திருத்தந்தை பிரான்சிஸ் பல்கலைக் கழக மாணவர்கள் மத்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் பல்கலைக் கழக மாணவர்கள் மத்தியில்  (ANSA)

லூவைன் கத்தோலிக்கப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான உரை

இவ்வுலகில் வாழும் நாம் அழகான இந்த உலகைப் பேணிக்காக்கவும், போற்றவும், எதிர்கால சந்ததியினருக்கு அதனை விட்டுச்செல்லும், பொது நன்மைக்காக உழைக்கவும் அழைக்கப்பட்டிருக்கின்றோம்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

செப்டம்பர் 28 சனிக்கிழமை மாலை பெல்ஜியத்தில் உள்ள லூவைன் கத்தோலிக்கப் பல்கலைக்கழக மாணவர்களிடம் திருத்தந்தை ஆற்றிய உரையின் தமிழாக்கச் சுருக்கம்

அன்பான சகோதர சகோதரிகளே, காலை வணக்கம்!

நீங்கள் என்னிடம் தொடுத்த கேள்விகளில் எதிர்காலம் மற்றும் துன்பம் பற்றிய கேள்வியானது என் மனதை பாதித்தது. கட்டுப்பாடற்ற வகையில் சுற்றுச்சூழலையும் மக்களையும் அழிக்கும் தீமை எவ்வளவு வன்முறையானது கொடியது என்பதை நாம் நன்கு காண்கிறோம்.

போர் என்பது மிகக் கொடூரமான விளைவுகளை வெளிப்படுத்துகின்றது. இன்று அதிக வருமானம் ஈட்டும் தொழில்களாக ஆயுதத் தொழிற்சாலைகள் உள்ளன. ஊழல் என்பது நவீன அடிமைத்தனமாக விளங்குகின்றது. நாம் சார்ந்திருக்கும் சமூகத்தை மாசுபடுத்தி ஆதிக்கத்தின் கருவியாக மாற்றுகின்றது. கடவுளுடன் இணையும் மனிதனின் அன்பை அடிமைத்தனமாக மாற்றுகின்றது.

தீமை என்பது இறுதி வார்த்தையல்ல என்பதை கிறிஸ்தவர்களாகிய நாம் நன்கு அறிவோம். எதிர்நோக்கு நமது  கடமையாக, ஒருபோதும் ஏமாற்றமடையாத நம்பிக்கையாக, உறுதியானதாக விளங்கவேண்டும். எனவே உங்களிடயே நன்றியுணர்வு, நோக்கம், நம்பகத்தன்மை என்னும் மூன்று கருத்துக்கள் குறித்து எடுத்துரைக்க விரும்புகின்றேன்.

நன்றியுணர்வு

இந்த உலகில் வாழும் நாம் அனைவரும் இப்பூமியில், பயணிகள், விருந்தினர்கள் மாறாக எஜமானர்கள் அல்ல. இப்பூமியை உருவாக்கிய கடவுளால் பாதுகாக்கப்படுபவர்கள் நாம். இறைவாக்கினர் எசாயா கூறுவது போல அவரே கடவுள்; மண்ணுலகைப் படைத்து உருவாக்கியவர் அவரே; அதை நிலைநிறுத்துபவரும் அவரே;

இறைவனின் மாட்சியும் மானிடரின் மேன்மையும் என்ற திருப்பாடலின் வரிகளான மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? ஆயினும், அவர்களைக் கடவுளாகிய  உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். என்ற வரிகள்  அழகான இப்படைப்பைப் படைத்த கடவுளுக்கு நமது இதயம் நிறைந்த நன்றியுணர்வை வெளிப்படுத்துகின்றன

நோக்கம்

இவ்வுலகில் வாழும் நாம் அழகான இந்த உலகைப் பேணிக்காக்கவும், போற்றவும், எதிர்கால சந்ததியினருக்கு அதனை விட்டுச்செல்லும், பொது நன்மைக்காக உழைக்கவும் அழைக்கப்பட்டிருக்கின்றோம். இதுவே திருஅவையின் சூழலியல் திட்டம்.   

ஆணவம், வன்முறை, போட்டி நம்  உள்ளத்தில், நாம் வாழ்கின்ற இச்சமூகத்தில் இருந்தால், எந்த ஒரு வளர்ச்சித் திட்டமும் வெற்றி பெறாது. சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் பிரச்சனையானது மனிதனின் இதயத்தில் எழும் பொருளாதாரத்தின் மேல் உள்ள அதிகப்படியான ஆர்வம், பணம் போன்றவற்றிலிருந்து வருகின்றது.  அளவுக்கதிகமான பணம் எப்போதும் ஆபத்தானது. அது அலகையை போல நமது பைகளின் வழியாக நுழைந்து விடுகின்றது. எனவே நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். நமது நோக்கம் தெளிவானதாக இருக்க வேண்டும்.

