150 ஆவது பன்னாட்டு திருநற்கருணை மாநாட்டிற்கு திருத்தந்தை செய்தி
மெரினா ராஜ் – வத்திக்கான்
எக்குவதோரில் நடைபெற உள்ள பன்னாட்டு திருநற்ருணை மாநாட்டிற்கு கரகாஸ் உயர்மறைமாவட்ட பேராயர் கர்தினால் Baltazar Enrique Porras Cardozo அவர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வருகின்ற செப்டம்பர் 8 முதல் 15 வரை நடைபெற உள்ள பன்னாட்டு திருநற்கருணை மாநாடானது எக்குவதோர் இயேசுவின் திருஇருதயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டதன் 150 ஆண்டு நிறைவையொட்டி குயிட்டோ நகரில் கொண்டாடப்பட இருக்கின்றது.
“அப்பம் ஒன்றே. ஆதலால் நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம். ஏனெனில், நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில் தான் பங்கு கொள்கிறோம்” என்ற திருத்தூதர் பவுலின் வார்த்தைகளை மேற்கோள்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருநற்கருணை வழிபாட்டில் கடவுள் மீதான அன்பும், அண்டை வீட்டாரின் அன்பும் உண்மையாக ஒன்றுபட்டுள்ளன என்றும் வார்த்தை மனுஉருவான இறைவன் நம் அனைவரையும் தன்னிடம் இழுக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இயேசுவின் திருஇருதயமானது நிலையான அன்பின் உருவத்தை நமக்கு வெளிப்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், காயம்பட்ட உலகத்தை குணப்படுத்த நாம் ஒன்றாக ஒரு சகோதரத்துவத்தை உருவாக்குவது மிக அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஒரே மனித இனமாக, ஒன்றிணைந்து பயணிப்பவர்களாக இப்பூமியின் குழந்தைகளாக வாழ, கடவுளின் கொடையை உயிர்த்தெழுப்ப திருநற்கருணை மாநாடு அழைப்புவிடுக்கின்றது என்றும், கிறிஸ்துவின் இதயத்தில் இருந்து வரும் நற்கருணை அன்பிலிருந்து அனைத்து நாடுகளையும் சகோதரர்களாக அங்கீகரிக்கவும், ஒன்றுபட்ட, ஒரே தந்தையின் குழந்தைகள் மற்றும் சகோதரத்துவத்தை உருவாக்குபவர்களாக வாழவும் நாம் அழைக்கப்படுகின்றோம் என்றும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்