உடன்பிறந்த உணர்வுடைய உலகை கட்டியெழுப்பும் கத்தோலிக்க மாணவர்கள்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
இயேசு கிறிஸ்துவின் அருளால் இவ்வுலகம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் கத்தோலிக்க மாணவர்கள் அனைவரும் இயேசுவுக்கு மிக நெருக்கமாக இருந்து உதவ வேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Pax Romana என்ற பன்னாட்டு கத்தோலிக்க மாணவர் இயக்கத்தின் அங்கத்தினர்களை செப்டம்பர் 20, வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பயணிகளாக இவ்வுலகில் நடைபோடும் நாம் அனைவரும் இயேசு கிறிஸ்துவுடன் ஓர் ஆழமான ஐக்கியத்தைக் கொண்டவர்களாக, அவர் அருளின் வல்லமைக்கு நம்மைத் திறந்தவர்களாகச் செயல்பட்டு, நம்மையும் இவ்வுலகையும் மாற்றியமைக்க அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கத்தோலிக்கத் திருஅவையின் தூண்டுதல் பெற்ற சமூக நீதி மற்றும் ஒன்றிணைந்த மனித குல வளர்ச்சிக்கான கத்தோலிக்க மாணவர்களின் அர்ப்பணத்திற்கு தன் நன்றியையும் வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
கத்தோலிக்க மாணவர்கள் தங்கள் கல்வி அமைப்புகளிலும், பணி செய்யும் இடங்களிலும், தெருக்களிலும் கருணை நிறைந்த, இணக்க வாழ்வுடன் கூடிய, உடன்பிறந்த உணர்வுடன் இயைந்த ஓர் உலகை கட்டியெழுப்ப உதவி வருவது குறித்தும் தன் பாராட்டுக்களை வெளியிட்டார் திருத்தந்தை.
இக்காலத்தின் சமூகப் பிரச்சனைகளை இளையோர் ஆழமாக புரிந்துகொள்ளவும், சமூகங்களுக்குள் மாற்றங்களைக் கொணரவும் இந்த பன்னாட்டு மாணவர் இயக்கம் நற்செய்தியின் புளிப்பு மாவாக செயல்படுகிறது என்பதையும் தன் உரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அகில உலக திருஅவையோடு இணைந்து தனிமனித புதுப்பித்தலுக்கும், ஆன்மீக வளத்திற்கும் உதவும் வாய்ப்பாக இந்த ஜூபிலி ஆண்டை வரவேற்போம் என்ற அழைப்பையும் மாணவர்களிடம் விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அமைதி, இணக்க வாழ்வு, நீதி, மனித உரிமைகள், கருணை ஆகியவைகளின் வளர்ச்சிக்காக உழைக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்