அன்னை மரியா திரு உருவத்தின் முன் கர்தினால் ஹொலேரிச் அன்னை மரியா திரு உருவத்தின் முன் கர்தினால் ஹொலேரிச்  (Vatican Media)

இலக்ஸம்பர்க் அன்னை மரியா பேராலயத்தின் 400 ஆவது யூபிலி ஆண்டு

பீடத்தின் வலதுபுறத்தில் அன்னையின் திருஉருவமானது வைக்கப்பட, அன்னை மரியா பேராலயத்தின் 400ஆவது யூபிலி ஆண்டிற்கான செபமானது கர்தினால் Jean-Claude Hollerich அவர்களால் செபிக்கப்பட்டது. பாரம்பரிய முறைப்படி தங்க ரோஜா மலர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் அன்னை மரியாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் இலக்ஸம்பர்க் கத்தோலிக்கக் குழுமத்தாருக்கான தனது உரையை நிறைவுசெய்ய பாடகர் குழுவினர் பாடல் பாடியபடி துன்புறுவோருக்கு ஆறுதல் அளிக்கும் அன்னை மரியின் சிறிய திருஉருவத்தை திருத்தந்தையை நோக்கி எடுத்துவந்தனர். அன்னையின் இத்திருஉருவமானது 1794 ஆம் ஆண்டு முதல் இப்பேராலயத்தில் உள்ளது. பீடத்தின் வலதுபுறத்தில் அன்னையின் திருஉருவமானது வைக்கப்பட, அன்னை மரியா பேராலயத்தின் 400ஆவது யூபிலி ஆண்டிற்கான செபமானது கர்தினால் Jean-Claude Hollerich அவர்களால் செபிக்கப்பட்டது. பாரம்பரிய முறைப்படி தங்க ரோஜா மலர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் அன்னை மரியாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டது. இளஞ்சிவப்பு பளிங்கு அடித்தளமும், அதன் மேலே உள்ள அலங்கரிக்கப்பட்ட வெள்ளி குவளையில் தங்க ரோஜா மலர்களும் வைக்கப்பட்டுள்ளன.

பாடகர் குழுவின் இறுதிப்பாடலுக்குப் பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூடியிருந்த மக்கள் அனைவருக்கும் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார். பேராலயத்திற்கு தனது பரிசினை திருத்தந்தை வழங்க இறுதிப்பாடலுடன் இந்நிகழ்வானது நிறைவுக்கு வந்தது. திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்காக கர்தினால் Jean-Claude Hollerich அவர்கள் திருத்தந்தைக்கு அளித்த நிதியுதவியை புலம்பெயர்ந்தோர், ஏழைகள்,கைவிடப்பட்டவர்கள், பலவீனமானவர்கள், அடிப்படை உதவிகள் தேவைப்படும் நிலையில் இருப்பவர்களுக்கு உதவும் இலக்ஸம்பர்க் காரித்தாஸுக்கு வழங்குவதாக எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். மக்கள் அனைவரும் கரவொலி எழுப்பி தங்களது நன்றியினைத் தெரிவித்தனர். பேராலயத்திலிருந்து கிளம்பும் முன் அங்கிருந்த சில ஆயர்கள் அருள்பணியாளர்கள் துறவறத்தார் மற்றும் மக்களை வாழ்த்தி விடைபெற்றார் திருத்தந்தை பிரான்சிஸ். பேராலயத்தின் வெளிப்புறம் கொட்டும் மழையிலும் திருத்தந்தையின் வருகைக்காகக் காத்திருந்த மக்களை சந்தித்து வாழ்த்திய திருத்தந்தை அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு இலக்ஸம்பர்க் விமான நிலையம் சென்றார்.

லக்ஸம்பர்க் உள்ளூர் நேரம் மாலை 5.30 மணியளவில் அதாவது இந்திய இலங்கை நேரம் இரவு 9.00 மணியளவில் இலக்ஸம்பர்க் ஃபீன்தெல் பன்னாட்டு விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டார் திருத்தந்தை. 9.2 கிமீ  தூரம் காரில் பயணித்து விமான நிலையத்தை வந்தடைந்த திருத்தந்தையை விமான நிலையத்தில் அரசர் ஹென்றி அரசி மரியா பிரதமர் லூக் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். இலக்ஸம்பர்க் அரசு அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி கூறி உள்ளூர் நேரம் மாலை 6.15 மணியளவில் பெல்ஜியம் நாட்டை நோக்கிய தனது பயணத்தை துவக்கினார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 September 2024, 13:48