மரணதண்டனை சமூகத்திற்கு கொடிய விடம் – திருத்தந்தை
மெரினா ராஜ் - வத்திக்கான்
அப்பாவி மக்களைப் பாதிக்கக்கூடிய வன்முறைகளுக்கு மரண தண்டனை எந்த வகையிலும் தீர்வாகாது என்றும், மரணதண்டனைகள், நீதியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, பழிவாங்கும் உணர்வைத் தூண்டுகின்றன, இது நமது நாகரிக சமூகத்திற்கு ஆபத்தான ஒன்றாக விடமாக மாறுகின்றது என்றும் விவரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை “இறப்பின் கையில் ஒரு கிறிஸ்தவன். தீர்ப்பிடப்பட்டவர்களின் அருகில் எனது பணி” என்ற எழுத்தாளார் டெல் ரெசினெல்லாவின் புத்தகத்திற்கு எழுதியுள்ள முன்னுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நற்செய்தி என்பது நமது வாழ்க்கையை மாற்றக்கூடிய வாழும் நபரான இயேசுவுடனான சந்திப்பு என்றும், நமது வாழ்க்கைத் திட்டங்கள் மற்றும் முன்னோக்குகளில் புரட்சியை ஏற்படுத்தக்கூடியவர் இயேசு என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இயேசுவை அறிதல் என்பது நமது இருப்பை அர்த்தத்துடன் நிரப்புவது, ஏனென்றால் இறைவன் நமக்கு மறைந்து போகாத நிலையான கடவுளின் மகிழ்ச்சியை வழங்குகிறார் என்றும், கடவுளின் அன்பு எல்லையற்றது, அளவற்றது என்பதை புரிந்துகொண்டு டெல் ரேசினெல்லா தனது வாழ்வால் சான்றுபகர்கின்றார் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.
நம்முடைய மிக மோசமான பாவங்களின்போது கூட நாம் கடவுளுடைய குழந்தைகள் என்ற முறையில் அவரது பார்வையின் அளவு மாறவில்லை என்றும், அவரால் நாம் தொடர்ந்து அன்பு செய்யப்படுகின்றோம், அவரது பார்வையில் விலைமதிப்பற்றவர்களாக கருதப்படுகிறோம் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.
ஒசர்வாத்தோரே ரோமானோ பத்திரிக்கையின் வழியாக டெல் ரேசினெல்லாவின் கட்டுரைகளை, தான் பல ஆண்டுகளுக்கு முன்பே படித்ததாகக் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை அவர்கள், இதயத்தைத் தொடும் கருத்துக்களை உள்ளடக்கியதாக இப்புத்தகம் இருக்கின்றது என்றும் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மரணதண்டனைக் கைதிகள் அனுபவிக்கக்கூடிய துன்பங்கள் பற்றிக்கூறும் இப்புத்தகம் குறித்து எடுத்துரைக்கையில், அப்பாவி மக்களைப் பாதிக்கக்கூடிய வன்முறைகளுக்கு மரண தண்டனை எந்த வகையிலும் தீர்வாகாது என்றும், மரணதண்டனைகள், நீதியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, பழிவாங்கும் உணர்வைத் தூண்டுகின்றன, இது நமது நாகரிக சமூகத்திற்கு ஆபத்தான ஒன்றாக மாறுகின்றது என்றும் விவரித்துள்ளார் திருத்தந்தை.
மரணதண்டனைக் கைதிகள்
கைதிகளை சிறையில் அடைத்து வைக்க பணம் மற்றும் பொருள்களை முதலீடு செய்வதை விட, சிறைக்கைதிகள் வாழ்வதற்கும் சிறையிலிருந்து வெளியேறி புதிய வாழ்க்கை வாழவும் உண்மையிலேயே மாற்றுவதற்கான வாய்ப்பை அனுமதிப்பதில் மாநிலங்கள் அக்கறை கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை.
அமெரிக்காவில் வாழ்ந்துவரும் டெல் ரேசினெல்லா அவர்களின் வாழ்க்கையானது தலத்திருஅவைக்கும் சமூகத்திற்கும் ஒரு சிறந்த பரிசு என்றும், மனிதாபிமானமற்ற மரணதண்டனை வழக்கப்படும் இடத்தில் ஒரு சாதாரண பணியாளராக தன்னை அர்ப்பணித்து கடவுளின் எல்லையற்ற கருணைக்கு உயிருள்ள மற்றும் உணர்வுமிக்க சாட்சியாகத் திகழ்கின்றார் என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.
இரக்கத்தின் சிறப்பு யூபிலி ஆண்டு நமக்குக் கற்பித்தபடி, நம்முடைய ஒரு பாவமோ, ஒரு தவறோ அல்லது நம்முடைய ஒரு செயலோ நம்மை இறைவனிடமிருந்து நிரந்தரமாக தூரமாக்கும் என்று நாம் ஒருபோதும் நினைக்கக்கூடாது என்றும், அவருடைய இதயம் ஏற்கனவே நமக்காக சிலுவையில் அறையப்பட்டுள்ளது, கடவுளால் மட்டுமே நம்மை மன்னிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்