அதிக பணம் சம்பாதிக்கும் சந்தை மனநிலை இருக்கும் போது, நமது முறையீடுகள் அனைத்தும் குரலற்றதாக சந்தைக்கு ஏற்ற வகையில் அளவீடு செய்யப்படுபவைகளாக இருக்கும். நாம் இவ்வுகில் ஆட்சியாளர்கள் அல்ல, பயணிகள், விருந்தினர்கள் என்பதை கருத்தில் கொண்டு செயல்படவேண்டும். கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பதில் நமது கவனத்தை செலுத்தி உலகை வளர்த்தெடுக்க வேண்டும். வெறும் கருத்துக்களால் அல்ல.

நம்பகத்தன்மை

கடவுள் மேலும் மனிதர்கள் மேலும் நம்பகத்தன்மை அவசியம். இது ஒருங்கிணைந்த வளர்ச்சியின் சவாலாக இருக்கின்றது. உடல், மனம், கலாச்சாரம், சமூக அரசியல் அளவில் என ஒவ்வொரு மனிதனின் அனைத்து நிலைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

இது அனைத்து வகையான ஒடுக்குமுறை மற்றும் நிராகரிப்புக்கு எதிரானதாக செயல்படுகின்றது. நம் ஒவ்வொருவரையும் நீதி மற்றும் உண்மைக்கு ஏற்ப மாற்றுவதில் முனைப்புடன் செயல்டுகின்றது. ஒருங்கிணைந்த வளர்ச்சி என்பது நமது புனிதத்தன்மையை ஈர்க்கிறது. 

திருஅவை என்பது  பெண்

மனித சூழலியல் பற்றி சிந்திக்கும் வேளையில் திருஅவையில் பெண்களின் பங்கு பற்றியும் சிந்திக்கவேண்டும். திருஅவை ஒரு பன்னாட்டு நிறுவனம் அல்ல. மாறாக ஒரு பெண். கடவுளின் மணமகள். திருஅவையில் ஆண், பெண் என்பவர்கள்  வேறுவேறு அல்ல. அனைவரும் ஒன்று. அன்பு செய்தல், மற்றும் அன்பு செய்யப்படுதல் என்னும்  நோக்கத்திற்காக அழைக்கப்பட்டவர்கள்.

மனித மாண்பு என்பது விலைமதிப்பற்றது. ஆண் பெண் இருவரும் ஒருவருக்கொருவர் எதிராக இருக்க படைக்கப்பட்டவர்கள் அல்ல, மாறாக ஆண் பெண்ணுக்காகவும், பெண் ஆணுக்காகவும் ஒன்றிணைந்து வாழ படைக்கப்பட்டவர்கள்.

மீட்பு வரலாற்றில் பெண்ணின் நிலைப்பாடு மிக முக்கியமானது என்பதை நாம் நன்கறிவோம். அன்னை மரியா கூறிய "ஆம்" என்ற வார்த்தையிலிருந்தே மீட்பராம் இயேசு இவ்வுலகிற்கு வருகை தந்தார். பெண் பயனுள்ள வரவேற்பாக, கவனிக்கப்படுபவளாக, முக்கியமான அர்ப்பணிப்புள்ளவளாக திகழ்கின்றாள்.

ஆராய்ச்சி, நட்பு, சமூக சேவை, குடிமை, அரசியல் பொறுப்பு, கலை வெளிப்பாடுகள் பற்றி பல்வேறு பயிற்சி பெறும் மாணவர்களாகிய நீங்கள், எப்படி படிக்கவேண்டும் ஏன் படிக்கவேண்டும் யாருக்காக படிக்கவேண்டும் என்ற கேள்விகளை எழுப்பி அதன் அடைப்படையில் வளருங்கள்.

உங்களுக்கென ஒரு பாணியை, நடையை உருவாக்கிப் படியுங்கள், பொருளுணர்ந்து அனுபவப்பூர்வமாக உணர்ந்து படியுங்கள். உங்களது நலனுக்காக மட்டுமன்றி பொது நலனுக்காக படியுங்கள்.

உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும் என்பதற்கேற்ப உண்மையைத் தேடுபவர்களாகவும் அதன் சாட்சிகளாகவும் இருங்கள்! முன்னோக்கிச் செல்லுங்கள், இருவிதமான கருத்தியல் வேறுபாடுகளுடன் போராட்டங்களில் நுழையாதீர்கள், திருஅவை ஒரு பெண் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்:

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 September 2024, 12:28