மனிதகுலத்தின் மாண்பிற்காக விஞ்ஞானங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்
மெரினா ராஜ் – வத்திக்கான்
விஞ்ஞானங்கள், இந்த உலகத்தைப் பற்றிய அறிவு மற்றும் புரிதலுக்கான முயற்சியில், அந்த அறிவை மக்கள் மற்றும் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மாண்பிற்காகப் பணியாற்றுவதற்கும் மேம்படுத்துவதற்கும் பயன்படுத்த வேண்டும் என்றும், அதன் முக்கியத்துவத்தை ஒருபோதும் இழக்கக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
செப்டம்பர் 23 திங்கள்கிழமை வத்திகானின் கிளமெந்தினா அறையில் திருப்பீட அறிவியல் அகாடமியின் நிறைவுப்பேரவை உறுப்பினர்கள் ஏறக்குறைய 90 பேரைச் சந்திக்க இருந்த திருத்தந்தை இலேசான காய்ச்சலின் காரணமாக அவர்களை சந்திக்கவில்லை. திருத்தந்தையின் உரையானது பங்கேற்பாளர்களுக்கு எழுத்து வடிவில் தரப்பட்டது.
திருத்தந்தையின் உரையில் கொடுக்கப்பட்டிருந்த செய்தி:
திருப்பீட அறிவியல் அகாடமியின் நிறைவுப் பேரவையின் கருப்பொருளாக, மானுடவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்து கல்வி ஆராய்ச்சி கலந்துரையாடல் நிகழ்த்தியதையும் எடுத்துரைத்து வாழ்த்தியுள்ளார் திருத்தந்தை.
நாம் வாழும் சிக்கலான உலகில் ஆராய்ச்சியும் நிபுணத்துவமும் மிக முக்கியமானவை என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளில் மனிதகுலம் கடுமையான தாக்கத்தை எதிர்கொள்வதைக் கருத்தில் கொண்டு நாம் அனைவரும் பூமியின் நலனில் அதிக அக்கறை கொண்டு வாழவேண்டும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
உலகம் தீவிரமான சமூக, அரசியல் மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதால், பல்வேறு அறிவியல் துறைகளால் மட்டுமல்ல, சமூகத்தின் அனைத்து கூறுகளின் பங்கேற்பின் வழியாகவும், பொது கலந்துரையாடல்கள் வழியாகவும், ஒரு பரந்த சூழலின் அவசரத்தை நாம் தெளிவாகக் காணலாம் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.
திருப்பீட அறிவியல் காடமியின் பல்வேறு மாநாடுகளில், பழங்குடியின மக்களையும் அவர்களின் ஞானத்தையும் உரையாடல்களிந் வழியே எடுத்துரைத்து, விளிம்புநிலை மற்றும் ஏழை மக்களுக்கு கவனம் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதற்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
செயற்கை நுண்ணறிவினால் ஏற்படக்கூடிய வளர்ச்சி மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும் என்றும், வளர்ந்து வரும் அறிவு, புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் போன்றவை இப்பூமியின் ஆரோக்கியத்திற்கான தொடர்புடைய வாய்ப்புகளையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்