திருத்தந்தை, பேச்சுவார்த்தை மற்றும் உரையாடலின் பாதைகள் தொடரப்பட வேண்டும் எனவும், அப்போதுதான் இந்தச் சோகத்திற்கு ஒரு முடிவு கட்டமுடியும் எனவும் கூறியதுடன், போர் என்பது எப்போதும் தோல்வியைக் குறிக்கிறது என்பதையும் மீண்டும் நினைவூட்டினார்.
40,000 பேர் படுகொலை
ஹமாஸ் மற்றும் இஸ்ரயேலுக்கு இடையேயான இப்போரில் காசா பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதலில் 40,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 92,400-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று ஆகஸ்ட் 15, இவ்வியாழனன்று காசாவின் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்