லூவைன் கத்தோலிக்க பல்கலைக்கழக மாணவர்களுடன் சந்திப்பு

செப்டம்பர் 28 சனிக்கிழமை மாலை உள்ளூர் நேரம் 4.00 மணியளவில் இந்திய இலங்கை நேரம் இரவு 7.30 மணியளவில் திருப்பீடத்தூதரகத்தில் இருந்து புறப்பட்டு 27. 3 கிமீ தூரம் காரில் பயணித்து லூவைன் கத்தோலிக்க பல்கலைக்கழகம் வந்தடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

லூவைன் கத்தோலிக்க பல்கலைக்கழகம்

பெல்ஜியத்தில் உள்ள லூவைன் கத்தோலிக்கப் பல்கலைக்கழகமானது பிரெஞ்சு மொழி பல்கலைக்கழகம் ஆகும். இது புரூக்செல்சிலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ள பிரபான்தே வலோனே மாநிலத்தின் இதயமாகவும் உள்ளது. கத்தோலிக்க பல்கலைக்கழகமானது 19 பாடப்பிரிவுகளில் ஏறக்குறைய 30,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான பயிற்சி வாய்ப்புகளை வழங்குகின்றது. அருங்காட்சியகங்கள், திரையரங்குகள், கச்சேரி மற்றும் கண்காட்சி அரங்குகள், நீச்சல் குளம், உடற்பயிற்சி மையம், உணவகங்கள், தேநீர் விடுதிகள் மற்றும் பசுமையான இடங்களை உள்ளடக்கிய இடமாகவும் விளங்குகின்றது. மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் சுமுகமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ உதவும் அனைத்து வசதிகளையும் கொண்ட நகரமாக விளங்குகின்றது.

பெல்ஜியம் உள்ளூர் நேரம் மாலை 4.30 மணி இந்திய இலங்கை நேரம் இரவு 8.00 மணியளவில் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தை வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை லூவன் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின் தலைவர்கள், மலைன்ஸ் புரூக்செல்ஸ் உயர்மறைமாவட்ட பேராயரும் பல்கலைக்கழகத்தின் ஆலோசகருமான பேராயர் லூக் திரிதெலின், ஒத்திங்னீசிஸ் லூவன் மேயர், மாநிலத்தின் ஆளுநர், ஆகியோர் வரவேற்றனர். இளைஞர் ஒருவர் திருத்தந்தைக்கு மலர்க்கொத்தினை கொடுத்து வரவேற்றார்.

பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் குழுவாக இணைந்து கையில் வத்திக்கான் மற்றும் பெல்ஜியம் நாட்டுக் கொடிகளை அசைத்து திருத்தந்தைக்கு வரவேற்பளித்தனர். அதன்பின் திருத்தந்தை தனது வருகையைப் பல்கலைக்கழகப் பதிவேட்டில் பதிவிடும் நிகழ்வும் பரிசுகள் பரிமாற்றமும் நடைபெற்றன. லூவைன் கத்தோலிக்கப் பல்கலைக்கழக மாணவர்களைச் சந்திக்கும் இடமாகிய பல்கலைக்கழகத்தின் அவுலா மாஞ்னோ அரங்கிற்குள் சென்றார் திருத்தந்தை. கூடியிருந்த மாணவர்கள் அனைவரும் கரவொலி எழுப்பி திருத்தந்தையை வரவேற்க அரங்கத்தின் மேடையை வந்தடைந்தார் திருத்தந்தை.

பல்கலைக்கழக தலைவர் உரையுடன் கூட்டமானது ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் பற்றிய காணொளியானதுஒளிபரப்பப்பட்டது. சூழலியல், பெண்கள் பற்றிய நிலைப்பாடு, வேறுபாடுகள் பற்றிய மாணவர்களின் கேள்விகளடங்கிய திருத்தந்தைக்கு எழுதப்பட்ட கடிதமானது வாசிக்கப்பட்டது. அதன்பி ஒளிபரப்பப்பட்டக் காணொளியைத் தொடர்ந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது 46 ஆவது திருத்தூதுப் பயணத்தின் ஆறாம் உரையும் பெல்ஜியம் நாட்டிற்கான நான்காம் உரையினையும் கத்தோலிக்கப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கினார்.

தனது உரையை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவு செய்ய, கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின் 600 ஆவது ஆண்டை முன்னிட்டு அதன் அடையாளமாக ஒரு மரமானது ஆசீர்வதிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளுக்குப் பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூடியிருந்த அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கினார்.  அதன்பின் அங்கிருந்து புறப்பட்ட திருத்தந்தை அவர்கள் பல்கலைக் கழக வளாகம் சென்றடைந்த திருத்தந்தை ஏறக்குறைய 4000 பல்கலைக்கழக மாணவர்கள் கூடியிருக்க அவர்கள் மத்தியில் திறந்த காரில் வலம்வந்து அவர்களை வாழ்த்தினார். அதன்பின் அங்கிருந்து 27.5 கிமீ தூரம் காரில் பயணித்து தூய மைக்கேல் கல்லூரிக்கு வந்தார் திருத்தந்தை. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 September 2024, 12:22