பொருளாதார இராணுவ அதிகாரிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் பொருளாதார இராணுவ அதிகாரிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (VATICAN MEDIA Divisione Foto)

வரி வசூலிப்பவரான மத்தேயுவில் மனித மாண்பைக் கண்ட இயேசு

ஒரு நாட்டின் செல்வம் என்பது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அல்ல மாறாக அதன் இயற்கை, கலை, கலாச்சாரம், மத பாரம்பரியம், குழந்தைகளின் புன்னகை ஆகியவற்றில் அடங்கியுள்ளது - திருத்தந்தை

மெரினா ராஜ் - வத்திக்கான்

அனைத்து மக்களாலும் பாவி, வரி வசூலிப்பவர் என்று கருதப்பட்ட மத்தேயுவின் மேல் இயேசுவின் பார்வை இருந்தது என்றும், இயேசுவின் இச்செயல் மனித மாண்பு மற்றும் மனித வாழ்க்கை என்பவை மக்களின் வாழ்க்கையின் இதயத்தில் உள்ளது என்பதை எடுத்துரைக்கின்றது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 21 சனிக்கிழமை வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் பொருளாதார இராணுவ அதிகாரிகள் ஏறக்குறைய 300 பேரை அவர்களின் 250ஆவது ஆண்டினை முன்னிட்டு சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனிதநேயத்தை மீட்டெடுப்பதற்கான புதிய மனிதத்துவமே ஊழலுக்கான சரியான பதில் மாற்றுவழி என்றும் கூறினார்.

செப்டம்பர் 21 திருஅவை சிறப்பிக்கும் திருத்தூதர் மத்தேயு பற்றி எடுத்துரைத்து, அவரும் வரிவசூலிப்பவராக இருந்து இயேசுவால் அழைக்கப்பட்டவர் என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், ஊழல் என்பது கறைபடிந்த, உடைந்த, பாதிக்கப்பட்ட இதயத்தை நினைவுபடுத்துகின்றது என்றும், சமூகத்திற்கு எதிராக செயல்படுவதை வெளிப்படுத்துகின்றது, ஒரு சமூகம் உருவாவதற்கான உறவுகள் மற்றும் அடிப்படைகளை தடுக்கின்றது என்றும் கூறினார்.

புதிய மனிதத்துவத்தை உருவாக்குவதற்கான பங்களிப்பை பொருளாதாரப்படையில் சேர்ந்து கல்வி பயில விண்ணப்பிக்கும் இளம் காவலர் உருவாக்கும் பணியில் ஆற்றும் எழுச்சிமிக்க பணிகள் வழியாக வெளிப்படுத்தலாம் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், முதலில் வேலைவாய்ப்பிற்கான ஒரு வழி என்று அவர்கள் நினைத்தாலும் காலப்போக்கில், குறிப்பிட்ட பயிற்சிகளின் வழியாக வாழ்விற்கான அடிப்படைக் கருத்துக்கள், அனுபவங்கள், வாழ்க்கை மற்றும் பொது நன்மைக்கான கல்வியையும் இதனால் பெற்றுக்கொள்வார்கள் என்றும் எடுத்துரைத்தார்.

வரிவசூலிப்பவரான மத்தேயு, இயேசுவுடான சந்திப்பிற்குப் பின் இலாபநோக்கு என்பதிலிருந்து அனைவரும் சமம் என்ற நிலைக்கு மாறினார் என்றும், இயேசுவினது பள்ளியில் சமத்துவம், ஒற்றுமை, நீதி, பகிர்வு, உள்ளடக்கிய நிலை ஆகியவற்றை இலவசக்கொடையாகக் கற்றுக்கொண்டார் என்றும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இலவசக்கொடை என்பது நிதிப் பரிமாணமல்ல அது மனிதப் பரிமாணம் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், தனது சொந்த இலாபத்தை நாடாமல் பிறர் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்து பணியாற்றவேண்டும் என்றும் எடுத்துரைத்தார்.

மத்தியதரைக் கடலில் ஆபத்தில் இருக்கும் புலம்பெயர்ந்தோரை வரவேற்றல், மீட்டல், இத்தாலி மற்றும் பிற இடங்களில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் துணிந்து உதவுதல், போன்ற அவர்களின் பணிகளைச் சுட்டிக்காட்டி வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், மரணத்தின் வியாபாரிகளாக செயல்படும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் பணிகளில் முன்னேற்றம் காணவும் வலியுறுத்தினார்.

வன்முறை மற்றும் போரினால் அழிக்கப்படும் அலட்சியத்தின் உலகமயமாக்கலுக்கு மாற்றாக சமூகம் மற்றும் வாழுமிடங்களைப் பாதுகாக்கும் உலகமயமாக்கலை உருவாக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை அவர்கள், ஒரு நாட்டின் செல்வம் என்பது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அல்ல மாறாக அதன் இயற்கை, கலை, கலாச்சாரம், மத பாரம்பரியம், குழந்தைகளின் புன்னகை ஆகியவற்றில் அடங்கியுள்ளது என்றும் எடுத்துரைத்தார்.

குழந்தைகள் மற்றும் முதியவர்களின் புன்னகையைக் காணும்போது அச்சமூகம் மோசமானதாக இல்லை என்பது  தெளிவாகிறது, படைப்பாற்றலையும் புதிய உலகிற்கான கதவுகளையும் திறக்கின்றது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்பிக்கை, எதிர்நோக்கு, புன்னகை இவற்றை மக்களிடையே நீங்களும் வளர்த்து மக்களிடையேயும் அதனை வளர்ப்பவர்களாக இருங்கள் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 September 2024, 12:17