தலத்திருஅவை அதிகாரிகள், பணியாளர்களை சந்தித்த திருத்தந்தை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
ஏறக்குறைய அரை மணி நேரத்தை மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் செலவிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வில்லத்திலிருந்து 4.4 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அமல உற்பவ அன்னை பேராலயம் நோக்கி காரில் பயணம் மேற்கொண்டார். இந்த பேராலயத்தில்தான் ஆயர்கள், அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், துறவியர், குருமடமாணவர்கள் மற்றும் பொதுநிலை மறைக்கல்வி ஆசிரியர்களை சந்தித்து உரை வழங்கினார் திருத்தந்தை.
திலி நகரின் அமல உற்பவ அன்னை பேராலயம், நகரின் மையத்தில் 1988ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் இந்தோனேசியாவின் கீழ் இருந்த கிழக்கு திமோரில் திருப்பயணம் மேற்கொண்டபோது இப்பேராலயத்தை திருநிலைப்படுத்தினார். தென் ஆசியாவின் பெரிய கோவில்களில் ஒன்றான இப்பேராலயத்தின் வலப்புறத்தில் கோபுரம் ஒன்றும் எழுப்பப்பட்டுள்ளது. பேராலயத்தின் முகப்பு அன்னை மரியா திருவுருவத்தைக் கொண்டுள்ளது. பேராலயத்தைச் சுற்றியுள்ள வளாகம் பச்சை பசேலென இருப்பதுடன் இவ்வளாக வாசலின் இரு தூண்களும் எக்காளம் முழங்கும் இரு காவல்தூதர்கள் சிலைகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
திலி பேராயர், கர்தினால் Virgilio do Carma da Silva, கிழக்கு திமோர் ஆயர் பேரவைத்தலைவர், ஆயர் Norberto Do Amaral, அப்பேராலய தலைமைக்குரு ஆகியோர் பேராலய வாசலிலேயே நின்று திருத்தந்தையை வரவேற்க, இரு குழந்தைகள் அவருக்கு மலர்க்கொத்துக்களை வழங்கி வரவேற்றனர். பேராலயத்திற்குள் திருத்தந்தை நுழையும் முன்னர் அப்பேராலய தலைமைக்குரு ஒரு சிலுவையையும் ஆசீர்வதிக்கப்பட்ட தண்ணீரையும் திருத்தந்தையிடம் கொடுக்க, திருத்தந்தையும் அத்தண்ணீரால் ஆசீர்வதித்தார். பின்னர் கோவிலின் பலிபீடம் நோக்கிச் சென்றபோது கோவிலினுள் வழியில் அமரவைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்த்துக்களையும் ஆசீரையும் அளித்தார். திருத்தந்தை கோவிலினுள் நுழையும்போதே பாடகர் குழு பாடல் ஒன்றை பாடிக்கொண்டிருந்தது. முதலில் கிழக்கு திமோர் ஆயர் பேரவைத் தலைவர் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். அங்கு குழுமியிருந்த திருஅவை உயர் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடையே முதலில் ஓர் அருள்கன்னியரும், ஓர் அருள்பணியாளரும் தங்கள் சான்றை பகர்ந்தனர். இதைத் தொடர்ந்து பாடகர் குழு பாடல் ஒன்றை பாடியபின், பொதுநிலை மறைக்கல்வி ஆசிரியரின் சான்றும் முன்வைக்கப்பட்டது. அங்கு குழுமியிருந்தவர்களுக்கு திருத்தந்தையும் தன் உரையை வழங்கினார்.
திருத்தந்தையின் உரையைத் தொடர்ந்து அருள்நிறை மரியே செபத்தை அனைவரும் உரத்த குரலில் செபிக்க, திருத்தந்தை அனைவருக்கும் ஆசீர் வழங்கினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்