திருத்தந்தை  பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ் 

மொழி,கலாச்சாரத்தை ஊக்கப்படுத்தும் கிறிஸ்துமஸ் போட்டி

இளைஞர்களின் பணியானது, வெவ்வேறு வழிகளில் வார்த்தை மனு உருவான அன்பின் மறைபொருளை, ஈர்ப்பை, பாடல் மற்றும் இசையின் வழியாக வெளிப்படுத்துகின்றது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

உலகிற்கு உண்மையான அமைதியைக் கொண்டுவரும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு இன்று நமக்கு தேவை என்றும்,  பல நூற்றாண்டுகளாக, உலகில் உடன்பிறந்த உறவின் பாதைகளை ஒவ்வொரு மொழி மற்றும் கலாச்சாரத்தின் துணைகொண்டு எண்ணற்ற கலைஞர்களை கிறிஸ்துமஸ் போட்டி ஊக்கப்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 23 திங்கள்கிழமை கிறிஸ்துமஸ் போட்டி - 2024 இல் பங்கேற்கும் பங்கேற்பாளர்கள் ஏறக்குறைய 80 பேரைச் சந்திக்க இருந்த திருத்தந்தை இலேசான காய்ச்சலின் காரணமாக அவர்களை சந்திக்கவில்லை. திருத்தந்தையின் உரையானது பங்கேற்பாளர்களுக்கு எழுத்து வடிவில் தரப்பட்டது.

திருத்தந்தையின் உரையில் உள்ள செய்தி:

மனித வளர்ச்சிக்கான வாய்ப்பாகவும், கிறிஸ்து பிறப்பின் விழுமியங்களை ஊக்குவிக்கும் ஒரு செயலாகவும் இருக்கும் இப்போட்டியின் பங்கேற்பாளர்கள் அனைவரையும் வாழ்த்தியுள்ள திருத்தந்தை, கிறிஸ்துமஸ் போட்டி 2024 என்னும் மாபெரும் இயக்கத்தின் ஒரு பகுதியாக, உண்மைத்தன்மையாக பங்கேற்பாளர்கள் அனைவரும் இருக்கின்றார்கள் என்றும், அவர்களின் கதைகள் மற்றும் குரல்களின் வழியாக கடவுளின் அன்பு, இயேசு கிறிஸ்துவில் மனிதனாக உருவாக்கப்பட்டு, எப்போதும் மனித இதயங்களுக்குள் பேசுகிறது என்றும் எடுத்துரைத்துள்ளார்.

தங்களது கலைத்திறமையின் வழியாக மனித மற்றும் கிறிஸ்தவ பயணத்தை வெளிப்படுத்தும் இளைஞர்களின் பணியானது, வெவ்வேறு வழிகளில் வார்த்தை மனு உருவான அன்பின் மறைபொருளை, ஈர்ப்பை, பாடல் மற்றும் இசையின் வழியாக வெளிப்படுத்துகின்றது என்றும் குரிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

“உன்னதத்தில் கடவுளுக்கு மாட்சி உரித்தாகுக! உலகில் அவருக்கு உகந்தோருக்கு அமைதி உண்டாகுக!” என்ற வானதூதரின் புகழ்ப்பாடலை எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், துன்பம், நோய், போர், கட்டாய இடம்பெயர்வு, குடும்பம், பள்ளி அல்லது நண்பர்களுடன் பிரச்சினைகள் போன்ற பல காரணங்களுக்காக நம்பிக்கையை இழந்த உடன்வாழும் சகோதர சகோதரிகள் பற்றி பாடல் மற்றும் இசையில் எடுத்துரைப்பதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இளைஞர்களின் திறமையும் படைப்பாற்றலும் நமக்குத் தேவை, அவர்கள் பணம் அல்லது வெற்றியின் சிலைகளால் அல்ல, மாறாக அழகு, உடன்பிறந்த உறவு, நம் வாழ்க்கையைக் காப்பாற்றி அதற்கு அர்த்தத்தைத் தரும் இயேசுவுக்காக தூண்டப்படுகிறார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 September 2024, 12:27