இலக்ஸம்பர்க் கத்தோலிக்கக் குழுமத்தாரைச் சந்தித்த திருத்தந்தை

பேராலயத்தின் பணிகள் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு முடிவடைந்து 1621ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி திறக்கப்பட்டது. திரெவிரி மறைமாவட்ட துணை ஆயரான Georg von Helffenstein என்பவரால் அர்ச்சிக்கப்பட்டு அன்னை மரியின் அமல உற்பவத்திற்கென அர்ப்பணிக்கப்பட்டது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

செப்டம்பர் 26 வியாழன் காலை இலக்ஸம்பர்க் நாட்டின் அரசர், பிரதமர், அரசுத்தலைவர்கள், அரசியல் உயர் மட்ட அதிகாரிகளைச் சந்தித்தபின் இலக்ஸம்பர்க் பேராயர் இல்லத்தில் தங்கி மதிய உணவினை உண்டு இளைப்பாறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கிருந்து உள்ளூர் நேரம் மாலை 4.20 அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 7.50 மணியளவில் பேராயர் இல்லத்திலிருந்து புறப்பட்டு நோத்ரே டேம் தூய அன்னை மரியா பேராலயம் நோக்கிச் சென்றார்.

இலக்ஸம்பர்க் தூய அன்னை மரியா பேராலயம்

இலக்சம்பேர்க்கில் உள்ள நோட்ரே-டேம் தூய அன்னை மரியா பேராலயமானது இயேசு சபையினரால் நகரின் வரலாற்று மையமாக ஜீன் து பிளாக் என்பவரால் உருவாக்கப்பட்டது. உல்ரிச் ஜாப்பின் கட்டுமான வழிகாட்டுதலின் கீழ் வடிவமைக்கப்பட்டு உருவான இப்பேராலயமானது, 1613ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. இப்பேராலயத்தின் பணிகள் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு முடிவடைந்து 1621ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி திறக்கப்பட்டது. திரெவிரி மறைமாவட்ட துணை ஆயரான Georg von Helffenstein என்பவரால் அர்ச்சிக்கப்பட்டு அன்னை மரியின் அமல உற்பவத்திற்கென அர்ப்பணிக்கப்பட்டது. 1773 ஆம் ஆண்டுகளில் தூய நிக்கோலா மற்றும் தெரசா பெயரில் பங்குத்தளமாக செயல்பட்டு வந்த இவ்வாலயமானது, 1870ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் அவர்களால் அன்னை மரியா பேராலயமாக உயர்த்தப்பட்டது.

இலக்ஸம்பர்க் பேராலயத்தை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பேராலய முகப்பில் இலக்ஸம்பர்க் பேராயர், பங்குத்தந்தை ஆகியோரால் வரவேற்கப்பட்டார். பேராலயத்தில் பாடகர் குழுவினரால் பாடல்கள் பாடப்பட புனித நீர் கொண்டு சிலுவை அடையாளம் வரைந்து ஆசீரளிக்க, இரு சிறார் மலர்க்கொத்துக்களை திருத்தந்தைக்கு பரிசளித்தனர். பேராலயத்தில் கூடியிருந்த திருப்பயணிகள், மக்கள், குழந்தைகள், துறவறத்தார், நோயாளிகள் என அனைவரையும் வாழ்த்தியபடியே பீடப்பகுதியை வந்தடைந்தார். இலக்ஸம்பர்க் உயர்மறைமாவட்ட பேராயரான கர்தினால் Jean-Claude Hollerich அவர்கள் திருத்தந்தையை வரவேற்று உரையாற்றியதுடன் கத்தோலிக்க குழுமத்தாருடனான சந்திப்பு ஆரம்பமானது. அவரைத் தொடர்ந்து இளைஞர் தியேகு லிஸ்பனில் நடைபெற்ற உலக இளையோர் நாள் கொண்டாட்டத்தில் தான் பங்கேற்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். கடவுளின் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த ஆற்றல் நிறைந்த மின்கலன்களை இதயத்தில் தாங்கள் அக்கொண்டாட்டத்தின் இறுதியில் எடுத்துச் சென்றதாகவும், உடன்பிறந்த உறவின் கொண்டாட்டமாக, திருஅவையில் அனைவருக்கும் இடம் உள்ளது என்ற பெரும் செய்தியைத் தங்களுடன் எடுத்துச் சென்றதாகவும் எடுத்துரைத்தார்.

அவரது அனுபவப் பகிர்விற்குப் பின் தூய பிரான்சிஸ் அசிசியின் வாழ்க்கை அனுபவங்களால் ஈர்க்கப்பட்ட படைப்பின் பாடல் ஒன்று கலைஞர்களால் இயற்கையை போற்றுவோம் என்ற தலைப்பில் நடனமாக நிகழ்த்தப்பட்டது. பல்வேறு வண்ண நிறங்களில் உடையணிந்த இளையோர் படைப்பின் பாடலைப் பாடி இயற்கையைப் போற்றுவோம் என்பதைத் தங்களது நடனங்களால் எடுத்துரைத்தனர்.

நடனத்தைத் தொடர்ந்து இலக்ஸம்பர்க் உயர்மறைமாவட்டத்தின் பேரவைத் துணைத்தலைவர் மரியா, மொழியியல் குழுமத்தாரின் பிரதிநிதி அருள்சகோதரி பெர்பெத்துவா ஆகியோர் தங்களது அனுபவங்களைத் திருத்தந்தையின் முன் பகிர்ந்து கொண்டனர். பாடகர் குழுவின் பாடலைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இலக்ஸம்பர்க் கத்தோலிக்கக் குழுமத்தாருக்கான தனது கருத்துக்களை எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 September 2024, 13:41