வன்முறையின்மைக்கான நிறுவனத்தின் திறப்புவிழா நிகழ்வில் கர்தினால் சார்லஸ் போ வன்முறையின்மைக்கான நிறுவனத்தின் திறப்புவிழா நிகழ்வில் கர்தினால் சார்லஸ் போ 

அமைதி மற்றும் பிறரன்புப் பணிகளால் உலகை வழிநடத்துங்கள்

வன்முறையின்மைக்கான Pax Christi கத்தோலிக்க நிறுவனத்தின் உரோம் கிளை திறக்கப்பட்ட நிகழ்வு பாராட்டத்தக்க முயற்சி – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெர்சிலின் டிக்ரோஸ் – வத்திக்கான்

Pax Christi என்னும் கத்தோலிக்க நிறுவனத்தின் புதிய கத்தோலிக்க நிறுவனத்தின் திறப்புவ் விழாவானது உரோம் நகரில் நடைபெற்றதைத் தொடர்ந்து வன்முறையின்மைக்கு தனது ஆதரவையும், அமைதி மற்றும் பிறரன்புப்பணிகளால் உலகை வழிநடத்தவும் அழைப்புவிடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 29 ஞாயிற்றுக்கிழமை உரோமில் உள்ள" Maria Santissima Bambina" நிறுவனத்தில் நடைபெற்ற இந்த புதிய Pax Christi அமைப்பின் உரோம் நகர் கிளை திறக்கப்பட்ட நிகழ்வில் திருத்தந்தையின் கடிதத்தை Pax Christi இத்தாலி அமைப்பின் தலைவரான பேராயர் Giovanni Ricchiuti அவர்கள் வாசித்தளித்தார்.

இந்நிகழ்வில் மியான்மாரின் யாங்கூன் மறைமாவட்ட பேராயர் கர்தினால் சார்லஸ் மவுங் போ, சன் தியெகோ மறைமாவட்ட ஆயர் கர்தினால் ராபர்ட் மெக்ல்ராய்,  Pax Christi  நிறுவன உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வு பற்றிய செய்தியில் வன்முறையின்மைக்கான நிறுவனம் திறக்கப்பட்டது பாராட்டத்தக்க முயற்சி என்றும், அமைதி மற்றும் உடன்பிறந்த உணர்வின் மதிப்பீடுகளை அந்நிகழ்வில் பங்கேற்றோர் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை  பிரான்சிஸ்.

மேலும் ஒவ்வொரு உயிரினத்தின் உரிமைகளை பாதுகாப்பதை உறுதி செய்ய எல்லோரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், உடன்பிறந்த உணர்வின் அடிப்படையில் ஒரு சமுதாயத்தை உருவாக்க முயலுங்கள் என்றும் தனது செய்தியில் கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை.

அருள்சகோதரி தெரேசியா வச்சிரா நிகழ்வினை நெறிப்படுத்திய இந்த நிகழ்வில், புகழ்பெற்ற எழுத்தாளரும் ஆராய்ச்சியாளருமான முனைவர் மரியா ஸ்டீபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்விற்கு முன்னதாக கர்தினால் ராபர்ட் மெக்ல்ராய், அவர்கள் வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த பேட்டியில், இவ்வுலகமானது மோதல் மற்றும் வன்முறையால் சிதைக்கப்பட்டுள்ள தற்போதைய சூழலில், வன்முறையின்மை என்னும் கொள்கையை பகிர்ந்து கொள்வதில் உள்ள சிரமங்களை வலியுறுத்தினார். நற்செய்தியின் ஒளியில், வன்முறையின்மை என்னும் ஒரே செய்தியே இக்காலச்சூழலில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் "போரைத் தொடர்வது, தாக்குதலுக்கு பதிலாக பதில்தாக்குதல் செய்வதோ அல்லது புதிய தாக்குதல்களை உருவாக்குவதோ என்றிருக்க  முடியாது என்றும், மாறாக, அமைதியை நிலைநாட்டுதல், அதற்கான நடவடிக்கைகளை எடுத்தல், சில சமயங்களில் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கும் தயாராக இருத்தல் போன்றவையே இதற்கான பதில் என்றும் கூறினார் கர்தினால் மெக்ல்ராய்.

Pax Christi என்னும் 120 அமைப்புகளை உள்ளடக்கிய நிறுவனமானது உலகம் முழுவதிலும் அமைதியை ஊக்குவிக்கும் புதிய பல செயல்களையும், வன்முறைக்கு எதிராக குரல் எழுப்புவதையும் தொடர்ந்து செய்து வருகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 September 2024, 14:23