அரசியல் தலைவர், அரசியல் உயர்மட்ட அதிகாரிகளுடன் சந்திப்பு

21 பீரங்கிகள் முழங்க வரவேற்பு வழங்கப்பட்டபின், திருத்தந்தையும் அரசுத்தலைவரும் அரசுத் தலைவர் மாளிகையின் ஓர் அறையில் சந்தித்து உரையாடினர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கிழக்குத் திமோர் திருப்பீடத் தூதரகத்திலிருந்து உள்ளூர் நேரம் 5 மணி 50 நிமிடங்களுக்கு அதாவது இந்திய நேரம் 2 மணி 15 நிமிடங்களுக்கு 1.5 கிலோமீட்டர் தூரமுள்ள அரசுத்தலைவர் மாளிகை நோக்கிப் பயணமானார் திருத்தந்தை. Nicolau Lobato என பெயரிடப்பட்டுள்ள அரசுத்தலைவர் மாளிகை 2009ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திறந்து வைக்கப்பட்டதாகும். 9 ஹெக்டேர் நிலத்தின் உள்ளே அமைந்துள்ள இந்த மாளிகை, நாட்டின் முன்னாள் அரசுத்தலைவரும், நாட்டின் சுதந்திரத்திற்காக உழைத்தவருமான Nicolau dos Reis Lobato என்பவரின் பெயரால் Nicolau Lobato மாளிகை என்று அழைக்கப்படுகிறது.

உள்ளுர் நேரம் மாலை 6 மணிக்கு இந்திய நேரம் பிற்பகல் 2 மணி 30 நிமிடங்களுக்கு அரசுத்தலைவர் மாளிகையை வந்தடைந்த திருத்தந்தையை கிழக்கு திமோர் அரசுத்தலைவர் José Ramos-Horta அவர்கள், மாளிகைக்கு வெளியே வந்து நின்று வரவேற்றார். அரசுத்தலைவர் மாளிகையின் முன்வளாகத்தில் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட இரு நாடுகளின் தேசியப் பண்கள் இசைக்கப்பட்டன. 21 பீரங்கிகள் முழங்க வரவேற்பு வழங்கப்பட்டபின், இருதரப்பு உயர் மட்ட அதிகாரிகளும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இதன்பின் திருத்தந்தையும் அரசுத்தலைவரும் அரசுத் தலைவர் மாளிகையின் ஓர் அறையில் சந்தித்து உரையாடினர். அதன்பின் வரவேற்புப் புத்தகத்தில் திருத்தந்தை கையெழுத்திட்டார். திருத்தந்தையுடன் அரசுத்தலைவரும் ஏனைய உயர் அதிகாரிகளும் புகைப்படம் எடுத்துக்கொண்டபின்னர் அரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கீனா அரங்கில் அரசு அதிகாரிகள் சமூகத்தலைவர்கள் மற்றும் அரசியல் தூதுவர்களை சந்திக்கச் சென்றார் திருத்தந்தை. முதலில் அரசுத்தலைவர் தன் வரவேற்புரையை வழங்க, திருத்தந்தையும் கிழக்கு திமோர் நாட்டிற்கான தன் முதல் உரையை வழங்கினார். இச்சந்திப்பை அரசுத்தலைவர் மாளிகையில் முடித்து திருப்பீடத்தூதரகம் சென்றார் திருத்தந்தை. இத்துடன் அவரின் செப்டம்பர் 9ஆம் தேதியின், அதாவது திங்கள் தின பயணத் திட்டங்கள் நிறைவுக்கு வந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 September 2024, 15:16