ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து விடைபெற்ற திருத்தந்தை ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து விடைபெற்ற திருத்தந்தை  (Copyright 2024 The Associated Press. All rights reserved)

இந்தோனேசியாவில் திருத்தந்தையின் திருப்பயணக் கண்ணோட்டம்

4ஆம் தேதி புதன்கிழமை மாலையில் மாணவர்களையும், அடுத்த நாள் வியாழக்கிழமையன்று, தலத்திருஅவையின் உதவிகளால் பயன்பெறும் மக்களையும் சந்தித்தார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

வத்திக்கானிலிருந்து 13 மணி நேர விமான பயணத்திற்குப்பின் செப்டம்பர் 3ஆம் தேதி இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவை உள்ளூர் நேரம் நண்பகலுக்கு சிறிது முன்பாகச் சென்றடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விமான நிலைய வரவேற்புக்குப்பின் அந்நாள் முழுவதையும் திருப்பீடத் தூதரகத்திலேயே செலவிட்டார். இந்தோனேசியாவுக்கும் இத்தாலிக்கும் இடையேயான நேர வித்தியாசம் 5 மணியாகும். 27 கோடியே 57 இலட்சத்து 74ஆயிரம் மக்கள் வாழும் இந்தோனேசியா, 17,508 தீவுகளைக் கொண்ட நாடாகும். இதில் 6,000 தீவுகளில் மக்கள் வாழ்கிறார்கள். இந்தோனேசியாவின் மக்களில் பெரும்பான்மையோர் இஸ்லாமிய சமயத்தை பின்பற்றினாலும் இது இஸ்லாமிய நாடு அல்ல. மதச் சுதந்திரம் இந்தோனேசிய அரசியலமைப்பில் உள்ளது. மொத்த மக்கள் தொகையில் கத்தோலிக்கர் 3.01 விழுக்காட்டினராகவே உள்ளபோதிலும், பல பிறரன்பு நிறுவனங்களை நடத்திவரும் தலத்திருஅவை, 5684 கல்வி நிலையங்களையும் கொண்டுள்ளது. திருத்தந்தை தன் பயணத்தின்போது, 4ஆம் தேதி அதாவது புதன்கிழமை மாலையில் மாணவர்களையும், அதற்கு அடுத்த நாள் வியாழக்கிழமையன்று முற்பகலில் தலத்திருஅவையின் உதவிகளால் பயன்பெறும் மக்களையும் சந்தித்தது நாம் அறிந்ததே.

செப்டமபர் 4ஆம் தேதி காலையில் தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள மெர்டெகா வளாகத்தின் வடபகுதியில் அமைந்திருக்கும் அரசுத்தலைவர் மாளிகையில் திருத்தந்தைக்கான வரவேற்பு நிகழ்ச்சி இடம்பெற்றது.  அதன்பின் அரசுத்தலைவர் Joko Widodo அவர்களை அரசுத்தலைவர் மாளிகையில் சந்தித்து உரையாடியபின் அங்கேயே உள்ள Istana Negara என்ற அரங்கிற்கு நடந்து சென்று, அங்கு அரசியல் தலைவர்கள், இந்தோனேசியாவிற்கான பல்வேறு நாடுகளின் அரசுத்தூதுவர்கள் ஆகியோரை சந்தித்து உரை வழங்கினார் திருத்தந்தை. இந்தோனேசிய நாட்டிற்கான இரண்டாவது நிகழ்ச்சியாக அவர் கலந்து கொண்டது, அந்நாட்டின் தலத்திருஅவை அதிகாரிகளையும் பணியாளர்களையும் சந்தித்து உரை வழங்கியதாகும். அரசுத்தலைவர் சந்திப்புக்கும், தலத்திருஅவை அதிகாரிகளுடனான சந்திப்பிற்கும் இடையில் புதன் கிழமை ஏறக்குறைய நண்பகல் வேளையில் இந்தோனேசியாவில் பணிபுரியும் இயேசு சபையினரை தனியாகச் சந்தித்து சிறிது நேரம் உரையாடினார். தலத்திருஅவை அதிகாரிகளுடனான சந்திப்புக்குப்பின்  Scholas Occurrentes அமைப்பின் அங்கத்தினர்களை, அதாவது இளையோரை சந்தித்து அவர்களோடு உரையாடி மகிழ்ந்தார் திருத்தந்தை. இவை தான் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செப்டம்பர் 4ஆம் தேதி புதனன்று கலந்துகொண்ட நிகழ்வுகள்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 September 2024, 16:10