சீனா குறித்த திருத்தந்தையின் நேர்முகம் சீனா குறித்த திருத்தந்தையின் நேர்முகம்  (Society of Jesus, Chinese Province)

சீனாவின் Sheshan திருத்தலத்திற்குச் செல்ல திருத்தந்தை ஆர்வம்

நம்பிக்கையின் ஆசிரியர்களாகவும், காத்திருப்பதில் பொறுமையைக் கடைபிடிப்பவர்களாகவும் இருக்கும் சீன விசுவாசிகளுக்கு திருத்தந்தை பாராட்டு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

இயேசு சபையினரின் சீன மாகாண பத்திரிகை அலுவக இயக்குனர் அருள்பணி Pedro Chia அவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய நேர்முகம், நம்பிக்கையையும் ஆசீரையும் அனைத்து சீன மக்களுக்கும் வழங்குவதாக இருந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்தந்தையின் தனிப்பட்ட அனுபவங்களுடன் ஓர் ஆழமான ஆன்மீக கண்ணோட்டத்தைக் கொண்டதாக இருந்தது என்றும், சீனாவிலுள்ள  Sheshan சகாய அன்னை திருத்தலத்திற்கு திருப்பயணம் மேற்கொள்வதற்கு திருத்தந்தை கொண்டிருக்கும் ஆவல் இந்த நேர்முகத்தின்போது மீண்டும் வெளிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஆயர்களையும் இறை விசுவாசிகளையும் தான் நேரில் சென்று சந்திக்க ஆவல் கொண்டுள்ளதாக அந்த நேர்முகத்தில் உரைக்கும் திருத்தந்தை, நம்பிக்கையின் ஆசிரியர்களாகவும், காத்திருப்பதில் பொறுமையைக் கடைபிடிப்பவர்களாகவும் இருக்கும் சீன விசுவாசிகளுக்கு நம்பிக்கையின் செய்தியை இந்த நேர்முகத்தின் வழி வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

மிக உயரிய மக்களாகிய சீனர்கள் தங்கள் பாரம்பரியத்தை முன்னோக்கி பொறுமையுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவை குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்தும் தன் நேர்முகத்தில் குறிப்பிட்ட திருத்தந்தை, அனைத்து விமர்சனங்களும் இறைவனின் ஆறுதலால் தீர்வைக் காண்கின்றன என குறிப்பிட்டதுடன், தன் பணிக்காலத்தில் சந்தித்த சவால்களாக, கோவிட் பெருந்தொற்று, தற்போது உக்ரைன், மியான்மார் மற்றும் மத்தியக்கிழக்கில் இடம்பெற்றுவரும் போர்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.

தான் இயேசு சபையில் துறவியாக இருந்தபோது எதிர்கொண்ட நெருக்கடிகள், இயேசுசபையினர் 2019ஆம் ஆண்டு முதல் பத்து ஆண்டுகளுக்கு என வகுத்துள்ள திட்டங்களான,  ஆன்மீக நடவடிக்கைகளையும் தேர்ந்து தெளிதலையும் முன்னேற்றல், ஏழைகள் மற்றும் கைவிடப்பட்டோருடன் இணைந்து நடத்தல், நம் நம்பிக்கையின் வருங்காலத்தை உருவாக்க இளையோருடன் நடைபோடுதல், பொது இல்லமாகிய இப்பூமி குறித்து அக்கறையுடன் செயல்படுதல் போன்றவைகளையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

இறைவேண்டலின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை, செபத்தில் இறைவன் நம்மோடு உரையாடுகிறார் என்பதையும் நினைவூட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 August 2024, 15:59