வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக செபிப்போம்

சிறைக்கைதிகள் மாண்புள்ள நிலையில் இருக்கும் வகையில் நாம் பணியாற்ற வேண்டும், எல்லோரும் தவறு செய்யக்கூடியவர்கள், காவலில் இருப்பது என்பது நேர்மையான வாழ்க்கையை மீண்டும் தொடங்குவது - திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் – வத்திக்கான்

அடிப்படை உரிமைகள் நசுக்கப்படுகின்றவர்களுக்காகவும், ஏழைகள் மற்றும் பூமியின் அழுகைக்கு பதிலளிக்கும் வகையில் பொது நன்மைக்காகப் பாடுபடுபவர்களுக்காகவும் தான் தொடர்ந்து செபிப்பதாகவும், வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனது ஆழ்ந்த ஆன்மிக நெருக்கத்தினை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 22 ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் வளாகத்தில்  திருப்பயணிகளுக்கு வழங்கிய ஞாயிறு மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஹோண்டுராஸில் கொல்லப்பட்ட Juan Antonio López என்பவர் பற்றியும் எடுத்துரைத்தார்.

ஹோண்டுராசில் உள்ள ட்ருஜிலோ மறைமாவட்டத்தின் சமூகப்பணி ஒருங்கிணைப்பாளரும், ஒருங்கிணைந்த சூழலியல் மேய்ப்புப்பணிக்குழு நிறுவன உறுப்பினருமான ஜுவான் அன்டோனியோ லோபஸ் கொல்லப்பட்டதை எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள், உலகின் பல பகுதிகளில் நடைபெறும் இத்தகைய வன்முறைகளுக்குக் கண்டனம் தெரிவித்தார்.  

உரோம், இத்தாலியைச் சார்ந்த திருப்பயணிகள், உலகின் பல நாடுகளில் இருந்து வந்திருந்த திருப்பயணிகள் என அனைவரையும் வாழ்த்திய திருத்தந்தை அவர்கள் உரோமில் வசிக்கும் சிஸ்னெ மரியன்னையைச் சிறப்பிக்கும் ஏக்குவதோர் மக்கள் மற்றும், ஸ்லோவாக்கியா, மெக்சிகோ, குடும்பங்கள், தொலேதோ பாடல் குழுவினர் ஆகிய அனைவரையும் வாழ்த்தினார்.

சிறைக் கைதிகளின் நிலைமைகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் பங்கேற்பவர்களை வாழ்த்திய திருத்தந்தை அவர்கள், கைதிகள் மாண்புள்ள நிலையில் இருக்கும் வகையில் நாம் பணியாற்ற வேண்டும் என்றும், எல்லோரும் தவறு செய்யக்கூடியவர்கள், காவலில் இருப்பது என்பது நேர்மையான வாழ்க்கையை மீண்டும் தொடங்குவது என்றும் எடுத்துரைத்தார்.

அமைதிக்காக தொடர்ந்து செபிப்போம், போர் முனைகளில், பதட்டங்கள் மிக அதிகமாக உள்ளன என்று எடுத்துரைத்த திருத்தந்தை அவர்கள்,  அமைதியை விரும்பிக் கேட்கும் மக்களின் குரல் ஒலிக்கட்டும் என்றும், உக்ரைன், பாலஸ்தீனம், இஸ்ரேல், மியான்மர் என போர்களால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை மறந்து விடக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

இறுதியாக அனைவரையும் வாழ்த்தி விடைபெற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனக்காக செபிக்க மறக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டு தனது மூவேளை செப உரையைத் தொடர்ந்த செப விண்ணப்பங்களை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 September 2024, 13:41