திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை பிரான்சிஸ்  

உடன்பிறந்த உறவு குறித்து எப்போதும் துணிவுடன் கனவு காணுங்கள்!

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது மறையுரையில் இன்றைய நாள் நற்செய்தியை மையமாகக் கொண்டு (காண்க லூக் 5:1-11). இறைவார்த்தைக்குச் செவிமடுப்பது மற்றும் இறைவார்த்தையை வாழ்வாக்குவது என் இரண்டு முக்கிய தலைப்புகளில் தனது மறையுரை சிந்தனைகளை வழங்கினார்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

செப்டம்பர் 5, வியாழக்கிழமை இன்று, இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலுள்ள கெலோரா பங் கர்னோ திறந்தவெளி அரங்கில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றிய சிறப்புத் திருப்பலியில் வழங்கிய மறையுரை.

அன்புள்ள சகோதரர் சகோதரிகளே, இப்போது வாசிக்கப்பட்ட நற்செய்தி,  இறைவார்த்தையைக் கேட்பது மற்றும் அதனை வாழ்வாக்குவது  குறித்த இரண்டு இன்றியமையாத உளப்பாங்குகளைப் பற்றி சிந்திக்க உதவுகிறது.

இறைவார்த்தைக்குச் செவிமடுப்பது

இன்றைய நற்செய்தியில் முதல்சீடர்கள் இயேசுவினுடைய வார்த்தைக்காக பசி தாகத்துடன் அவரைத் தேடிக்கொண்டிருந்ததையும்,. அது அவருடைய  வார்த்தைகளில் ஒலித்ததை அவர்கள் கேட்டதையும் பார்க்கின்றோம்.

இந்த நற்செய்தியில் பலமுறை திருப்பத் திரும்ப கூறப்படும் இந்தக் காட்சி, மனித இதயம் எப்பொழுதும் தனது மகிழ்ச்சிக்கான விருப்பத்தை ஊட்டப்பெற்று திருப்திப்படுத்தக்கூடிய ஓர் உண்மையைத் தேடிக்கொண்டிருக்கிறது என்று நமக்குச் சொல்கிறது.

மனித வார்த்தைகளாலும், இந்த உலகத்தைப் பற்றிய சிந்தனைகளாலும், இம்மண்ணகத் தீர்ப்புகளாலும் மட்டுமே நாம் திருப்தியடைந்துவிட முடியாது.  நம் வாழ்வின் கால்தடங்களை ஒளிரச் செய்ய விண்ணகத்திலிருந்து ஓர்  ஒளி நமக்கு எப்போதும் தேவைப்படுகிறது. நமது ஆன்மாவில் ஏற்படக்கூடிய வறட்சியின் தாகத்தைத் தணிக்கக்கூடிய உயிருள்ள நீர், ஏமாற்றம் தராத ஆறுதலாக அமைந்துள்ளது. ஏனெனில் அது இந்த உலகத்திற்குரிய காரியங்களிலிருந்து அல்ல, மாறாக, விண்ணகத்திலிருந்து வருகிறது.

வீணான குழப்பத்தை ஏற்படுத்தும் மனித வார்த்தைகளின் மத்தியில், நமது வாழ்வின் பயணத்திற்கான ஒரே உண்மையான திசைகாட்டியான கடவுளின் வார்த்தைத் தேவைப்படுகிறது. இவ்வார்த்தை மட்டுமே இவ்வளவு காயங்களுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியில் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும் திறன் கொண்டது.

முதல் சீடர்கள் இயேசுவை தங்கள் படகில் அனுமதித்ததுபோல, நாமும் இயேசுவை நம் வாழ்க்கை என்னும் படகில் தாழ்மையுடன் வரவேற்று, அவருக்கு இடமளித்து, அவருடைய வார்த்தையைக் கேட்டு, நம்மை நாமே கேள்விக்குட்படுத்தவும், சவால் விடவும், மாற்றவும் அனுமதிக்கும்போது நமது நம்பிக்கை வாழ்க்கைத் தொடங்குகிறது என்பதை உணர்வோம்.

இறைவார்த்தையை வாழ்வாக்குவது

இரண்டாவதாக, நாம் செவிமடுத்த இறைவார்த்தைகளை வாழ்வாக்க வேண்டும். படகில் இருந்தவாறே இயேசு மக்கள் கூட்டத்திற்குப் போதித்த பிறகு அவர் சீமோனை நோக்கி, “ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்கிறார்.

இயேசுவினுடைய வார்த்தை புலனாகாத ஒரு சிந்தனையாகவோ அல்லது கடந்து செல்லும் உணர்ச்சியை மட்டும் தூண்டக்கூடியதாகவோ இருக்க முடியாது, மாறாக, அது நம் பார்வையை மாற்றி, நம் இதயங்களை கிறிஸ்துவினுடைய இதயத்தின் சாயலாக மாற்றும்படி கேட்கிறது.

அவர் முதன்முதலில் வாழ்ந்து, வாழக் கற்றுக் கொடுத்த அன்பை வாழ்வதற்கான ஆபத்தை எதிர்கொண்டு, இந்த உலகம் என்னும்  கடலில் நற்செய்தியின் வலைகளை துணிவுடன் வீசுவதற்கு அது நம்மை அழைக்கிறது. இயேசு, தம்முடைய வார்த்தையின் பற்றியெரியும் வலிமையுடன், இந்த உலகக் கடலில் இறங்கவும், தீய பழக்கங்கள், பயம், அற்பத்தனம் மற்றும் மிதமிஞ்சியவற்றின் தேங்கி நிற்கும் கரையிலிருந்து வெளியேறி, ஒரு புதிய வாழ்க்கையை வாழத் துணியவும் நம்மிடம் கேட்கிறார்.

நிச்சயமாக, இந்த அழைப்பை வேண்டாம் என்று சொல்வதற்கு எப்போதும் தடைகள் மற்றும் சாக்குகள் நம்மிடம் உள்ளன. இப்போது பேதுருவின் வாழ்வை மீண்டும் நோக்குவோம். சீமோன் மறுமொழியாக, “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும், உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்றார். அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள் என்பதைப் பார்க்கின்றோம்.

இந்தியாவின் கொல்கத்தா நகர் புனித தெரசாவின் நினைவை இன்று நாம் கொண்டாடுகிறோம். அவர் ஏழை எளியவர்களுக்காக அயராது அக்கறை கொண்டு, அமைதி மற்றும் உரையாடலை ஊக்குவிப்பவராக மாறினார். “நம்மிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லாதபோது, ​​அதையும் கொடுப்போம். நீங்கள் எதையும் அறுவடை செய்யாவிட்டாலும், விதைப்பதில் சோர்வடைய வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்று அவர் கூறுவதுண்டு.

உடன்பிறந்த உறவு குறித்து எப்போதும் துணிவுடன் கனவு காணுங்கள்! இறைவனின் வார்த்தையால் வழிநடத்தப்பட்டு, அன்பின் விதைகளை விதைக்கவும், நம்பிக்கையுடன் உரையாடலின் பாதையில் செல்லவும், உங்கள் குணாதிசயமான புன்னகையுடன் உங்கள் நன்மையையும் இரக்கத்தையும் தொடர்ந்து காட்டவும், ஒன்றிப்பையும் அமைதியையும் உருவாக்குபவர்களாக இருக்கவும் உங்களை நான் ஊக்குவிக்கிறேன்.  இதன் வழியாக உங்களைச் சுற்றி நம்பிக்கையின் நறுமணத்தைப் பரப்புவீர்கள். இறைவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 September 2024, 15:12