நாட்டின் மக்கள்தொகையில் ஏறக்குறைய பாதிபேர் திருப்பலியில்

ஒவ்வொரு நாட்டு திருப்பயணத்தின்போதும், அந்நாட்டில் பணிபுரியும் இயேசு சபையினரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஆயர்கள், அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், துறவியர், குருமடமாணவர்கள் மற்றும் பொதுநிலை மறைக்கல்வி ஆசிரியர்களுடன் அமல உற்பவ அன்னை பேராலயத்தில் இடம்பெற்ற சந்திப்பை முடித்துவிட்டு அங்கிருந்து 1.4 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள திருப்பீடத் தூதரகம் நோக்கி காரில் பயணமானார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு அவரை சந்திக்க இயேசு சபையினர் காத்திருந்தனர். ஒவ்வொரு நாட்டு திருப்பயணத்தின்போதும், அந்நாட்டில் பணிபுரியும் இயேசு சபையினரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார், அச்சபையில் அங்கத்தினராக இருந்து அருள்பணியாளரான திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு சபையினருடன் உரையாடி அச்சந்திப்பை நிறைவுச் செய்த திருத்தந்தை, திருப்பீடத் தூதரகத்திலேயே மதிய உணவருந்தி சிறிது ஓய்வும் எடுத்துக்கொண்டபின், உள்ளூர் நேரம் பிற்பகல் 3மணி 50 நிமிடங்களுக்கு, இந்திய நேரம் நண்பகல் 12.20 மணிக்கு Tasi tolu என்ற இடம் நோக்கிப் பயணமானார். திருப்பீடத் தூதரகத்திலிருந்து மேற்கே 7.4 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள இந்த கடற்கரைப்பகுதி பாதுகாக்கப்பட்ட ஓர் இடமாகும். இவ்விடம் இயற்கை காட்சிகளையும், உயிரின பன்மைத்தன்மையையும், மூன்று உப்பு நீர் ஏரிகளையும் கொண்டுள்ளது. இங்கு 1989ஆம் ஆண்டு திருப்பயணம் மேற்கொண்டபோது புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் திருப்பலி நிறைவேற்றிய இடத்தில் கிழக்கு திமோர் அரசு ஒரு நினைவுக் கோவிலையும், 6 அடி உயரமுடைய புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பாலின் திருஉருவச்சிலையையும் இவ்விடத்தில் அமைத்தது. இப்புனிதரின் திருவுருவச் சிலையும் கோவிலும் 2008ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அப்போதைய இந்தோனேசியா மற்றும் கிழக்கு திமோருக்கான திருப்பீடத் தூதுவர், பேராயர் Leopoldo Girelli அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இவர்தான் தற்போது இந்தியாவிற்கான திருப்பீடத் தூதுவராகச் செயல்பட்டு வருகிறார்.

Tasi tolu என்ற இடத்தை வந்தடைந்த திருத்தந்தைக்கு அவர் காரில் வந்திறங்கிய இடத்திலேயே பாரம்பரிய நடனத்துடன் வரவேற்பு வழங்கப்பட்டது. பின் உள்ளூர் நேரம் 4.30  மணிக்கு கடற்கரை வளாகத்தில் திருப்பலியை நிறைவேற்ற வந்தார் திருத்தந்தை. இங்கு திருத்தந்தையின் திருப்பலிக்காக 6 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் குழுமியிருந்தனர். கிழக்கு திமோர் மக்கள் தொகையே 14 இலட்சத்து 99 ஆயிரம் என்பது குறிப்பிடும்படியானது. போர்த்துகீசிய மொழியில் நிறைவேற்றப்பட்ட திருப்பலியில் திருத்தந்தை மறையுரை ஒன்றும் வழங்கினார்.

இதுவே திருத்தந்தையின் செவ்வாய்க்கிழமையின் இறுதி நிகழ்ச்சியாகும். இத்திருப்பலியை நிறைவுச் செய்து அங்கிருந்து 8.2 கிலோமீட்டர் தூரமுள்ள திருப்பீட தூதரகம் நோக்கிச் சென்றார் திருத்தந்தை. உள்ளூர் நேரம் ஏறக்குறைய இரவு 7.30 மணிக்கு, இந்திய நேரம் மாலை 4 மணிக்கு திருப்பீடம் வந்தடைந்த திருத்தந்தை, அங்கேயே இரவு உணவருந்தி நித்திரையிலாழ்ந்தார். இத்துடன் அவரின் செப்டம்பர் 10ஆம் தேதியின் திருப்பயணத் திட்டங்கள் நிறைவுக்கு வந்தன.

திருப்பலியின் பின் மக்களிடையே வலம் வந்த திருத்தந்தை
திருப்பலியின் பின் மக்களிடையே வலம் வந்த திருத்தந்தை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 September 2024, 14:56