திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

நல்ல புத்தகம் வாழ்க்கைக்குப் பயிற்சி அளிக்கிறது – திருத்தந்தை

படிக்கும் பழக்கம் நல்ல பலனைத் தரும், படிப்பதால் கற்பனைத்திறன் பெருகும், படைப்பாற்றல் அதிகரிக்கும், ஒருமுகப்படுத்தும் திறன் வளப்படும், மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறையும். - திருத்தந்தை

மெரினா ராஜ் – வத்திக்கான்

ஒரு நல்ல புத்தகம் மனதை திறக்கிறது, இதயத்தை தூண்டுகிறது, வாழ்க்கைக்கு பயிற்சி அளிக்கிறது என்றும், இலக்கியம் பணியாளர்களின் மனதையும் இதயத்தை பயிற்றுவிக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 4 ஞாயிற்றுக்கிழமை புகுநிலை அருள்பணித்துவ மாணவர்கள், மேய்ப்புப்பணியாளர்கள், மற்றும் அனைத்து கிறிஸ்தவர்களும் வாசிப்பு பழக்கத்தில் ஆர்வத்தை அதிகரித்துக் கொள்ள வலியுறுத்தி அனுப்பிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

படிக்கும் பழக்கம் நல்ல பலனைத் தரும் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், படிப்பதால் கற்பனைத்திறன் பெருகும், படைப்பாற்றல் அதிகரிக்கும், ஒருமுகப்படுத்தும் திறன் வளப்படும், மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறையும் என்றும், புத்தகத்தில் உள்ள கதாபாத்திரங்கள் நம் வாழ்வில் ஏற்படும் சிக்கலான சூழல்களை எதிர்கொள்ள ஆற்றல் அளிக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பணியாளர்களின் இதயத்தையும் மனதையும் இலக்கியம் பயிற்றுவிப்பதால் ஒருவர் சுதந்திரமான பகுத்தறிவு, பணிவான பயிற்சி போன்றவற்றில் வளர்கின்றார் என்றும், வாசிப்பு பழக்கம் மனித மொழிகளின் பன்மைத்தன்மைக்கு பலனளிக்கின்றது, மனித உணர்திறனை விரிவுபடுத்துவதோடு ஒரு சிறந்த ஆன்மிக வெளிப்படைத்தன்மைக்கு வழிவகுக்கின்றது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.

சலிப்பைக் கொடுக்கும் விடுமுறைகள், அதிக வெப்பம், கல்வித்தேர்வுகள், போன்றவற்றினால் சோர்வு, கோபம், ஏமாற்றம், தோல்வி போன்றவை ஏற்படும்போது ஆன்மாவின் அமைதியை நம்மால் காணமுடியாது என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள்,  அத்தகைய நேரங்களில் புத்தக வாசிபானது நமது உள்ளக்கதவுகளைத் திறந்து பரந்துபட்ட நிலையில் நாம் சிந்திக்க நமக்கு உதவும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.

புத்தக வாசிப்பினால் ஒருவன் எழுத்தாளனிடமிருந்து பெறும் செழுமையினால் தன்னை வளப்படுத்திக் கொள்கின்றான் என்றும், வாசிக்கும் பழக்கம் உடையவர்கள் சுறுசுறுப்பானவர்களாக விளங்குகின்றார்கள் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.

இலக்கியங்களை அடிக்கடிப் படிப்பதால் எதிர்கால அருள்பணியாளர்கள் மற்றும் மேய்ப்புப்பணியில் ஈடுபடுபவர்கள் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் முழு மனிதநேயம் கொண்டவர்களாக மாறுகின்றார்கள் என்றும், அவர்களிடத்தில் கிறிஸ்துவின் தெய்வீகம் முழுமையாக ஊற்றப்படுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 August 2024, 13:48