மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் திருத்தந்தை

தங்களை பராமரிக்க அனுமதிக்கும் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளின் செயல், நம்மைப் பாதுகாக்கும் இறைவனிடம் நம்மை எவ்வாறு கையளிக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறது

ஜெர்சிலின் டிக்ரோஸ் - வத்திக்கான்

அன்பு நெஞ்சங்களே, செப்டம்பர் 2ஆம் தேதி வத்திக்கானிலிருந்து புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தோனேசியா, பாப்புவா நியூ கினி ஆகிய நாடுகளுக்கான தன் திருப்பயணத்தை நிறைவுச் செய்து தற்போது கிழக்கு திமோர் நாட்டில் மறைப்பணி நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார். செப்டம்பர் 10ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று முதலில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் இல்லத்திற்குச் சென்று அவர்களைச் சந்தித்து உரையாடியது, தலத்திருஅவையின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களைச் சந்தித்தல், கிழக்கு திமோரில் பணியாற்றும் இயேசு சபையினரைச் சந்தித்தல், கிழக்கு திமோர் விசுவாசிகளுக்கு திருப்பலி நிறைவேற்றல் என நாள் முழுவதும் திருத்தந்தையின் மறைப்பணி நடவடிக்கைகள் ஓய்வின்றியே இருந்தன. திருப்பீடத் தூதரகத்தில் தங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செவ்வாய்க்கிழமையன்று, காலை 8.30 மணியளவில், இந்திய நேரம் காலை 5 மணியளவில்  அங்கிருந்து 3.8 கிலோமீட்டர் தொலைவிலுள்ள Irmãs Alma என்ற மாற்றுத்திறனாளிகள் பள்ளி நோக்கிப் பயணமானார். ALMA பெண் துறவு சபையால் இந்த பள்ளி நடத்தப்படுகிறது. பொதுநிலை மறைப்பணியாளர் இயக்கம் என்று அழைக்கப்படும் இந்த பெண்துறவு சபை 2004ஆம் ஆண்டிலிருந்து கிழக்கு திமோரில் பணியாற்றி, இந்த மாற்றுத்திறனாளிகள் இல்லம் தவிர, ஒரு கைவிடப்பட்ட குழந்தைகளுக்கான இல்லத்தையும் நடத்தி வருகிறது.

இளம் கத்தோலிக்க தேசமான கிழக்கு திமோரின் இரண்டாவது நாளின் முதல் நிகழ்வாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மாற்றுத்திறனாளர் குழந்தைகளை சந்தித்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இர்மாஸ் அல்மா பள்ளியை  வந்தடைந்தவுடன் ,பாரம்பரிய உடையணிந்த குழந்தைகள் மற்றும் மக்கள் அனைவரும், வீதி முழுவதும் சூழ்ந்து நின்று, அங்கு பணியாற்றும் சகோதரிகளால் பாடப்பட்ட பாடலுடன் இணைந்து மிகவும் உற்சாகத்துடன் திருத்தந்தை அவர்களை வரவேற்று மகிழ்ந்தனர். San Vincenzo de' Paoli மண்டபத்தில் 50 குழந்தைகளும், 28 சகோதரிகளும் திருத்தந்தையின் வருகைக்காக பொறுமையோடு காத்திருந்தனர். திருத்தந்தை வந்தவுடன் சகோதரிகளில்  ஒருவரின் வழிநடத்துதலில் 3 குழந்தைகள் அவரை அணுகி பாரம்பரிய கழுத்துத் துண்டு ஒன்றினை திருத்தந்தை அவர்களுக்கு வழங்கினர்.

அச்சகோதரிகள் சபையின் தலைமை சகோதரி ஜெட்ருடிஸ் பிதி அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்று, 60  ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆற்றி   வரும் பள்ளியின் பணியை, அதிலும் சிறப்பாக, குறைபாடுகள் உள்ள குழந்தைகளை பராமரிக்கும் அவர்களின் பணியைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார். மேலும் அவர் அக்குழந்தைகளை, இறைவன் தங்களிடம் ஒப்படைத்த விலைமதிப்பற்ற செல்வங்கள் என்றும் விவரித்தார்.

இந்த சந்திப்பு முழுவதும் 3 மாற்றுத்திறன் படைத்த குழந்தைகள், வானதூதர்களைப் போல திருத்தந்தையின் காலடியிலேயே அமர்ந்திருந்தனர்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது சுருக்கமான உரையில் இறுதித் தீர்ப்பைப் பற்றி எடுத்துரைத்தார். அதாவது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இறுதிநாளில் மக்களை என்னுடன் வாருங்கள் என்று அழைக்கும் போது, திருமுழுக்கு பெற்றதாலோ அல்லது உறுதிபூசுதல் பெற்றதாலோ அல்லது தங்களின் வாழ்வை மிகவும் நேர்த்தியாக வாழ்ந்ததாலோ அல்ல, மாறாக, நீங்கள் என்னைக் கவனித்துக்கொண்டீர்கள் என்னும் பிறரன்பின் செயலை முன்வைத்தே அழைக்கிறார் என்று கூறினார்.

இவ்வாறு மற்றவர்கள் மீது அக்கறையும் கருணையும் கொண்ட மக்களையே ஆண்டவர் இயேசு தம்மைப் பின்பற்றும்படி அழைக்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை. மேலும் திருத்தந்தை அவர்கள் இப்பிறரன்புப் பணியை அருளடையாளம் அல்லது புனிதம் என்று குறிப்பிட்டதுடன், இந்த அன்பானது நம்மை கட்டமைக்கின்ற, பலப்படுத்தக்கூடிய அன்பு என்றும் விவரித்தார்.

மேலும் திருத்தந்தை அவர்கள், அக்கறையும் கருணையும் மிகுந்த பிறரன்பானது இந்த இர்மாஸ் அல்மா பள்ளியில் நிறைந்திருப்பதையும், இவ்வன்பின்றி இப்பள்ளியில் நடைபெறும் பணிகள் சாத்தியமற்றது என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், பிறரன்புப் பணி ஆற்றும் சகோதரிகள் அனைவருக்கும், தங்களை நன்றாக பராமரிக்க அனுமதிக்கும் குழந்தைகளுக்கும் நன்றி தெரிவித்ததுடன், நம்மைப் பாதுகாக்கும் இறைவனிடம் நம்மை எவ்வாறு கையளிக்க வேண்டும் என்று இச்செயல் கற்றுக்கொடுப்பதாகவும் திருத்தந்தை அவர்கள் எடுத்துரைத்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இர்மாஸ் அல்மா பள்ளியின் பராமரிப்பில் இருந்த ஒரு சிறுவனிடம் தனது கவனத்தை திருப்பினார். சிறுவன் சில்வானோவை தன்னிடம் அழைத்து வரும்படி கேட்டுக்கொண்ட திருத்தந்தை, சில்வானோவின் கைகளைப் பிடித்தபடி, சகோதரிகள் அவரைப் பராமரிக்க அனுமதித்ததற்கு  நன்றி என்று கூறினார். மேலும் சில்வானோ தன்னைக் கவனித்துக்கொள்ள அனுமதிப்பது போல நாமும்  இறைவன் நம்மை பராமரிப்பதற்கு அனுமதிக்கக் கற்றுக்கொள்ள  வேண்டும் என்றும் கூறினார்.

மாற்றுத்திறனாளிகளைச் சந்தித்த திருத்தந்தை
மாற்றுத்திறனாளிகளைச் சந்தித்த திருத்தந்தை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 September 2024, 14:33