கோகெல்பர்க் திருஇருதயப் பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்

1952 ஆம் ஆண்டு ஜனவரி 28 இல், திருத்தந்தை 12 ஆம் பயஸ் சிறிய பேராலயமாக உயர்த்தினார். 89 மீ உயரம் மற்றும் 167 மீ நீளம் கொண்ட இந்த பேராலயம் 65 மீ உயரமுள்ள இரண்டு கோபுரங்களையும், 33 மீ விட்டம் கொண்ட 100 மீ உயரமுள்ள ஒரு பெரிய குவிமாடத்தையும் கொண்டுள்ளது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

திருஇருதயப் பேராலயம்

உலகில் உள்ள மிகப்பெரிய பேராலயங்களாக கருதப்படுபவற்றுள் பெல்ஜியத்தில் உள்ள திருஇருதயப் பேராலயமானது, ஐந்தாவது இடத்தில் உள்ளது. கோகெல்பெர்க்கின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள இப்பேராலயம் பெல்ஜியத்தின் 75 வது ஆண்டு சுதந்திரத்தின் நினைவாக டெகோ கலைப்பாணியில் அரசர் இரண்டாம் லியோபோல்ட் உத்தரவின் பேரில் கட்டப்பட்டது. இரண்டு உலகப் போர்களின் விளைவாக 1905 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்டுமானப் பணியானது 1971 ஆம் ஆண்டு வரை முடிக்கப்படவில்லை. 1952 ஆம் ஆண்டு ஜனவரி 28 இல், திருத்தந்தை 12 ஆம் பயஸ் இதனை சிறிய பேராலயமாக உயர்த்தினார். 89 மீ உயரம் மற்றும் 167 மீ நீளம் கொண்ட இந்த பேராலயம் 65 மீ உயரமுள்ள இரண்டு கோபுரங்களையும், 33 மீ விட்டம் கொண்ட 100 மீ உயரமுள்ள ஒரு பெரிய குவிமாடத்தையும் கொண்டுள்ளது இப்பேராலயம்.

Bruxelles கத்தோலிக்க தலத்திருஅவை

பெல்ஜியத்தின் தலைநகரமான Bruxelles மிகப்பெரிய நகரமாக நாட்டின் மையத்தில் சென்னே ஆற்றின் பகுதியில் அமைந்துள்ளது. 19 நகராட்சிகளாக பிரிக்கப்பட்டுள்ள பெல்ஜியத்தில் Bruxelles வரலாற்று சிறப்புமிக்க நகரமாகவும்  ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகத்தின் பெரும்பகுதிகள் நிறைந்துள்ள இடமாகவும் உள்ளது. 30.528 கிமீ பரப்பளவுடைய பெல்ஜியத்தில் வாழும் 1,16,18,000 மக்களில் 83,61,00 பேர் கத்தோலிக்கர்கள்.  அதாவது 71.97 விழுக்காட்டினர். மொத்தம் 3656 பங்குத்தளங்கள், 434 தலத்திருஅவை மேய்ப்புப்பணி நிலையங்கள், உள்ளன. 22 ஆயர்கள், 2066 மறைமாவட்ட அருள்பணியாளர்கள், 1677 துறவற அருள்பணியாளர்கள் என மொத்தம் 3743 அருள்பணியாளர்கள், 577 நிரந்தர திருத்தொண்டர்கள், 355 ஆண் துறவறத்தார், 5045 பெண் துறவறத்தார், 4803 மறைக்கல்வி யாளர்கள்,  197 அருள்பணித்துவ மாணவர்கள் உள்ளனர்.

