ஈரான் நிலக்கரி சுரங்க விபத்தை பற்றிய பதாகை ஈரான் நிலக்கரி சுரங்க விபத்தை பற்றிய பதாகை  (ANSA)

ஈரான் சுரங்க விபத்திற்கு திருத்தந்தையின் இரங்கல் செய்தி

ஈரானில் 70 சுரங்கப் பணியாளர்கள் 250 மீட்டருக்கு கீழ் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, மெத்தேன் வாயுக் கசிவினால் விபத்து ஏற்பட்டு 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஈரான் நாட்டில் நிலக்கரி சுரங்க விபத்தில் 51 பேர் உயிரிழந்தது மற்றும் 20 பேர் காயமடைந்தது குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆழ்ந்த கவலையை வெளியிடும் இரங்கல் தந்தி ஈரான் நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

ஈரானின் தென் கொரசான் மாவட்டத்தின் Tabas நிலக்கரிச் சுரங்கத்தில் செப்டம்பர் 21, சனிக்கிழமையன்று இரவு ஈரான் நேரம் 9 மணிக்கு இடம்பெற்ற விபத்தின் உயிரிழப்புகள் குறித்து திருத்தந்தையின் ஆழ்ந்த கவலையை வெளியிட்டு அந்நாட்டிற்கு இரங்கல் தந்தி ஒன்றை அனுப்பியுள்ள திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கும் திருத்தந்தையின் செப உறுதிப்பாட்டையும் அதில் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த மக்களுடன் திருத்தந்தை தன் ஆன்மீக ஒருமைப்பாட்டைத் தெரிவிப்பதாகவும், இவ்விபத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இறைவனின் ஆறுதலையும் அமைதியையும் திருத்தந்தை இறைஞ்சுவதாகவும் அச்செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Tabas நிலக்கரிச் சுரங்கத்தில் செப்டம்பர் 21 முன்னிரவில் ஏறக்குறைய 70 சுரங்கப் பணியாளர்கள் 250 மீட்டருக்கு கீழ் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, மெத்தேன் வாயுக் கசிவினால் இவ்விபத்து ஏற்பட்டு 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈரானில் சுரங்க விபத்துக்கள் அடிக்கடி நிகழ்ந்துள்ளன. 2013ஆம் ஆண்டில் இரு சுரங்க விபத்துக்களில் 11 பணியாளர்களும், 2009ல் 20 பேரும், 2017 நிலக்கரி சுரங்க விபத்தில் 42 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 September 2024, 15:01