திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

லூவன் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ்

தூய யோசேப்பு முதியோர் இல்லத்திலிருந்து புறப்பட்ட திருத்தந்தை அவர்கள், அங்கிருந்து திருப்பீடத்தூதரகம் வந்து சேர்ந்தார். பெல்ஜியம் உள்ளூர் நேரம் மாலை 4.00 மணியளவில் திருப்பீடத்தூதரகத்திலிருந்து புறப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 26.9 கிமீ தூரம் காரில் பயணித்து லூவன் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தை வந்தடைந்தார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

லூவன் நகரம்

Flemish Brabant மாநிலத்தின் தலைநகரமான Leuven, பெல்ஜியத்தின் நடுப்பகுதியில் உள்ள Flanders பகுதியில், தலைநகர் புரூக்செல்சிலிருந்து 26 கிமீ தொலைவில் உள்ள Dijle ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. 884 ஆம் ஆண்டு நார்மன்களால் முற்றுகையிடப்பட்டதாக ஆவணங்களில் இந்த நகரத்தின் பெயர் முதன் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க இந்த நகரின் பல பகுதிகள் முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போரின்போது  சேதமடைந்த போதிலும், 1914 ஆம் ஆண்டு ஜெர்மன் படையெடுப்பின்போது, ​​புகழ்பெற்ற பல்கலைக்கழக நூலகம் மற்றும் நெசவு தொழிலாளர் கூடம் (1193) எரிக்கப்பட்டன. இருப்பினும், நகரம் இன்னும் அதன் இடைக்கால அம்சங்களைத் தன்னுள் தக்க வைத்துக் கொண்டுள்ளது. வணிகப்பொருள்கள், ஆலயங்கள், கலை ஓவியங்கள், உயரமான கட்டிடங்கள் போன்றவற்றால் நிறைந்து செழிப்புற்றிருந்த நகரம் 1962 முதல், லூவன் கத்தோலிக்க பல்கலைக்கழகம் உருவானதும் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களால் நிறைந்தது.

பெல்ஜியம் உள்ளூர் நேரம் மாலை 4.30 மணி இந்திய இலங்கை நேரம் இரவு 8.00 மணியளவில் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை லூவன் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின் ஆண் பெண் தலைவர்கள், பல்கலைக்கழகத்தின் செயலரான, மலைன்ஸ் புரூக்செல்ஸ் உயர்மறைமாவட்ட பேராயர், லூவனியோ நகர மேயர் ஆகியோர் பலகலைக்கழகத்தின் நுழைவாயிலில் வரவேற்றனர். பல்கலைக்கழகத்தின் சிறப்பு அறைக்குள் சென்ற திருத்தந்தை தனது வருகையைப் பல்கலைக்கழகப் பதிவேட்டில் பதிவிடும் நிகழ்வும் பரிசுகள் பரிமாற்றமும் நடைபெற்றன. கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தாரை சந்திக்கும் இடத்தை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வந்தடைந்ததும், பாடகர் குழுவினர் பாடல் ஒன்றினைப் பாடினர். பல்கலைக்கழக தலைவர் தனது திருத்தந்தையை வாழ்த்தி தனது உரையினைத் துவக்கினார். பல்கலைக்கழகத்தின் ஆண்டு விழா பற்றியும் தனது உரையில் எடுத்துரைத்தார்.  அதனைத் தொடர்ந்து பாலஸ்தீன் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்த மாணவர்களின் அனுபவமானது காணொளிக் காட்சியாக திரையில் ஒளிபரப்ப்பட்டது. பாடகர் குழுவின் பாடலைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது 46 ஆவது திருத்தூதுப் பயணத்தின் நான்காம் உரையும் பெல்ஜியம் நாட்டிற்கான இரண்டாம் உரையினையும் கத்தோலிக்கப் பல்கலைக் கழகத்தாருக்கு வழங்கினார். 

தனது உரையை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூடியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார். அதன்பின் திருத்தந்தை அவர்களுக்கு ஒரு புத்தகம்  பரிசாக வழங்கப்பட்டது. அதன்பின் அங்கிருந்து புறப்பட்ட திருத்தந்தை அவர்கள் பல்கலைக் கழகத்தின் ஓர் அறையில் பல்வேறு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வந்திருந்த மாணவர்கள் சிலரைச் சந்தித்தார். அதன்பின் இரண்டு மாணவர்கள் திருத்தந்தைக்கு முன் செங்கோல் ஏந்தி அணிவகுத்து பல்கலைக் கழக  முன் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்குப் பல்கலைக்கழக பாடகர் குழுவினரால் பாடல் ஒன்று பாடப்பட்டது. பாடலைத்தொடர்ந்து பல்கலைக்கழத்தை விட்டு வெளியே வந்த திருத்தந்தை திறந்த வாகனத்தில் பல்கலைக்கழக தெருக்களைச் சுற்றி தனக்காகக் காத்திருந்த மக்களை சந்தித்தார். பெரிய சந்தை என அழைக்கப்படும் அவ்விடத்தில் இடைவிடாது மழை பெய்து கொண்டிருந்தாலும் தனது வருகைக்காகக் காத்திருக்கும் மக்களை சந்திக்காமல் செல்ல திருத்தந்தைக்கு மனம் வரவில்லை. ஏறக்குறைய 20000 திருப்பயணிகள் நடுவில் வலம்வந்த திருத்தந்தை அவர்கள் அனைவரையும் வாழ்த்தி அங்கிருந்து புறப்பட்டு 27.2 கிமீ தூரம் காரில் பயணித்து பெல்ஜியம் திருப்பீடத்தூதரகம் வந்துசேர்ந்தார். இரவு உணவினை திருப்பீடத்தூதரகத்தில் எடுத்துக்கொண்டு நித்திரைக்குச் சென்றார் திருத்தந்தை. செப்டம்பர் 27 வெள்ளிக்கிழமை காலை பெல்ஜியம் அரசு அதிகாரிகள் சமூகத்தலைவர்களை சந்திப்பு, முற்பகலில் புனித யோசேப்பு முதியோர் இல்ல சந்திப்பு, மாலையில் லூவன் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தார் சந்திப்பு என தனது இரண்டாம் நாள் திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 September 2024, 15:07