பெல்ஜியம் உள்ளூர் நேரம் காலை 10.00 மணியளவில் இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 1.30 மணியளவில் திருஇருதயப் பேராலயம் வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, ஆலய முகப்பில் மலைன்ஸ் புரூக்செல்ஸ் உயர் மறைமாவட்ட பேராயரும் பேராலயத்தின் அதிபருமான பேராயர் Luc Terlinden வரவேற்றார். புனித நீர் கொண்டு சிலுவை அடையாளம் வரைந்து ஆலயத்தையும் அங்குள்ளவர்களையும் ஆசீர்வதித்த திருத்தந்தை அவர்களை இரு சிறார் மலர்க்கொத்துக்கள் கொடுத்து வரவேற்றனர். பாடகர் குழுவினர் பாடல் ஒன்றைப் பாட ஆலயத்தில் கூடியிருந்த ஆயர்கள் அருள்பணியாளர்கள் துறவறத்தார் மக்கள் ஆகிய அனைவரையும் வாழ்த்தியபடி பீடத்தினை வந்தடைந்தார் திருத்தந்தை. பெல்ஜியம் ஆயர் பேரவையின் தலைவர் திருத்தந்தையை வாழ்த்திய  உரையுடன் கூட்டமானது ஆரம்பமானது.

அன்னை மரியின் பாடல் பாடப்பட்டதைத் தொடர்ந்து அருள்பணியாளர் மேய்ப்புப்பணியாளர், தங்களது அனுபவங்களைத் திருத்தந்தையின் முன் எடுத்துரைத்தனர். பாடகர் குழுவின் பாடலைத்தொடர்ந்து தத்துவயியலாளர், வன்முறையால் பாதிக்கப்பட்டு அகதிகள் முகாமில் இருக்கும் மக்களின் பிரதிநிதி, தங்களது அனுபவங்களை எடுத்துரைத்தனர். அதனைத்தொடர்ந்து அருள்சகோதரி, சிறைக்கைதிகள் ஆலயத்தின் அருள்பணியாளர் ஆகியோர் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர். பாடகர் குழுவின் பாடலைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது 46 ஆவது திருத்தூதுப் பயணத்தின் மூன்றாம் உரையினை பெல்ஜியம் நாட்டு ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவறத்தார், மறைக்கல்வியாளர்கள் ஆகிய அனைவருக்கும் வழங்கினார். 

திருத்தந்தை தனது உரையினை நிறைவு செய்ததும் கூடியிருந்த மக்கள் அனைவராலும் அன்னை மரியின் பாடலானது பாடப்பட்டது. அதன்பின் திருத்தந்தை அவர்கள் தனது அப்போஸ்தலிக்க ஆசீரை அங்கிருந்த அனைவருக்கும் வழங்கினார். இறுதிப்பாடல் பாடப்பட்டதைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆலயப் பீடத்தின் வலப்புறத்தில் இருந்த மாற்றுத்திறனாளிகள் சிலரை சந்தித்தார்.

பேராலயத்திலிருந்து புறப்படும் முன் அங்கிருந்த நகர அதிகாரிகள் மற்றும் அருள்பணியாளர்கள் சிலரை சந்தித்து விடைபெற்ற திருத்தந்தை அவர்கள், 10.4 கிமீ தூரம் காரில் பயணித்து திருப்பீடத்தூதரகம் வந்து சேர்ந்தார். மதிய உணவினை திருப்பீடத்தூதரகத்தில் உண்டு சற்று  இளைப்பாறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 28 சனிக்கிழமை தனது 46ஆவது திருத்தூதுப்பயணத்தின் மூன்றாம் நாளை காலை திருப்பீடத்தூதரகத்தில் ஐரோப்பிய ஒன்றிய ஆணைய அதிகாரிகள் சந்திப்பு, தூய கில்லெஸ் ஆலயப்பகுதிகளில் வசிக்கும் வீடற்றோர் சந்திப்பு, இயேசுவின் திருஇருதய பேராலயத்தில் ஆயர்கள் அருள்பணியாளர்கள், துறவறத்தார் சந்திப்பு என தனது காலை நிகழ்வுகளை முடித்தார் திருத்தந்தை. இன்று மாலை லூவன் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்களைச் சந்தித்து அவர்களுக்கு உரையாற்றி தனது திருத்தூதுப் பயணத்தின் மூன்றாம் நாளை நிறைவு செய்ய உள்ளார் திருத்தந்தை. இத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இரண்டாம் நாள் மாலை நிகழ்வுகள் மற்றும் மூன்றாம் நாள் காலை நிகழ்வுகள் நிறைவிற்கு வருகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 September 2024, 15:18