அன்பெனும் நாகரீகத்தைக் கட்டியெழுப்ப உழைக்கும் கடமை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
Knights of Columbus என்ற கத்தோலிக்க உதவி அமைப்பின் 142வது உயர்மட்ட கூட்டத்தையொட்டி வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதிக்காக செபிக்க வேண்டும் எனவும், அன்பெனும் நாகரீகத்தைக் கட்டியெழுப்ப உழைக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களின் கையெழுத்துடன் அனுப்பப்பட்டுள்ள திருத்தந்தையின் செய்தி, Knights of Columbus அமைப்பின் அனைத்துப் பணிகளுக்கும் திருத்தந்தையின் ஆதரவையும் செபத்தையும் வெளியிடுகிறது.
கானடாவின் கியூபெக் நகரில் ஆகஸ்ட் மாதம் 6 முதல் 8 வரை இடம்பெற்ற இந்த உயர்மட்ட அளவிலான கூட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ள திருத்தந்தையின் செய்தி, மறைப்பணி என்ற தலைப்பில் நடந்த இக்கூட்டத்திற்கு வாழ்த்தை தெரிவித்ததோடு, இறைவனாம் கிறிஸ்துவின் அன்பை எதிர்கொண்ட ஒவ்வொரு கிறிஸ்தவரும் மறைப்பணியாளரே என்பதையும் வலியுறுத்திக் கூறியுள்ளது.
நற்செய்தியின் மீட்பளிக்கும் உண்மைக்கு விசுவாசமாகவும், உடன்பிறந்த உணர்வுடனும், ஒன்றிப்புடனும் திருஅவையைக் கட்டியெழுப்பும் அப்போஸ்தலிக்க பேரார்வத்துடன் ஏழைகளுக்கானப் பணிக்கென உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, தன் அன்பிற்கு தொடர்ந்து சான்று வழங்கிக் கொண்டிருக்கிறது என தன் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
சமூகத்தின் அடிப்படைக் கூறாக இருக்கும் குடும்பத்திற்கென தங்களை அர்ப்பணித்துச் செயல்படும் Knights of Columbus அமைப்பிற்கு தன் பாராட்டையும் தெரிவித்துள்ள திருத்தந்தை, இவ்வமைப்பின் பணிகளால் கத்தோலிக்க இளையோரிடையே விசுவாசத்தை வளர்த்திடவும், அவர்கள் செபம், உருவாக்கல் மற்றும் உடன்பிறந்த உணர்வுடன் தங்கள் குடும்பங்கள், பங்குதளங்கள், சமூகம் மற்றும் நாட்டிற்கு பணியாற்றிடவும் Knights of Columbus அமைப்பினால் ஊக்கம் பெறுகின்றனர் என மேலும் அதில் தெரிவித்துள்ளார்.
இன்று உலகின் பல பாகங்களை அச்சுறுத்திவரும் போர்கள் மற்றும் சமூக பதட்ட நிலைகள் முடிவுக்கு வந்து, நீதியும் அமைதியும் உடன்பிறந்த உணர்வும் நிலவிட நாம் அனைவரும் செபிப்போம் என்ற அழைப்பையும் விடுத்துள்ள திருத்தந்தை, அனைத்து மக்களின் இதயங்களில் கிறிஸ்துவின் அமைதி நிலவவும், அன்பின் நாகரிகம் கட்டியெழுப்பப்படவும் Knights of Columbus அங்கத்தினர்களும் அவர்களின் குடும்பங்களும் தங்கள் செபத்தையும் திருப்பலிகளையும் அர்ப்பணித்துவருவது குறித்தும் தன் செய்தியில் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.
இவ்வமைப்பின் பிறன்பு நடவடிக்கைகள், திருமணங்களுக்கான ஆதரவு முயற்சிகள், மனித மாண்பிற்கான நடவடிக்கைகள், வளரும் நாடுகளில் திருஅவையின் மறைப்பணிகள் என்பவை தவிர, உக்ரைனிலும் மத்தியக்கிழக்குப் பகுதியிலும் பிறரன்புப்பணிகள் ஆற்றிவருவதையும், கிறிஸ்தவ விசுவாசத்திற்காக துன்பங்களை அனுபவித்துவரும் மக்களிடையே பணியாற்றிவருவதையும் குறிப்பிட்டு தன் பாராட்டுக்களையும் திருத்தந்தை வெளியிட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்