பன்னாட்டு கத்தோலிக்க சட்டஅமைப்பாளர் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் திருத்தந்தை பன்னாட்டு கத்தோலிக்க சட்டஅமைப்பாளர் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் திருத்தந்தை  (Vatican Media)

போர் நம்பிக்கையைத் தருவதில்லை – திருத்தந்தை

ஒவ்வொரு போரும் உலகை மிக மோசமாக மாற்றிவிடுகின்றது. போர் என்பது அரசியல் மற்றும் மனித நேயத்தின் தோல்வி - திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் – வத்திக்கான்

மோதல்களைத் தீர்த்தல், நீதியை நிலைநாட்டுதல் போன்றவற்றிற்காகப் போரைக் கட்டாயம் கைவிட வேண்டியநிலை உள்ளது என்றும், ஒவ்வொரு போரும் உலகை மிக மோசமாக மாற்றிவிடுகின்றது. போர் என்பது அரசியல் மற்றும் மனித நேயத்தின் தோல்வி என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 24 சனிக்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் பன்னாட்டு கத்தோலிக்க சட்டஅமைப்பாளர் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஏறக்குறைய 170 பேரை அவர்கள் வலையமைப்பின் 15ஆவது கூட்டத்திற்காக சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்,

“உலகில் போர் : நிரந்தரமான நெருக்கடிகள் மற்றும் மோதல்கள் நமக்கு என்ன அர்த்தத்தைக் கொடுக்கின்றன?” என்ற கருப்பொருளை 15ஆவது கூட்டத்திற்காக பன்னாட்டு கத்தோலிக்க சட்டஅமைப்பாளர் கூட்டமைப்பினர் தேர்ந்தெடுத்துள்ள நிலையில் அதனைக் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், மோதல்களும் நெருக்கடிகளும் பன்னாட்டு சமூகத்தின் முயற்சிகளை அச்சுறுத்துகின்றது என்றும் கூறினார்.

போர் என்பது நம்பிக்கையல்ல. நம்பிக்கையைத் தருவதுமில்லை என்றும், மோதலிலிருந்து தனியாக வெளிவர முடியாது. தனியாக யாராலும் வெளிவர முடியாது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருவிவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஏழைகள், விதவைகள் மற்றும் அனாதைகளின் அழுகைக்கு நாம் செவிசாய்க்க வேண்டும் என்றும், போரின் மையத்தில் தீமையின் படுகுழியைப் பார்க்கவும், அமைதியைத் தேர்வுசெய்ய எல்லா வழிகளிலும் தீர்மானிக்கவும் வேண்டும் என்றும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

"உரையாடல் பன்னாட்டு சமூகத்தின் ஆன்மாவாக இருக்க வேண்டும் என்றும், பன்னாட்டு மனிதாபிமான சட்டத்தை நிலைநிறுத்துவதற்கும், அதிகமான முறையில் உறுதியான சட்ட அடித்தளத்தை வழங்குவதற்கும் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

மக்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதிசெய்து, நீண்ட கால மோதல்களைத் தூண்டும் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் அநீதிகளை முறியடித்து, உலகம் முழுவதும் மேலும் தவறுகள் மற்றும் வன்முறைச் செயல்கள் உருவாகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.

போரினால் சோர்வடைந்த நமது உலகம், அதன் கட்டமைப்புகளை நிறுவுவதற்கு வழிவகுத்த நம்பிக்கையின் உணர்வைப் புதுப்பிக்க வேண்டும் என்று தான் பரிந்துரைப்பதாக எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கையின் சாட்சியாக அக்கூட்டமைப்பினர் இருக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

2010ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பன்னாட்டு கத்தோலிக்க சட்டஅமைப்பாளர் கூட்டமைப்பானது, தங்கள் நாடுகளில் ஆற்றும் மக்கள் பணியில், நற்செய்திக்குச் சான்றுகளாய் விளங்குவதன் வழியாக, திருப்பீடத்தின் பணிகளுக்கு ஆதரவாக இருக்கும் வழிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 August 2024, 11:43